கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜயதாரணி, 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காமல் போன பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியாவது கிடைக்கும் என நினைத்து இலவு காத்த கிளியாக இருந்தார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.
அதேபோல, தமிழக சட்டமன்ற குழுத் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால், விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார். பொதுவாக சிட்டிங் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவில் இணைந்தால் ஜெ.பி.நட்டாவை சந்திப்பது வழக்கம்.
அதேபோல் விஜயதாரணியும் ஜெ.பி.நட்டாவை சந்திப்பார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது புதிதாக காங்கிரஸ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகைக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எவ்வளவோ அணை கட்டிப் பார்த்தும் செல்வப் பெருந்தகைக்கு பிடிகொடுக்காமல் இருந்து வந்த விஜயதாரணி, இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. புலி வருது புலி வருது கதையாய், கடந்த ஒரு மாதகாலமாக அரசல்புரசலாக பேசப்பட்டு வந்த விஜயதாரணி கட்சித் தாவல் கதைக்கு தற்போது எண்டு கார்டு போடப்பட்டுள்ளது.
இதன்பிறகு விஜயதாரணி நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பா.ஜ.கவில் இணைந்துள்ளேன். பாஜக பாத யாத்திரையால் தமிழக பா.ஜ.கவில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையில் என்னை போன்ற பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மறுபுறம் பாஜகவின் தமிழக பொறுப்பாளரான அரவிந்த் மேனனை சந்தித்த விஜயதரணி, வரும் லோக்சபா தேர்தலில் சீட் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். அதில் நான் தோற்றுப் போனால் தன்னை ராஜ்யசபா எம்பியாக்க வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது, மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக எம்பி சீட் கொடுக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் எழுந்துள்ள நிலையில், மக்களுக்கு நல்ல பரிட்சயமான தலைவராக இருக்கும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு பாஜக வேறு திட்டங்களை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாஜகவை கன்னியாகுமரி பகுதியில் வளர்த்தவர் எனும் இமேஜ் தேசியத் தலைமைக்கு இருப்பதால், அவருக்கு கவர்னர் பதவி தேடிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் கவர்னராக பதவி வகித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், பஞ்சாப் கவர்னர் பதவியை பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இன்னொரு தரப்பினர், மாநிலத் தலைமையுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பொன்னாரை ஓரங்கட்ட நடக்கும் அரசியல்தான் இது என்றும் கமலாலயத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் இதற்கெல்லாம் முடிவு கிடைத்துவிடும்.