Skip to main content

‘தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணிகளும்; அதன் வகைமைகளும்’ - முனைவர் சு. தாமரைப்பாண்டியன் 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

தமிழர்கள் தங்களின் தொன்மையான அறிவு மரபுகளைப் பல்வேறு எழுதப்படு பொருள்களில் எழுதி வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் தங்கள் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதில் ஓலையில் எழுதி வைக்கும் வழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. ஓலையில் எழுத எழுதுபொருளாக எழுத்தாணியை தமிழர்கள் மிக நீண்ட காலம் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆன எழுத்தாணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். 

 

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க முதன்மையான ஓலைச்சுவடி அறிஞராகத் திகழ்ந்து வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது சில அரிய எழுத்தாணிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அது குறித்து அவர் கூறியதாவது: தமிழர்களின் அறிவுசார் கண்டடைவுகள் பெரும்பாலும் ஓலையிலேயே எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந்துள்ளது. தூது சென்ற பார்ப்பான் ஒருவன் கையில் எழுதுவதற்கு பயன்படுத்தும் வெள்ளோலையினை வைத்திருந்ததாக அகநானூறு (பா. 337:7 - 8 ) குறிப்பிடுகிறது. இதன் மூலம் ஓலை மிக நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்படு பொருளாக இருந்து வந்துள்ளது புலனாகிறது.

 

மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை, தமிழ் விடு தூது முதலிய பல நூல்களில் ஓலையில் தமிழர்கள் எழுதி வந்தது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ஓலைச்சுவடி என்று அழைக்கப்பட்டது. ஓலைகள் அதன் எழுதப்படு பொருண்மை அடிப்படையிலும், எழுதப்படு பொருள் அடிப்படையிலும் மந்திர ஓலை, சபையோலை, அறையோலை, இறையோலை, தூது ஓலை, பட்டோலை, ஆவண ஓலை, வெள்ளோலை, பொன்னோலை, படியோலை என்று பலவாறு அழைக்கப்பட்டன. ஓலைகள் பாதுகாக்கும் இடம் ஆவணக் களரி என்று அழைக்கப்பட்டன.

 

தமிழர்கள் தங்கள் அறிவு மரபுகளை ஓலையில் எழுத எழுத்தாணிகளைப் பயன்படுத்தினர். எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதுதல் என்பது சிரமமான காரியம் ஆகும். இதனை, ‘ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா / வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா’ எனும் பாடல் வரிகள் தெளிவாகச் சுட்டுகின்றன.

 

எழுத்தாணி மிக நீண்ட காலமாக தமிழர்களிடம் வழக்கில் இருந்து வந்துள்ளது. பொன்னால் செய்த எழுத்தாணி இருந்தமையினை சீவக சிந்தாமணி நூல் வழி அறிய முடிகிறது. எழுத்தாணிகளை தமிழறிஞர்கள் தேடி அலைந்தமையினை ‘ஓலை தேடி எழுத்தாணி தேடி’ என்ற தனிப்பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எழுத்தாணியானது அதன் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வித அமைப்பாக  உள்ளமையினை அறிய முடிகின்றது.

 

குண்டெழுத்தாணி


 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

அதிக நீளம் இல்லாமல் எழுத்தாணியின் கொண்டைப் பகுதி கனமாகவும் குண்டாகவும் அமைந்து காணப்படும் எழுத்தாணி குண்டெழுத்தாணி எனப்படும். குண்டெழுத்தாணியின் முனைப் பகுதியின் கூர்மை குறைவாகக் காணப்படும். குழந்தைகள் எண்ணும் எழுத்தும் எழுதிப் பழக குண்டெழுத்தாணியைப் பயன்படுத்துவார்கள். எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

 

கூரெழுத்தாணி


எழுத்தாணியின் முனைப்பகுதி கூர்மையாக இருக்கும். இவ்வெழுத்தாணியினை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரிகள் வரை எழுதுவதற்குரியதாக அமைந்திருக்கும்.

 

வாரெழுத்தாணி

 

'The pens used by the Tamils; Its characteristics' - Dr. Su. Tamaripandian

 

இவ்வெழுத்தாணி சற்று நீளமாக இருக்கும். எழுத்தாணியின் மேற்பகுதியியில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும். கீழ்ப் பகுதியில் கூர்மையானதாக எழுதும் பகுதி அமைந்து காணப்படும். எழுத்தாணியின் ஒரு பகுதியில் உள்ள கத்தி ஓலையை வாருவதற்குப் பயன்படும். அதனால் இவ்வெழுத்தாணி வாரெழுத்தாணி என்று அழைப்படுகிறது.

