சங்க கால கோட்டையான பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு தொடங்கி நடந்து வரும் நிலையில், தினசரி ஏராளமானோர் அகழாய்வு இடத்தை பார்த்து வருகின்றனர். அந்த வகையில், பொற்பனைக் கோட்டை அகழாய்வு தளத்தினை சனிக்கிழமை திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்தவர்களும், சாரணர் இயக்கத்தினை சேர்ந்த மாணவர்களும் காண வந்தனர். பார்க்க வந்த மாணவர்களுக்கு பொற்பனைக் கோட்டை அகழாய்வு இயக்குநர் தங்கதுரை, அகழாய்வின் முக்கியத்துவம், பொற்பனைக் கோட்டை அகழாய்வு குறித்தும் விளக்கம் அளித்தார்.
தொல்பொருட்களை பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தினை சேர்ந்த மாணவர்கள் அகழாய்வு குறித்து பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர். இதில் ஆசிரியர் சித்திரலேகா மற்றும் சாரணர் இயக்கத்தின் மாஸ்டர் அன்பழகன் மாணவர்களை அழைத்து வந்திருந்தனர்.
ஒவ்வொரு அகழாய்வுக் குழிகளிலும் கிடைத்த தொல்பொருட்களை பற்றி ஆய்வு மாணவர்களான சுதாகர், முனுசாமி, பாரத் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்கள். நிகழ்வின் முடிவில் ஆசிரியர், சாரணர் இயக்கத்தின் மாஸ்டர் மற்றும் பள்ளி மாணவர்கள் இங்கு பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
மேலும், கடந்த வாரம் வட்டச்சுவர் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து நடந்த அகழாய்வில் வட்டச் சுவரை ஒட்டிய பகுதியில் பயன்படுத்தப்பட்ட கழிவு நீர் செல்லும் வாய்க்கால் அடுத்தடுத்த குழிகளில் காணப்பட்டுள்ளது. அதனால் இது சிதைந்த அரண்மனை கட்டுமானத்தின் அடிப்பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு குழியில் சுமார் 10 அடி ஆழத்தில் ஒரு பானை கிடைத்துள்ளது. மேலும் சுமார் 15 அடி ஆழம் வரை தோண்டிய நிலையில் கிடைத்துள்ள பானை ஓடுகள் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வாழ்விடமாக இருந்ததற்கு சான்றாக உள்ளது. அதாவது இந்தப்பகுதியில் சங்ககாலம் முதல் வரலாற்றுக்காலம் என கி.பி 16, 17ம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. மேலும் அகழாய்வில் பல சான்றுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.