Skip to main content

பாண்டியர் கால கல்வெட்டுகளை வியந்து படித்த அரசு பள்ளி மாணவர்கள்!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

pandyas kingdom inscription read by government school students

 

மதுரை மாவட்டம், லாலாபுரம் பள்ளி மாணவர்கள் கள்ளிக்குடி கோயிலில் பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் இருந்த பாசன பேரேரிகளின் பெயர்களைப் படித்து வியந்தனர்.

 

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம், லாலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழாவும், கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சியும் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியை முத்துலட்சுமி தலைமை தாங்கினார். ஏழாம் வகுப்பு மாணவி ரதி அனைவரையும் வரவேற்றார்.

 

தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலாளரும் தமிழாசிரியருமான ராஜேஸ்வரி மன்ற அறிமுக உரையில், "தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல்கட்ட தொல்லியல் பயிற்சி இம்மாதம் 6-ம் தேதி மதுரையில் நடந்தது. இப்பயிற்சியை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். அதன்படி தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியலை பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது” என்றார். ஏழாம் வகுப்பு மாணவன் முகமது ஹாரூன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை மாணவர்கள் அபி, காவியா, சந்தோஷ்குமார், முகமது ஹஸ்ரத் ஆகியோர் செய்தனர்.

 

மன்ற நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு கி.பி.13-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட கள்ளிக்குடி குலசேகரப்பெருமாள் கோவிலில் கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வெட்டுகளில் இவ்வூரில் இருந்த பெரியகுளமான விக்கிரமபாண்டிய பேரேரி, குமரநாராயணப் பேரேரி, இராசசிங்க பேரேரி, கோவிந்தப் பேரேரி ஆகிய பாசனப் பேரேரிகளின் பெயர்களைப் படித்து மாணவர்கள் வியந்தனர். 

 

 

 

Next Story

பற்றி எரியும் வங்கதேசம்; இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Students struggle against quota in Bangladesh

வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு  வங்கதேசம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு அந்த இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் போரில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டின் அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  இது தொடர்பான வழக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதே சமயம் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் அமைப்பினர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தில் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் வன்முறை வெடித்துள்ளது. இதில் மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Students struggle against quota in Bangladesh

வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விடுதிகளையும் மாணவர்கள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் நாடு முழுவதும் நிலவி வருவதால், இந்தியர்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, மற்றவற்றிற்கு  யாரும் வெளியே வரவேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது. 

Next Story

ஆசிரியர் மீது அளவில்லா அன்பு... ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவர்கள்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
133 students are joined in same school as teacher has transferred In Telangana

தெலங்கானா மாநிலத்தில் பொனகல் என்ற கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படும் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஸ்ரீனிவாசன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12 ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், மாணவர்கள் அனைவரும் இவரின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். ஸ்ரீனிவாசனும் மாணவர்களின் நலன் சார்ந்த விஷங்களில் அதீத கவனம் எடுத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்திருக்கிறார். மேலும் அவர் படிப்பைத் தாண்டி மற்ற விஷங்களிலும் மாணவர்களுக்கு உதவியிருக்கிறார். 

இந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் அக்காபெல்லிகுடா என்ற கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவர்கள் கதறி அழுது, ‘வேறு பள்ளிக்கு எல்லாம் செல்ல வேண்டாம் சார்..’ என்று வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் ஆசிரியர் ஸ்ரீனிவாசன் அக்காபெல்லிகுடா பள்ளிக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் தங்களுக்கு விருப்பமான ஆசிரியர் வேலை பார்க்கும் பள்ளியில் தான் படிப்போன் என்று பொனகல் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் இருந்து அக்காபெல்லிகுடாவில் உள்ள பள்ளியில் 133 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 

பொனகல் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளியில் 250 மாணவர்களில் பாதி மாணவர்கள் ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் பெற்ற பள்ளியில் சேர்ந்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. “இது பெற்றோர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத்தான் காட்டுகிறது. ஒவ்வொரு மாணவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்றார்போல் பாடத்தை நடத்துகிறேனே தவிர வேறெதையும் நான் செய்யவில்லை” என்று கூறிய ஆசிரியர் ஸ்ரீனிவாசன், அனைத்து அரசு பள்ளிகளும் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது; அதனைப் பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளார்.