மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யோடு, கடந்த 40 ஆண்டு காலமாக திரையுலகில் பயணித்து வந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது முதல் பாடலைப் பாடியவர் எஸ்.பி.பி.தான். அதேபோல் வைரமுத்து எழுதிய கொரோனா விழிப்புணர்வுப் பாடலைத்தான், எஸ்.பி.பி., கடைசி கடைசியாய் தானே இசையமைத்துப் பாடிவிட்டுப் போயிருக்கிறார். எஸ்.பி.பி.க்கு நெருக்கமான நண்பராகவும் இருந்த வைரமுத்து நம்மிடம் எஸ்.பி.பி., குறித்து பகிர்ந்த நினைவலைகள்...
"என் பதினான்கு வயதிலேயே எஸ்.பி.பி.யின் பாடலை அவர் ரசிகனாக நான் கேட்டேன். அடுத்த பதின்மூன்று வருடத்தில் என் பாடலைப் பாடுமிடத்தில் அவரைச் சந்தித்துவிட்டேன். அப்படியொரு திகைப்பான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. டி.எம்.சௌந்தரராஜனைக் கழித்துவிட்டு எந்த ஆண்குரலையும் ரசிக்க முடியாதவனாக இருந்தவன் நான். டி.எம்.எஸ், பி.சுசீலாவுக்கு நிகராக வேறெந்தக் குரல்களையும் வைத்துப் பார்க்கமுடியாத மன நிலையில் நானும் தமிழ்ச் சமூகமும் இருந்த காலகட்டம் அது. அப்போது எங்கள் முன்முடிவுகளைத் தாண்டி அன்பொழுகும் குரலாக எஸ்.பி.பி.யின் குரல் என்னை ஈர்க்கத் தொடங்கியது. 'சாந்தி நிலையம்' படத்தில் இடம்பெற்ற 'இயற்கை என்னும் இளைய கன்னி' பாடலைக் கேட்டபோது அந்தக் குரலில் இருந்த இனிமை, புதுமை, இளமை என்ற மூன்றும் பரவசத்தால் என்னைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்தன. அதே சமயத்தில் 'சபதம்' படத்தில் இடம்பெற்ற "தொடுவதென்ன தென்றலோ... மலர்களோ...' என்ற பாடலும், 'ஏன்' படத்தில் இடம்பெற்ற "இறைவன் என்றொரு கவிஞன்; அவன் படைத்த கவிதை மனிதன்' என்ற பாடலும் எஸ்.பி.பி.யை என் மனதின் நெருக்கத்துக்குக் கொண்டுவந்தன. முன் உதாரணம் இல்லாத குரலாக அவர் குரல் இருந்தது. காதலிக்கத் துடிக்கும் இளைஞனுக்கு வழக்காடுகிற குரல் அது. காதலுக்காக ஒரு பாடகன் வழக்காடுவதை அவர் குரலில்தான் பார்த்தேன். அப்படித்தான் எஸ்.பி.யிடம் நான் வயமிழந்தேன்.
1971 ஆம் ஆண்டு நான் பச்சையப்பன் கல்லூரியில் பி.யு.சி. படித்துக் கொண்டிருந்த நேரம். எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் அத்தை, “எங்கள் கல்லூரியில் எஸ்.பி.பி.யின் கச்சேரி நடக்குது; வர்ரியா?" என்றார். என் கனவுப் பாடகனைப் பார்க்க வரமாட்டேன் என்றா சொல்வேன். அப்போது அவர் பாடிய 'பொட்டு வைத்த முகமோ' பாடல், பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அதனால் கூட்டமான கூட்டம். அந்த மேடையில்தான் அவர் உருவத்தை முதன்முதலாக நேரில் பார்த்தேன்.
எஸ்.பி.பிக்கும் எனக்குமான தொழில் உறவில் காலம் ஒரு கனத்த ஒற்றுமையை விட்டுச் சென்றி ருக்கிறது. கொரோனா குறித்து இருபாடல்கள் கேட்டார். எழுதி மின்னஞ்சலில் அனுப்பினேன். இரண்டுக்கும் அவரே இசையமைத்துப் பாடினார்; யூ டியூபில் பதிவேற்றினார்; பரவலான பாராட் டைப் பெற்றார். அதுதான் அவரது கடைசிப் பாடல். என் முதல் பாடலைப் பாடியவர் அவர்; அவரது கடைசிப் பாடலை எழுதியவன் நான்.
எஸ்.பி.பி.யின் மரணம், கலையுலகத்திற்கு மட்டுமல்ல சிறு கிராமம் வரை சோகத்தைக் கொண்டு சென்றிருக்கிறது. ஒவ்வொரு வீட்டி லும் பெரும் வேதனையும் வலியும் நுழைந்திருக்கிறது. இது பாட்டு மரணம் மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டு மரணமும் கூட. அதனால் தான் இந்த சகாப்தத்தின் கடைசிப் பெரும் பாடகர் எஸ்.பி.பி. மறைந்துவிட்டார் என்றேன். பாடுதல், இசையமைத்தல், நடிப்பு, பின் னணி பேசுதல், பலமொழி அறிவு, பண்பாடு, கனிவு என இவ்வளவு கலவையோடு ஒரு கலைஞன் பிறப்பது அரிதிலும் அரிது."