Skip to main content

பொருநை இலக்கியத் திருவிழா; ஆதித்தமிழர்களின் அற்புதங்கள்

 

Borunai Literary Festival

 

நவ. 26, 27 ஆம் தேதிகளில் நெல்லையில் பொருநை இலக்கியத் திருவிழா. அப்படிச் சொல்லிவிட்டு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட அத்தனை கண்காட்சிப் பொருட்களும் ஆதித்தமிழர்களின் கல்லறை முதல் கருவறை செல்கிற வரையிலான நிகழ்வுகளை அட்சரம் பிசகாமல் வெளிப்படுத்தியுள்ளது. அவைகளை நுணுக்கமாகப் பார்க்கிற பார்வையாளர்கள் மிரண்டு போய் நிற்கிறார்கள். அதிசயங்கள் அப்படி ஒரு நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்திருக்கிறது.

 

துவக்கவிழாவின் போது பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் போன்றோர் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்துவிட்டு, நதி நாகரிகம் தோன்றிய பொருநை நதியான தாமிரபரணித்தாயின் மடியிலிருந்து இலக்கியத் திருவிழாவை தொடங்குவது உண்மையிலேயெ மட்டற்ற மகிழ்ச்சி. 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இது போன்று இலக்கியத் திருவிழா நடந்ததில்லை என்றனர், வியப்பு மேலிட. விழாத் தொடக்கத்தின் போது காணொலி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை நாம் பொருநை நதியிலிருந்து தொடங்குவோம் என்றார்.

 

இலக்கியத் திருவிழாவின் இரண்டு நாட்களின் போது, பாளையின் நூற்றாண்டு மண்டபம், மேடை போலீஸ் ஸ்டேஷன், நேருஜி கலையரங்கம் உள்ளிட்ட 5 அரங்குகளிலும் மண்வாசனை, சங்கமம் மாணவ மாணவிகளின் போட்டிகள், எழுத்தாளர்களின் உரைகள். ஓலைச்சுவடிகள் மற்றும் வட்டெழுத்துக்காட்சி, ஓவியக் கண்காட்சி, ஆதிகாலத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு வாழ்வாதாரமாகத் திகழ்ந்த பழங்காலப் பாத்திரங்கள், கைவினைப் பொருட்கள், நெற்குதிர்கள், புகைப்படக் கண்காட்சி, தமிழர்கள் பயிரிட்ட விதவிதமான நெல்மணிகளின் காட்சி என்று வந்தவர்களை வியக்க வைத்தன. இவ்வாறு பல அரிய தகவல்கள் 20ம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு கடத்தப்பட்டன.

 

Borunai Literary Festival

 

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பண்டைக்காலத் தமிழர்களின் சரித்திரச்சுவடுகளான ஓலைச்சுவடிகள் மலைக்க வைத்தன. தங்களது காலப் பண்பாடுகள், கலை இலக்கியம், மருத்துவம் போன்ற பிறவகைகளை ஓலைச்சுவடிகள் மூலம் வம்சாவழியினருக்கு அரியவகை சொத்துக்களாய் கொண்டு வந்து சேர்த்தது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

 

இலக்கியம் பற்றிய ஓலைச்சுவடிகள், சித்த மருத்துவச் சுவடிகள், அபிஷேகப்பட்டியின் ஜாதகம் பற்றிய சுவடிகள், வெள்ளோலைச் சுவடிகளாலான எழுதுவதற்காக தயார் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள். இலக்கணக் கொத்து, வெண்சுவடி ஓலைச்சுவடியின் எழுத்துக்களை தற்போதைய காலத்திற்கேற்ப பேப்பரில் எழுதப்பட்ட எழுத்துச்சுவடிகள், கட்டபொம்மனின் வாழ்க்கை, கும்மிப்பாட்டுச் சுவடிகள், ஜோதிடச்சுவடிகள், திருப்புகழ் தொகுப்பு சுவடிகள், சித்திரபுத்திரன் கதைச்சுவடி, ஆதிவாசிகளின் புராணச்சுவடி. திருக்குறளின் அத்தனைக் குறள்களையும் முழுமையாகக் கொண்ட சுவடிகள், காவடிச்சிந்துகளைக் கொண்ட அண்ணாமலை கவிராயர் சுவடிகள், 1964ன் போது தனுஷ்கோடி அழிந்தது பற்றிய தொகுப்புகளைக் கொண்ட காலச்சுவடிகள், மாந்த்ரீகம் பற்றிய சுவடிகள், கழுகுமலை கொங்கராயக்குறிச்சியின் வட்டெழுத்துக்கள் என 200 வகையான ஓலைச்சுவடிககள் வகைப்படுத்தி காட்சியாக வைக்கப்பட்டிருந்ததை ஆர்வமுடன் பார்வையாளர்கள் பார்த்துப் படித்தனர்.

