
"தமிழக அரசியல் எனும் விளையாட்டு மைதானத்தில் அ.இ.அ.தி.மு.க. ஒரு கால்பந்தாக மாறியுள்ளது, அதை பா.ஜ.க., தி.மு.க. இரண்டும் உதைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்' அ.தி.மு.க.வின் ர.ர.க்கள்.
இந்த விளையாட்டில் முதலில் சிக்குவது கொடநாடு கொலை வழக்கு. இதில் திடீரென்று ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஆறுகுட்டி எம்.எல்.ஏ. விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஏற்கனவே 3 முறை விசாரிக்கப்பட்ட ஆறுகுட்டி, நான்காவது முறையாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரிவினைக்குப் பிறகு அழைக்கப்பட்டார்.
ஆறுகுட்டியும் விசாரணை அதிகாரிகளை ஏமாற்றவில்லை. "கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான சதித்திட்டம் எடப்பாடி வீட்டில்தான் உருவானது. அதற்காக ஒரு மீட்டிங் நடத்தப்பட்டது. அந்த மீட்டிங்கில் சேலம் இளங்கோவன், எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசு, சஜீவன், கனகராஜ், அனுபவ் ரவி, நான் ஆகியோர் கலந்துகொண்டோம். கொடநாடு கொள்ளையை நடத்தும் பொறுப்பை கனகராஜ், அனுபவ் ரவி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். சஜீவனை அவர்களுக்கு பக்கபலமாக இருக்குமாறு எடப்பாடி சொன்னார். கொள்ளையடிக்கும்போது மின்சாரம், சி.சி.டி.வி., போலீஸ் ஆகியவை அங்கு இருக்காதபடி எடப்பாடி பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். அதன்பிறகு கனகராஜும், சஜீவனும் கேரளாவிலிருந்து குற்றவாளிகளைத் திரட்டினார்கள். அவர்கள் அனைவரையும் சேலம் இளங்கோவன் சந்தித்தார். குற்றவாளிகளுக்கு கொள்ளையடிக்கும் தினத்தில் செலவுக்காக மட்டும் கனகராஜிடம் லட்சக்கணக்கில் இளங்கோவன் பணம் கொடுத்தார் என ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை ஆறுகுட்டி கொடுத்தார்.

அப்படியே இந்தத் தகவல்களை ஓ.பி.எஸ்.ஸிடம் அவரது செய்தித்தொடர்பாளராக இருக்கும் கோவை செல்வராஜிடம் பாஸ் செய்தார். எனக்குத் தெரிந்த உண்மைகளை நான் போலீசாரிடம் சொல்லிவிட்டேன்'' என ஆறுகுட்டி சொன்னது ஓ.பி.எஸ். வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஓ.பி.எஸ். தரப்பு கொடநாடு வழக்கை விசாரிக்கும் டி.ஐ.ஜி. முத்துசாமியையும் மாநில உளவுப் பிரிவு தலைவர் டேவிட்சன் தேவஆசிர்வாதத்தையும் தொடர்புகொண்டு "ஆறுகுட்டியின் சாட்சியத்தை வைத்து சேலம் இளங்கோவனையும், எடப்பாடியையும் கொடநாடு வழக்கில் கைது செய்யுங்கள்' எனக் கேட்டுக்கொண்டது.
கொடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு எதிராக வரும் அனைத்து சாட்சியங்களையும் காவல்துறை சேகரித்து வைத்துள்ளது. எடப்பாடி மீது கைது நடவடிக்கை அல்லது விசாரணை என எதுவாக இருந்தாலும் முதல்வரின் உத்தரவைப் பொறுத்தே அமையும் என்ற விவரம் போலீஸ் தரப்பிலிருந்து ஓ.பி.எஸ். முகாமுக்கு சென்றதும், எடப்பாடியின் மகன் மிதுன், தி.மு.க. தரப்போடு கொடநாடு விஷயத்தில் டீலிங் போட்டிருக்கிறார் என அவர்கள் பேச ஆரம்பித்தனர்.
இந்நிலையில்.. எடப்பாடி தனது வீட்டில் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தை நடத்தினார். அதில் தற்பொழுது பத்திரப்பதிவுத் துறையின் உயரதிகாரியாக இருக்கக்கூடிய சங்கர் மற்றும் தற்போது மதுரையில் அசிஸ்டெண்ட் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருக்கக் கூடிய இன்னொருவரும் கலந்துகொண்டனர். அந்த தற்காலிக அலுவலகத்தில் கொடநாட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட டாகுமெண்டுகள் நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகியோர் பெயருக்கு மாற்றப்பட்டது என பத்திரப்பதிவுத் துறையிலிருந்து கொடநாடு வழக்கை விசாரிக்கும் போலீசுக்கு தகவல்கள் எட்டியிருக்கிறது.

அதேசமயம், கொரோனா பாதிப்பு என எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ்.ஸை ‘அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்’ என குறிப்பிட்டு, விரைவில் நலம்பெற வேண்டும் என டுவிட்டரில் பதிவு செய்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதேபோல் அ.தி.மு.க. தலைமைக் கழகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அளித்த விளக்கத்தில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரு தரப்பினரும் வன்முறையில் இறங்கினார்கள். இ.பி.எஸ். தலைமைக் கழகத்தைச் சுற்றி தனது மாவட்டச் செயலாளர்களை நிறுத்திவைத்தார். ஓ.பி.எஸ். கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வருவதை எங்களால் தடுக்க முடியாது என தெரிவித்திருக்கிறது. இந்த அலுவலகம் தொடர்பாக எந்த உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்கு இல்லை. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதும் நாங்கள் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உட்படுத்தி சீல் வைத்தோம், என நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார்கள்.

அதேநேரம், தேர்தல் கமிஷனில் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் மாறி, மாறி கொடுத்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஓ.பி.எஸ். பக்கம் ஆட்களே இல்லை எனச் சொன்ன எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலரை கட்சியை விட்டு நீக்கிக்கொண்டிருக்கிறார்.
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் சொன்னதன் அடிப்படையில் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் தனது ஐடி விங்க் நிர்வாகி சதீஷ் மற்றும் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ரமணா ஆகியோர் சொன்னதன் அடிப்படையில் பலரையும் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார் எடப்பாடி. ஜே.சி.டி. பிரபாகரனின் மகளும், மகனும் மாநில நிர்வாகிகளாக இருந்தார்கள், அவர்களையும் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார் இ.பி.எஸ்.
அதேபோல் ஓ.பி.எஸ்., எடப்பாடி அணியில் இருக்கக்கூடிய 42 மாவட்டச் செயலாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கியிருக்கிறார். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் இ.பி.எஸ். அணிக்கு எதிராக மா.செ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என ஒரு பெரிய நிர்வாகிகள் பட்டியலை ஓ.பி.எஸ். தரப்பு தயார் செய்துவருகிறது. இனி ஒவ்வொரு ஏரியாவிலும் ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ். அணி என அ.தி.மு.க. இரண்டாக செயல்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதற்கிடையே "இ.பி.எஸ். அணியைச் சார்ந்த ஆர்.பி.உதயகுமார், சினிமா ஃபைனான்சியர் ஒருவரின் பினாமி, அவர் பல கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருக்கிறார்' என ஓ.பி.எஸ். தரப்பு குற்றம்சாட்ட, "நான் ஓ.பி.எஸ். தரப்பின் வண்டவாளங்களை எல்லாம் வெளியில் சொல்வேன்' என ஆர்.பி.உதயகுமார் மிரட்டியுள்ளார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் "சசிகலா, ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக முதலில் அணுகிய நபர் ஆர்.பி.உதயகுமார்தான். அவர் செட்டாகவில்லை என்பதால் தான் வைத்திலிங்கத்தை அணுகினோம்' என ஓ.பி.எஸ். அணி உருவானதன் ரகசியத்தைச் சொன்னார்கள்.
இந்நிலையில், பா.ஜ.க. ஒரு தெளிவான கட்டளையை இ.பி.எஸ்.ஸுக்கும், ஓ.பி.எஸ்.ஸுக்கும் பிறப்பித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தென்சென்னை, சிவகங்கை, திருப்பூர், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், திருச்சி ஆகிய தொகுதிகளில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

ஈரோட்டில் மத்திய அமைச்சர் முருகன், தென்சென்னை அல்லது கோவையில் அண்ணாமலை, ராமநாதபுரத்தில் இப்ராகிம், திருப்பூரில் கனகசபாபதி என வேட்பாளர்களையும் பா.ஜ.க. தயார் செய்துவருகிறது.
"நாங்கள் 40 தொகுதிகளில் வேலை செய்யமாட்டோம். இந்த 8 தொகுதிகளில் பூத் கமிட்டிகள் அமைத்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மத்திய அமைச்சருக்கு பொறுப்பு கொடுத்து வேலை செய்யப்போகிறோம். அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணிகளும் எங்களை ஆதரிக்க வேண்டும். இதில் எந்தக் குழப்பமும் வரக்கூடாது' என உத்தரவிட்டுள்ளது.
"இதில் ஏதாவது பிரச்சினை வருமென்றால் இரட்டை இலை முடக்கப்படும், வருமான வரித்துறை உட்பட அனைத்து ரெய்டுகளும் அ.தி.மு.க. மேல் பாயும்' என எச்சரிக்கையும் அளித்துள்ளது.
இப்படி "தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் அலை பாயும் அ.தி.மு.க.வில் அடுத்தகட்டமாக ஓ.பி.எஸ். பொதுக்குழு நடத்த திட்டமிட்டிருக்கிறார். இந்தச் சண்டை பாராளுமன்றத் தேர்தல்வரை நீடிக்கும்' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.