தண்ணீரை கேன், கேன்களாக பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் நகரவாசிகளே இனி நீங்கள் உங்களுக்கு தேவையான ஆக்சிஜனையும் பணம் கொடுத்து வாங்கவேண்டும் என்ற நிலை வந்துவிட்டதா? சில வருடங்களுக்கு முன்னால் குடிக்கும் தண்ணீரை கேன்களில் வைத்து விற்றவர்களை பார்த்து எல்லோரும் யோசித்திருப்பார்கள், தண்ணீரைப்போய் யாராவது பணம் கொடுத்து வாங்குவார்களா என்று. அதை தற்போது உள்ள சூழலியலில் ஒப்பிட்டு பார்த்தால் சிரிப்புதான் வரும். நகரத்தில், தண்ணீர் கேன்கள் என்பது இன்றிமையாத ஒன்றாக மாறிவிட்டது. குடம் குடமாக தண்ணீர் பிடித்து வைத்தது போய் கேன் கேனாக வாங்குகின்றனர். இது காலத்தினால் ஏற்பட்ட சூழ்ச்சி என்பதை விட மனிதன் மனிதனுக்கே ஏற்படுத்திக்கொண்ட சூழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். இயற்கையின் ஐந்து பூதங்களையும் காலப்போக்கில் வியாபாரமாக மாற்றும் அளவுக்கு இந்த யுகம் மாறிவிட்டது.
ஒரு மனிதனால் ஆறு நிமிடத்திற்கு மேல் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது. முதலில் மனிதனுக்கு ஆக்சிஜன் ஏன் வேண்டும் என்று பார்ப்போம். ஆக்சிஜன் இல்லாமல் மனிதனின் மூளை செயல்படாது, சுவாசித்தால்தான் உயிருடன் வாழ முடியும். நீர் எவ்வளவு இன்றிமையாததோ அதேபோல ஆக்சிஜனும் இன்றிமையாதது. நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இருப்பதால்தான் நீரும் நமக்கு தேவையானது என்றும்கூட சொல்லலாம். இயற்கையான உலகத்தில் அனைத்திற்கும் ஆக்சிஜன் தேவை.
தண்ணீரை கேனில் வைத்து விற்றது போல, தற்போது சுத்தமான, இயற்கையான ஆக்சிஜன் என்று கேனில் அடைத்து சென்னையில் பணக்காரர்கள் வாழும் பகுதிகளில் விற்றுவருகின்றனர். oxy99 என்ற நிறுவனம்தான் இதை செய்துவருகிறது. இந்த ஆக்சிஜன் கேன் சென்னையில் சமீபமாகத்தான் விற்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மற்ற பெரிய நகரங்களான மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற இடங்களில் கடந்த ஒரு வருடங்களாகவே விற்கப்பட்டுவருகிறது. இதன் விலை 500 முதல் 1500 வரையில் இருக்கிறது. பணக்காரர்களை மட்டுமே மையமாக கொண்ட தொழில்யுகத்தியை கையாண்டு வருகின்றனர். இந்த ஆக்ஸிஜன் கேன் 3 வகைகளில் கிடைக்கிறது. முதல் வகை ஆக்ஸிஜன் கேன் பொது உபயோகத்திற்கு யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மருத்துவ உபயோகத்திற்கு அல்ல. இரண்டாம் வகை ஸ்போர்ட்ஸ் ஆக்ஸிஜன் கேன். விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவது. மூன்றாம் வகை மருத்துவத்திற்காக பயன்படுத்துவது. ஆஸ்துமா, மூச்சு பிரச்சினை, முதலுதவி, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு என அவரவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம் என்கிறார்கள்.
உலகளவில் நீர் மாசடைந்ததில் இந்திய நகரங்களும் பிரதான இடங்களைப் பிடித்தன அதை வைத்து மல்டிநேஷனல் நிறுவனங்கள் கேன் தண்ணீர் குடித்தால்தான் சுத்தமானது, சுகாதாரமானது என்று சொல்லி நம்மை நம்ப வைத்தது. ஆனால், கடைசியில் மக்கள் அவர்கள் வலையில் விழுந்தார்களே தவிர, நல்ல குடிநீருக்கான மாற்று யோசனையை செயல்படுத்தவில்லை. ஓடும் ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுக்கவில்லை, மழை பெய்ய மரங்களை நடவில்லை. அதற்குப்பதிலாக குடிநீரை கேன் போடும் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக்கொண்டனர். தற்போது இந்தியா காற்று மாசுவிலும் பிரதான இடம் பிடித்துவிட்டது. உலகரங்கில் ஆக்சிஜனை விற்பவர்கள் இங்கும் நுழைந்துவிட்டார்கள்.
கனடா நிறுவனமான 'விடாலிட்டி ஏர்' கேன்களில் அடைக்கப்பட்ட சுத்தமான ஆக்சிஜனை இந்தியாவில் விற்பனை செய்ய இந்திய நிறுவனம் ஒன்றுடன் கைக்கோர்த்து களம் இறங்கியது. முதற்கட்டமாக 100 கேன்களை மட்டும் விற்பனை செய்யவும், ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்தவும் முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விடாலிட்டி ஏர் மற்றும் OXY 99 ஆகிய நிறுவனங்கள் தங்களின் காற்று விற்பனையை இந்தியாவில் தொடங்கி உள்ளன. மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் ஆக்சிஜன் கேன் விற்பனை அதிகரித்து வருவதால், சீனாவைத் தொடர்ந்து இந்தியாவில் விற்பனையைத் தொடங்கி உள்ளன.
ரோட்டில் பிரச்சாரங்கள் மேற்கொண்டு தண்ணீர் ப்யூரிஃபையர் மெஷின்களை விற்றது போல இதற்கும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சாதாரண மக்களிடம் வந்து சேருவதற்கு இன்றும் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்வார்கள், அதற்கு முன்பே நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். நம் காற்று மாசுபட்டுவிட்டது நிஜம்தான், ஆனால் அதற்கு மாற்று பொருள் இந்த கேனில் இருக்கும் ஆக்ஸிஜன் அல்ல. அழிந்துகொண்டிருக்கும் இயற்கையை மீட்டெடுப்பது தான் நிரந்தரத்தீர்வு. ஆக்சிஜனை நமக்கு உற்பத்தி செய்துதரும், தீர்ந்துபோகாத தொழிற்சாலையான மரங்களை நடுங்கள்.