 

குறிப்பாக 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆவலாகச் சுவடிகளைப் படித்தனர் என்று நம்மிடம் தெரிவித்த இதன் அமைப்பாளரும் ஓலைச்சுவடிகளை அரும்பாடுபட்டு சேகரித்தவருமான சங்கரநாராயணன், அடிப்படையில் பள்ளி ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளரும் கூட.

 

Borunai Literary Festival

 

“மொத்த ஓலைச்சுவடிகளையும் மூன்று நான்கு மாவட்டங்களில் 20 வருடங்களாக அலைந்து திரிந்து சேகரித்தேன். அற்புதமான தகவல்களையும் தமிழர்களின் வாழ்வியலும் சுவடிகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஜோதிடம், ஜாதகம், இலக்கியம் போன்ற தமிழர்களின் இந்தச் சுவடிகள் தான் இன்றைய எதிர்காலக் கணிப்பாளர்களின் ஆதிமூலம். இதிலிருந்துதான் அவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தியுள்ளனர். கட்டபொம்மனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலானவைகளை கும்மிப்பாட்டு மூலம் வெளிப்படுத்தும் சுவடிகள். அந்தக் கால மன்னர்கள் மக்களை ஆட்சி செய்ய கொண்டுவரப்பட்ட வெண்கலச்சட்டம் போட்ட சுவடி. எமதர்மனின் கணக்காளரான சித்திரபுத்திரன் கதைபற்றிய சுவடிகள், மனிதர்களின் ஒவ்வொரு பாவச்செயல்களுக்கும் நரகத்தில் என்னென்ன தண்டனைகள் தரப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிற சுவடி. அந்தக் காலங்களிலேயே மாந்த்ரீகங்களால் மக்கள் மிரட்டப்பட்டதையும் குறிப்பிடுகிற சுவடி, 1964ன் போது நடிகர் ஜெமினி கணேசனும், நடிகை சாவித்திரியும் ராமேஸ்வரம் வந்தவர்கள், அன்றைய இரவு அருகிலுள்ள தனுஷ்கோடியைப் பார்க்கச் செல்கிற நோக்கத்திலிருந்தனர். அப்போது அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட அங்கு செல்லாமல் ராமேஸ்வரத்திலேயே தங்கிவிட்டனர். அன்றைய இரவு தான் தனுஷ்கோடி புயலால் கடல்கொண்டு அழிந்தது கண்டு அதிர்ந்து போனார்கள். அவர்கள் தப்பியது தனுஷ்கோடி அழிந்தது பற்றிய அத்தனையும் ஆவணமாக்கப்பட்ட சுவடி என்று பல்வேறு வகைச் சுவடிகளிருக்கின்றன” என்றார் விளக்கமாக. ஆதித்தமிழர்களின் பொக்கிஷமான ஓலைச்சுவடிகளைப் படித்துக் கொண்டிருந்த ராஜா என்ற வாலிபரோ, “அதிசயம், மிராக்கிள்” என்கிறார்.

 

Borunai Literary Festival

 