 

மடக்கெழுத்தாணி


ஒரு முனையில் கத்தியும் மறுமுனையில் எழுதவும் பயன்படும் வாரெழுத்தாணியின் இரு முனைகளையும் மடக்கி ஒரு மரத்தாலான கைப்பிடிக்குள் அடக்கி வைத்துக் கொள்ளும் தன்மையிலான எழுத்தாணி மடக்கெழுத்தாணி எனப்படுகிறது. எழுத்தாணி மடக்கி வைக்கப்படுவதால் எழுத்தாணியின் கூர்மையான பகுதி மற்றும் கத்தியினால் ஏற்படும் எதிர்பாராத இன்னலைத் தடுக்க உதவுகிறது.

 

தமிழர்கள் வெட்டெழுத்தாணிகளையே அதிகம் பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. தமிழர்களின் இத்தகைய அறிவு தொழில்நுட்பக் கருவியான எழுத்தாணிகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நெல்லை மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு செய்தபொழுது இராமலிங்கம், கணேசன் ஆகியோரிடம் இருந்த பழமையான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெண்கலம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டவை ஆகும் என்றார்.

 

 

Next Story

"தமிழக கலாச்சாரம் ஒரு ஆன்மீக கலாச்சாரம்" - ஆளுநர் தமிழிசை

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

governor tamilisai talks about tamilnadu culture spiritual culture

 

வேலூர் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் 31 ஆம் ஆண்டு விழா இன்று (08.05.2023) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க 10008 மஞ்சள் குட நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது. இந்த இரண்டும் தான் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் சிலர் ஆன்மீகத்தை தவிர்த்து தமிழ் தான் அனைத்திற்கும் என்று சமீப காலமாக கூறி வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல. கொரோனா காலத்தில் தடுப்பூசி போடுவதற்கு அந்த அளவிற்கு நாங்கள் முயற்சி செய்தோம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு நமது ஆன்மீகமும் அறிவியலும் காரணமாகும்.

 

இந்தியா எடுத்த உறுதியான முடிவினால் 45 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். இதற்கு தடுப்பூசியும் இறைவனின் அருளும்தான் காரணமாகும். இவை இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை காண முடியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன். ஆன்மீகமும் தமிழும் ஒன்றுதான். ஆன்மீகத்தோடு கூடிய தமிழ் தான் தமிழகத்திற்கு வளர்ச்சியை தரும். தமிழக கலாச்சாரம் ஒரு ஆன்மீக கலாச்சாரம். தமிழக முதல்வர் இந்துக்களின்  விநாயகர் சதுர்த்தி, தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் நான் பாகுபாடு பார்ப்பவன் இல்லை என முதல்வர் சொல்கிறார். ஆனால் இவர் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து நான் கேட்டிருந்தேன். இதுவரையில் எனக்கு பதில் இல்லை.

 

ஆளுநர்கள் குறித்து தவறான கருத்துகளை கூறுகிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளது. அதே போல் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் சில அதிகாரங்கள் அவர்களுக்கு உள்ளது. ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஏன் ஆளுநரை சந்தித்தார்கள். எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும். ஆளுநர்களுக்கு அதிகாரமில்லை என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் கூறி வருகிறார். அதே போல் நான் புதுவையில் அதிக நாள் தங்கியிருப்பதாக நாராயணசாமி கூறுகிறார்.

 

உண்டியல் குலுக்கி புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் விமானம் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். அவர் உண்டியல் குலுக்க தேவையில்லை சேர்த்து வைத்திருந்த பணத்திலேயே அவர் ஏற்பாடு செய்யலாம். பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மக்களும் ஹைதராபாத் மக்களும் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமான சேவையை துவக்கி வைத்தார். உங்களைப் போல நாங்கள் தனி விமானத்தில் செல்லவில்லை. மக்களோடு மக்களாகத்தான் நாங்கள் செல்கிறோம். ஏற்கனவே புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் நேரடி விமான சேவை உள்ளது. இது கூட தெரியாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகிறார். புதுவையில் முதலமைச்சராக  நாராயணசாமி இருந்தபோது அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்று எங்களுக்கு தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே நாராயணசாமி ராஜ்யசபா எம்பி ஆக இருந்தார் என்பதும் எங்களுக்கு தெரியும். அதனால் எல்லோரையும் குறை சொல்ல வேண்டாம்" என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். 

 

 

Next Story

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள்- வியக்கவைக்கும் வெம்பக்கோட்டை!

Published on 16/04/2023 | Edited on 16/04/2023

 

சிவகாசி  அருகிலுள்ள  வெம்பக்கோட்டையில்  இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒன்பது நாட்கள் அகழ்வாராய்ச்சி பணிகளின் முடிவில் சுடுமண் புகைப்பிடிப்பான், கல்லாலான எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட 200 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த தொன்மையான மனிதர்கள் வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றாக,  தற்போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உள்ளதாக  தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே நடந்த  முதல் கட்ட அகழ்வாராய்ச்சியில் 3254 தொன்மையான பொருட்கள் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.