கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் வசித்து வருபவர்கள் சின்னப்பிள்ளை- திலகவதி தம்பதியினர். இவர்களின் மகள் சரோஜினி(21). சின்னப்பிள்ளை கோயில் நிகழ்ச்சிகள், திருமணங்கள் மற்றும் கச்சேரிகளில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞராவார்.
இவர் தனது பெண் பிள்ளையான சரோஜினிக்கு பாரம்பரிய கலையான தவில் இசை வடிவத்தை கற்று தந்துள்ளார். பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், பெண்ணால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று பறை சாற்றவும் இந்த இசை வடிவத்தை பயிற்றுவித்து, இசையில் தனது மகளை சாதிக்கவும் வைத்துள்ளார்.
சரோஜினி தனது ஜந்து வயது முதலே தந்தை செல்லும் நிகழ்ச்சிகளுக்கு சென்று நாதஸ்வரம் மற்றும் தவில் வாசிப்பு முறைகளை கற்றுக் கொண்டு வந்தார். தந்தையின் ஊக்கத்தாலும், தனது தீவிர முயற்சியாலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கால கட்டத்திலேயே தவிலில் உள்ள தாளங்கள், கோர்வைகள், சொல்கள் உள்ளிட்டவைகளை முழுவதுமாக கற்று தேர்ந்தார். தனது மகளின் ஆசையை நிறைவேற்றும் தந்தையாக செயல்பட்ட சின்னப்பிள்ளை, சரோஜினி ஆறாம் வகுப்பு படிக்கின்ற போது புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் தவில் இசை அரங்கேற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பெண்ணாகப் பிறந்து, தந்தையின் ஊக்கத்தால், சிறப்பான முறையில் தவில் கலையை கற்றுக்கொண்டு தமிழகத்திலேயே முதல் தவில் அடிக்கும் பெண்ணாக கை தேர்ந்தார். பள்ளிப் படிப்பு முடித்தபின், கல்லூரியில் பொறியியல் படிப்பைத் தொடர்ந்து கொண்டே சரோஜினி தனக்கு பிடித்த தவில் கலையில் கலைஞராகவும் வலம் வந்தார். பொறியியல் படிப்பை நல்ல முறையில் முடித்தவர் தவில் கலை மீது கொண்ட ஆர்வத்தினால், தொடர்ச்சியாக தனது பணியை சிறப்பாக செய்து கொண்டு வந்தார்.
சிறு வயது முதல் 15 ஆண்டுகளாக தனது தாளத்தின் வாயிலாக இறைவனை மகிழ்ச்சி அடைய வைப்பதிலும், பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு பெற்றதாலும் தனக்கென்று ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளார் சரோஜினி. தமிழகத்தில் முதன்முதலாக பெண் ஒருவர் தவில் வாசிக்கும் விதத்தினை அறிந்து கொண்டு, பல்வேறு பெண்கள் தற்போது தவில் கலையை நோக்கி செல்வதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வரும் சரோஜினி திறமையை மென்மேலும் வளர்த்துக்கொண்டார்.
பெண்களால் சாதிக்க முடியும் என்று தனது திறமை மூலம் நிரூபித்துக் காட்டிய சரோஜினியின் தைரியத்தையும், திறமையையும் பாரட்டி 'தவில் பேரொளி', 'தவில் சுடரொளி' உள்ளிட்ட பட்டங்கள் கிடைத்தன. மேலும் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி 50- க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்துள்ளார். திருமணமான பின்பும் குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட சரோஜினி. கலைப் பயணத்திற்கு, அவரது கணவர் மணிகண்டன் எவ்வித தடைகளும் விதிக்காததால், தொடர்ச்சியாக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
"உறவினர்கள், நண்பர்கள் பலபேர் பெண்ணாக இருந்துகொண்டு தவில் வாசிக்கிறாயே... என கேலி பேசினர். படித்த படிப்புக்கு அதிக சம்பளதில் நல்ல வேலை கிடைக்குமே...' என்றனர். ஆனால் தவில் கலை மீது எனக்கிருந்த ஆர்வத்தினால தொடர்ச்சியாக தொய்வின்றி கற்றுக் கொண்டேன். பல்வேறு துறைகளில் சாதிக்கத் துடிக்கும், ஒவ்வொரு பெண்களும், தங்களின் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து, தடைகளைத் தாண்டி முன்னேறி செல்ல வேண்டும். எனது கலைப்பயணத்துக்கு என் தந்தை, கணவர் மணிகண்டன் என இரு ஆண்கள் ஊக்கமாகவும், உறுதுணையாகவும் விளங்குகின்றனர். பெண்கள் தங்களது சுதந்திரத்தை நல்லவைகளுக்காக கையில் எடுத்து, நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். அதுவே தனது மகளிர் தின வாழ்த்து" என்கிறார் சரோஜினி.
விருத்தாசலம் பகுதியில் தனது திறமையின் மூலம் சிறு வயது முதல் தவில் கலையினை சிறப்பாக செய்துவரும் சரோஜினி தற்போது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தற்காலிக தவில் கலைஞராக இறைவனுக்கு நற்பணி செய்துவருகிறார். இவருக்கு அறநிலையத்துறை சார்பில் கோயிலில் நிரந்தமாக தவில் இசைக்கும் பணியினை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என இசை ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தவில் கலைஞராக திகழ்ந்து சாதனைகள் படைக்கும் சரோஜினி மென்மேலும் வளர நாமும் வாழ்த்துவோம்!