இது ஒரு பக்கமெனில், காட்சிப்படுத்தப்பட்ட ஓவியக் காட்சியோ பார்வையாளர்களின் புருவங்களை உயரவைத்தது. ஓவியத்தில் தூரிகையின் விரல்கள் அப்படி நடனமாடியிருந்தன. வ.உ.சி., பாரதியார் உள்ளிட்டோர் தேசியக்கொடியை ஏந்தி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீதியில் போராடுவது. பாடகி லதா மங்கேஷ்கர், எழுத்தாளர்களான சுந்தர ராமசாமி (1931), ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், பண்டையக்கால கரகாட்டம், ஆதித்தமிழ் குடும்பங்கள் பொங்கலிடும் காட்சி என்று வரையப்பட்டு இடம்பெற்ற அத்தனை உயர்தரமான ஓவியங்களும் பேசின. குறிப்பாக 90 வயது கடந்த மூதாட்டியின் முகபாவங்கள், நாடி, நரம்புகள், தோல் சுருக்கங்கள், காதில் அணிந்திருந்த தங்க பாம்படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது பார்வையாளர்களை அசத்தியது. தொடர்ந்து மற்றொரு அரங்கில் புகைப்படக் கண்காட்சி. தமிழர்களின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள், தெம்மாங்கு பாடிக் கொண்டே வயலில் நாற்று நடுவது, கூண்டுவண்டி கட்டிக் கொண்டு ஊர் வழியே செல்வது போன்ற அனைத்து செயல்பாடுகளையும் பிசிறின்றி புகைப்படமாக்கப்பட்டவைகள். இவைகளுக்கு மத்தியில் கந்தலாடைகளுடன் கழனிமேட்டில் மனைவி ஒருத்தி பரட்டைத் தலையுடனிருக்கும் தன் கணவனுக்குப் பேன் எடுத்துக்கொண்டிருக்கிற இயல்பான சூழலைப் புகைப்படமாக்கியது விழிகளை விரிய வைத்தன. இது அரிதிலும் அரிதான பகைப்படம். ‘இந்தப் புகைப்படம் ஒருவேளை அவார்டு கூட வாங்கியிருக்கலாம்’ என வியப்பாகச் சொன்னார் பார்வையாளர் ஒருவர்.

 

அடுத்த அரங்கில் இலக்கண இலக்கியங்கள் எழுத்துக்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற 21 தென்மாவட்ட எழுத்தாளர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதில் எழுத்தாளர் சோ.தர்மன், சாய்வு நாற்காலி நூலுக்கான விருது பெற்ற தோப்பில் முகம்மது மீரான், 1991ல் கோபல்லபுரத்து மக்கள் நூலுக்கான விருதுபெற்ற கி.ராஜநாராயணன், 1990ல் வேரில் பழுத்த பலா நூலிற்கான விருதுபெற்ற சமுத்திரம், 1987ல் முதலில் இரவு வரும் என்ற நூலுக்கான விருது பெற்ற ஆதவன், 1994ல் புதிய தரிசனங்கள் நூலுக்கான விருது பெற்ற பொன்னீலன் உள்ளிட்டோரின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பொருநை இலக்கியத் திருவிழாவின் சிகரம்.

 

தங்கச் சம்பா, கருடன் சம்பா, குழியடிச்சான், நவுரா, குள்ளக்கார், கொட்டாரம் சம்பா என்று தமிழர்கள் 28 வகையான பாரம்பரியமிக்க நெல்வகைகள் பயிரிடப்பட்டதும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது விழாவின் சிறப்பு அம்சம். இலக்கியத் திருவிழாவின் இரண்டாவது தினமான நிறைவு நாளின் மாலையில் தமிழர்களின் தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள், நாட்டியங்கள், பழங்காலங்களின் மிரட்டுகிற வகையில் நடத்தப்பட்ட தண்டயச்சூரனின் தாண்டவமும் கலைஞர்களால் நடத்தப்பட்டன.

 

Borunai Literary Festival

 

பொருநை இலக்கியத் திருவிழாவை நிறைவு செய்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “குறிஞ்சி முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று நிலங்களைப் பிரிப்பார்கள். இத்தனையும் ஒருங்கிணைந்து இருப்பது ஒன்றுபட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் என்பது நமக்குப் பெருமை. இந்தியாவின் வரலாறு தொடங்கப்பட வேண்டியது சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து அல்ல. இந்திய வரலாறு எழுதப்பட வேண்டியது பொருநை ஆற்றங்கரையிலிருந்து ஆதிச்சநல்லூரிலிருந்து கொற்கையிலிருந்து. இவைகள் நிதர்சனமான உண்மைகள்” என்றார் அழுத்தமான தொனியில்.

 

ஆய்வுகளின் அடிப்படையில் 3155 ஆண்டுகள் பழமையான மிகவும் தொன்மையான நாகரிகம் பொருநை நாகரிகம். கடல் கடந்தும் பேசப்படுகிற தமிழர் நாகரிகம்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !