இன்றைய காலகட்டத்தில் இந்து சனாதனத்தை நிறுவ சனநாயகத்தை படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தனிப்பெரும்பான்மை செருக்கு அவர்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் அரணாகவும், அவர்களின் நோக்கத்தை சீர்குலைக்கும் தத்துவமாகவும் இருப்பது பெரியார்தான். பெரியார் இருந்த காலத்திலேயே அவரை நேரடியாக தாக்கினர், அவரின் கருத்தை மூர்க்கமாக எதிர்த்தனர், வசை பாடினர். மறைந்த பிறகும் அது தொடர்ந்தது. பெரியார் என்ற தத்துவம் மட்டுமல்ல, பெரியார் என்ற பெயரே இருக்கக்கூடாது என பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற வெளிப்படையான அமைப்புகளும், நபர்களும் கூடவே நடுநிலை போர்வையிலிருக்கும் வலதுசாரி ஆதரவாளர்களும் நினைக்கின்றனர். அதற்கு தீவிரமாக முயற்சியும் செய்கிறார்கள்.
பெரியாரை வெளிப்படையாக எதிர்க்கும் அனைவரும் அவரை ஈ.வெ.ராமசாமி என்று அழைப்பர். அவர்மீது அவர்கள் “ஈ.வெ.ராமசாமி திராவிடர் கழகத்தை உருவாக்கியது, கடவுள் மறுப்பை பேசியது எல்லாம் அவரின் சுயநலத்திற்காகத்தான்” என்று மேம்போக்காக குற்றச்சாட்டை கூறுவர். ஒரு சிலர் அற்ப எதுகை மோனைக்காக “அவர் ராமசாமி இல்லை ஆசாமி” எனக்குறிப்பிடுவர். கருத்தை கருத்தால் எதிர்ப்பதுதான் பெரியாரின் வழக்கம் எதிர்ப்பாளர்களின் வாதத்தையே இந்த கட்டுரைக்கு தலைப்பாய் வைத்து அது உண்மைதானா என்பதை ஆராய்வோம்...
அவரின் சுயநல செய்கைகளின் பட்டியல்கள் இதோ...
பெரியார் தனது சொந்த விருப்பு வெறுப்பிற்காகவே பிராமணர்களை எதிர்த்தார், அதற்கு தன் இயக்கத்தையும் கூட்டு சேர்த்துக்கொண்டார்!!!

அவர் பிராமணியத்தை முற்றிலுமாக எதிர்த்தார். ஜனவரி 1, 1962ல் பெரியார், விடுதலையில் ‘பார்ப்பன தோழர்களுக்கு’ என்ற ஒரு அறிக்கையை எழுதுகிறார், அதில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். “பார்ப்பனத் தோழர்களே, நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனர்களிடம் நான் அன்பாகவும், மதிப்பிற்குரியவனாகவும், நண்பனாகவும்கூட இருந்துவருகிறேன். சிலர் என்னிடத்தில் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாய துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலும் எனக்கு வெறுப்பு இருக்கிறது.
பார்ப்பனர்களுடைய ஆதரவு, ஒத்துழைப்பு இருந்தால் வேகத்தில் நலம் பெறலாம் என்கிற எண்ணத்தில் இவைகளைச் சொல்கிறேனே தவிர வேறு சூழ்ச்சியோ, தந்திரமோ, மிரட்டுதலோ இல்லை, கண்டிப்பாக இல்லை. நான் இவைகளை உபயோகப்படுத்துவதில் வெட்கப்படுகிறவன்” இதன்மூலம் அவர் தாழ்த்தப்பட்டவர்களாகிய, சூத்திரர்களாகிய எங்களையும் இந்த சமூதாயத்தில் வாழவிடுங்கள் என்பதையே கூறுகிறார். அதற்காகவே அவர் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.
பதவி குறித்த சுயநலத்தில் இருந்தாரா?

பெரியார் காங்கிரஸில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டபோது, அவரிடம் இருந்த பதவிகள் 29 (ஈரோடு நகரசபை தலைவர் உட்பட). அவையனைத்தையும் ஒரே நாளில் உதறிவிட்டு வந்தார். அதற்குபின்னும் அவருக்கு பதவி ஆசை இல்லை. இந்திய வைசிராய் பதவி ஒருமுறையல்ல, இருமுறை தன்னைத்தேடி வந்தபொழுதிலும் அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர் தனக்கு இணையாக அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், அன்பழகன், மணியம்மை, வீரமணி என பல தலைவர்களை உருவாக்கினார்.
பாலினம் சார்ந்த சுயநலம் இருந்ததா?

ஒரு பார்ப்பனர் தனது சாதியின் பெயரால் ஒரு செல்வந்தரை அவமானப்படுத்தினால், நான் செல்வந்தர் பக்கம் இருப்பேன். அதே செல்வந்தர் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளியை துன்பப்படுத்தினால், நான் தொழிலாளி பக்கம் இருப்பேன். அதே தொழிலாளி தனது மனைவியைக் கொடுமைப்படுத்தினால், நான் அந்த பெண்ணின் பக்கம் இருப்பேன். அடிமைத்தனம் ஒழிய வேண்டுமென்பதே என் குறிக்கோளே தவிர யார் பக்கம் இருப்பது என்பது அல்ல என்பதை அவரே தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் விதவை மறுமணம், குழந்தை திருமணத் தடை, பெண்களுக்கு கல்வி, தமது துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஒத்துவராத திருமணத்தை முறித்துக் கொள்ளும் உரிமை போன்று, பெண் விடுதலைக்காக பல திட்டங்களையும், தீர்வுகளையும் வழங்கியவர் அவரே, பெண் சார்ந்த நலத்திட்டங்களுக்கு தொடக்க புள்ளியும் அவரே ஆக ஆண் என்ற சுயநலமும் அவரிடம் இல்லை. அதனால்தான் காலம் கடந்து நிற்கும் ‘பெரியார்’ என்ற பெயரை அவருக்கு 1938ம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம், மீனாம்பாள், பண்டித நாராயணி, வா. பா தாமரைக் கண்ணி, பா. நீலாம்பிகை, மருத்துவர் தருமாம்பாள் ஆகியோர் தலைமையில் நடந்த தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில் பெண்கள் மாநாட்டில் அளித்தனர். அப்போது நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது.”
சொத்துகளின்மீது சுயநலத்துடன் இருந்தாரா?

கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின்போது தன் தென்னந்தோப்பில் இளநீரும், தேங்காயுமாயிருந்த 1000 தென்னை மரங்களை வெட்டினார். ஒத்துழையாமை இயக்கம் நடந்துகொண்டிருந்தபோது, அதில் தீவிரமாக இருந்தார். மேலும் அந்த சமயத்தில் நீதிமன்ற எதிர்ப்பை, காங்கிரஸ் வழியுறுத்தியது. அப்போது பெரியார் தனக்கு வரவேண்டிய கடன்தொகை 78 ஆயிரத்தை வேண்டாமென மறுத்துவிட்டார். தனது நண்பரும், வழக்கறிஞருமான விஜயராகவாச்சாரி தான் மேடோவர் (பற்று) செய்து தருகிறேன் எனக்கூறியபோது உங்களிடம் இருந்தால் என்ன, என்னிடம் இருந்தால் என்ன, கட்சி நிதியில் இருந்தால் என்ன எல்லாம் ஒன்றுதான் எனக்கூறி அதைப்பெற மறுத்துவிட்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் தனது சொந்த பணம் ஒரு இலட்சத்தை செலவழித்து குழந்தைகள் பிரிவை உருவாக்கினார், அதேபோல் ஈரோடு அரசு மருத்துவமனையிலும் செயல்படுத்தினார். திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இருக்கும் இடமும் அவருடைய சொந்த நிலமே. இதுமட்டுமல்ல, பெரியார் தனது சொத்துகளை இயக்கத்திற்கு எழுதி வைத்தது, விடுதலை நட்டத்தில் நடந்தது, நலத்திட்டங்கள் போன்றவையே கூறும் அவரின் சொத்து குறித்த சுயநலத்தை...
உடல்நலத்தில் சுயநலத்துடன் இருந்தாரா?

தனது உடல்நலம் குறித்து அவர் சுயநலத்துடன் இருந்தாரா என்றால் அதற்கும் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. ஏனென்றால் ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார். அதுமட்டுமல்ல, உலகம் முழுவதும் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயண நாட்கள் மொத்தம் 8600 அதாவது 23 ஆண்டு 6 மாதம் 25 நாட்கள். கிட்டத்தட்ட பதின்மூன்று இலட்சத்து பனிரெண்டாயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளார். அந்த சுற்றுப் பயணத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை 10,700. சுற்றுப்பயணத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவு மட்டும் கிட்டத்தட்ட 21,400 மணிநேரங்கள் அதாவது அவரின் சொற்பொழிவை தொடர்ந்து இரவு பகலாக ஒலிபரப்பினால் மொத்தம் 2 வருடம் 5 மாதம் 11 நாட்கள் தொடர்ந்து ஓடும்.
பெரியார் ஒரு நிகழ்ச்சியை ஒத்துக்கொண்டால் அதில் கட்டாயம் கலந்துகொள்ள விரும்புவார். இயன்றவரை அதற்கான முயற்சிகளை செய்வார். ஹெர்னியாவால் உப்பிய வயிற்றையும், மூத்திர சட்டியையும், கடப்பாரை குத்தியதுபோல் வலிக்கும் வலியையும் தாங்கிக்கொண்டு அவர் செய்த சுற்றுப்பயணங்கள் ஏராளம். 30.06.1943, தனது 64 வது வயதில் பெரியார், வயிற்றுவலி, கால் வீக்கம், மயக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டார். கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தது. கிட்டதட்ட 70 கிலோவாக இருந்த அவர், 65 கிலோவாக குறைந்தார். அந்த ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 16 கிலோ அவர் குறைந்தார். மருத்துவர் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கக் கூறினார். இருந்தும் அவர் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். அவருக்கு வயதாக, வயதாகத்தான் அதிக சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதி சார்ந்த சுயநலம் கொண்டாரா பெரியார்?

சாதியே இருக்கக்கூடாது எனக்கூறிய பெரியார் மீது சிலர் வைக்கும் அவதூறு அவர் சுயசாதியைக் காப்பாற்ற நினைத்தவர் என்பது. ஒருமுறை ஒரு கூட்டத்தில் பெரியார் பேசிக்கொண்டிருந்தபோது, பிறர் தூண்டுதலால் எழுந்த ஒருவர் இவ்வளவு பேசுகிறீர்களே எங்கள் வீட்டில் வந்து சாப்பிடுவீர்களா எனக்கேட்டார். அதற்கு பெரியாரும் சரி எனக் கூறிவிட்டார். உடனே அனைவரும் அழைத்தனர். அனைவருக்கும் சம்மதம் தெரிவித்த பெரியார், உங்களின் பொருளாதார நிலையை மட்டுமே கருத்தில்கொண்டு சொல்கிறேன். சாப்பிடும்போது நான் மட்டும் வரமுடியாது என்னுடன் சிலர் வருவர். ஆதலால் நானே அரிசி, பருப்பு ஆகியவற்றிற்கு பணம் தந்து விடுகின்றேன். நீங்கள் எனக்கு சமைத்து தாருங்கள் எனக்கூறினார். இது அங்கிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. பிறகு ஒருவரின் வீட்டில் சாப்பிட அழைத்தனர். அந்த வீடு ரோட்டிலிருந்து பள்ளித்தில் இறங்கி ஒரு சந்து வழியாக உள்ளே போகும். அங்கு ஒரு மாட்டுக் கொட்டகை இருந்தது. வீட்டில் சமைத்தபடியாலும், இடம் இல்லாதபடியாலும் மாட்டுக்கொட்டகையில், விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் சுத்தமாகவும், வைக்கோல் எல்லாம் போடப்பட்டிருந்தாலும் கூட நீண்ட நாட்கள் சாணம் இருந்தபடியால் அந்த இடத்தில் சாணத்தின் துர்நாற்றம் வீசியது, மேலும் அந்த இடம் சொத சொதவென இருந்தது.
பெரியாருடன் வந்தவர்கள் முகம் சுழித்தனர், மணியம்மையார் பெரியாருக்கு தொண்டு செய்வதற்காக இணைந்திருந்த சமயம் அது. அந்த துர்நாற்றத்தால் அவரால் சாப்பிட முடியவில்லை. முகம் ஒருவாறு சென்றது. சாப்பாட்டை இலைக்கு அடியில் போட்டுக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பெரியார், வீட்டுக்கார அம்மாவை குழம்பு எடுத்துவர சொன்னார். அவர் உள்ளே போனவுடன் மணியம்மையார் பக்கம் திரும்பிய பெரியார், ஓங்கி ஒரு அடி கொடுத்தார். அதன்பின் மணியம்மை மட்டுமல்ல, உடன் இருந்த அனைவரும் கடகடவென சாப்பிட்டனர்.
இதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகளை முதன்முதலில் வெளிக்கொண்டுவந்தவர் பெரியார்தான். உயர் சாதி என்று கூறப்படுபவர்களின் தொழிலை ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் தொழிலை பிறருக்கும் கொடுக்கவேண்டும் என்று முதலில் கூறியவர் பெரியார்தான். ஆதி திராவிடன், திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை, ஆதி திராவிடன் பார்த்த எந்த வேலை கெட்டுவிட்டது என கேட்டதும் பெரியார்தான். உயர்ந்த சாதி என்று எவன் திமிரோடு உங்கள் முன் வருகிறானோ அவனைக் குறுக்கே வரும் பாம்பைப்போலக் கருதித் துரத்தி அடிக்கவேண்டும், அதுதான் ஜாதி ஒழிப்பிற்கு சரியான மருந்து என்று கூறியவரும் பெரியார்தான், என்னை சூத்திரன் என்று சொல்வதைவிட பஞ்சமன் என்று சொல்வதையே பெருமையாக நினைக்கின்றேன் என்று கூறியவரும் பெரியார்தான்.
தனது சுயநலத்திற்காக மணியம்மையை திருமணம் செய்துகொண்டாரா பெரியார்?

பெரியாரை எதிர்ப்பவர்கள் தங்களின் பிரம்மாஸ்திரம் என நினைத்துக்கொள்ளும் அம்சம்தான் இந்த பிரச்சனை. நாகம்மையார் மறையும்போது பெரியாருக்கு வயது 54. அப்போதிருந்து அவர் தனியாகவேதான் இருந்தார். அப்போது அனைவரும் வற்புறுத்தியும் அவர் அந்த திருமணத்திற்கு இசைவு தெரிவிக்கவில்லை. நாகம்மையார் மறைந்தபோது பெரியார் எழுதிய இரங்கல் அஞ்சலி இதுதான்... "எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும், துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிகம் சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கிற உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது. இனி சுதந்திரமாக பொதுத்தொண்டில் ஈடுபடுவேன்".
இப்படி இருக்கும் ஒருவர் எதற்காக தனது 71வது வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும், அதற்கான அவசியம் என்ன கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தனிமையில் இருந்தவருக்கு அப்படி என்ன அவசியம் ஏற்படப்போகிறது என்பதை யோசித்துப்பார்க்க வேண்டாமா. பெரியார் மணியம்மை திருமணம் என்ற ஒன்றை மட்டும் பார்க்கக்கூடாது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து கவனிக்கவேண்டும். இவைகள் அனைத்தும் அடுத்தடுத்த நிகழ்வுகள். பெரியார் தனது சொத்துக்களை கழகத்தின் பெயரில் மாற்றுகிறார். சிறிது காலத்திற்குபிறகு அதை நிர்வகிக்க ஒருவரை நியமிக்கிறார். பெரியார் - மணியம்மை திருமணம் நடந்தது. ஜூலை 9 1948 அதாவது இந்தியா தனக்கென ஒரு அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு... அப்போதிருந்தது இந்து சட்டம்தான், இந்து திருமண சட்டத்தின்படி, ஒரு பெண் யாரையும் தத்தெடுக்கவோ, யாரிடமும் தத்துப்போகவோ உரிமையில்லை. சட்டப்படி, நடக்க பெரியாருக்கு வேறுவழியும் இல்லை அதனாலேயே இந்தத் திருமணம் நடந்தது. இதற்கு பிற காரணங்களை கற்பிக்க நினைப்பவர்களின் எண்ணம்தான் தவறே தவிர வேறொன்றுமில்லை.

பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டபின் மான, அவமானங்களை பார்க்கக்கூடாது அப்படி பார்ப்பவர்கள் பொதுவாழ்க்கைக்கே வரக்கூடாது எனக்கூறினார்”, அதன்படியே தான் அவமானபட்டபோதிலும் அவர், மக்களுக்கு மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்பதை உணர்த்தினார். அவரின் அடுத்த கூற்று “அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல பெயர் எடுக்க நினைப்பவன் பொதுவாழ்க்கைக்கு லாயக்கற்றவன்” என அவரே கூறியுள்ளார்.
பெரியார் இருந்த காலத்திலேயே அவர் கருத்துக்கு எதிராக இருந்தவர்கள் அவரைத் தூற்றவும், தாக்கவும் செய்தார்கள். அதன் பின்னும் அது தொடர்ந்தது. அண்மையில் பெரியார் ஆதரவாளர்களும், சமூகநீதியை (அந்தந்த சமூகங்களின் நீதியை அல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் நீதியை) விரும்புபவர்களும் பெரியாரின் தேவையை உணர்கிறார்கள், அவர் மீண்டும் வேண்டுமென்று நினைக்கிறார்கள்... பெரியாரை ஆய்ந்தவர்களும், தெரிந்தவர்களும் அவரின் கருத்தை பரப்புகின்றனர். கிட்டதட்ட அதே காலகட்டத்தில்தான் முன்னரே கூறியது போல், பெரியார் என்ற தத்துவம் மட்டுமல்ல, பெரியார் என்ற பெயரே இருக்கக்கூடாது என சிலர் தீவிர முயற்சி செய்கிறார்கள். அதற்கு தீவிரமாக முயற்சியும் செய்கிறார்கள். கருத்தை எதிர்க்கிறார்கள், சிலையை உடைப்பேன் என்கிறார்கள், அவரின் சிலையில் இருக்கும் வாசகம் உட்பட அனைத்தும் அவர்களை உறுத்த அதையும் அழிக்கவேண்டுமென வழக்கு போடுகிறார்கள். இப்படியாக பெரியார் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை ஒரு தத்துவம் எப்போது அதிகமான தாக்குதல்களுக்கு உள்ளாகிறதோ, அப்போதுதான் அது அதிகமாக வளரும், அப்போதுதான் அது உயிர்ப்புடன் இருக்கிறது என்று பொருள். பெரியார் ஒரு தனி மனிதரல்ல, அவர் ஒரு தத்துவம் அதை எதிர்க்க, எதிர்க்க அது வளரத்தான் செய்யும். வள்ளுவம் காலம் கடந்து நிற்பதைப்போல...
அவர் தன்னலம் கருதியவர்தான். தன் இனத்தின் நலனை தன் நலனாகக் கருதி அந்த நலத்துக்காகப் போராடியவர். 'பெரியாரின் சுயநலம்' போல், 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைக்காத பெரியார், வெறும் கடவுள் மறுப்பு பேசிய பெரியார், பழமை பேசிய பெரியார், சமூகத்தை பின்னுக்கு இழுத்த பெரியார், தமிழைக் கொச்சைப்படுத்திய, காட்டுமிராண்டி என்ற பெரியார்' என ஆயிரம் தலைப்புகளில் விரிவான கட்டுரைகள் எழுதலாம்.
இங்கு அவரை நான்கு வரியில் குறிப்பிட்டு முடிக்கத் தோன்றுகிறது, அதுவும் அவ்வளவு எளிதல்ல, எந்தக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் அடங்காதவர் அதற்குள் மட்டும் அடங்கிவிடுவாரா என்ன, இருப்பினும் அந்த பகுத்தறிவு சூரியனை கவிஞர். காசி ஆனந்தனின் வரிகளால் குறிப்பிடுகின்றேன்...
மானம் கெடுப்பாரை, அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை
வானம் உள்ளவரை, வையம் உள்ளவரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை...