கரோனா ஏற்படுத்திய பொருளாதாரத் திணறலால், இந்த வருட தீபாவளி வியாபாரம் ரொம்பவே டல் அடித்திருக்கிறது. குறிப்பாக ஜவுளி, மளிகை, மட்டன், சிக்கன், பலகாரம் வெடி உள்ளிட்டவைகளின் வியாபாரம் பாதிக்கும் குறைவாய் படுத்துவிட்ட நிலையில், டாஸ்மாக் விற்பனை மட்டும் தள்ளாடாமல் ஸ்டெடியாய் எகிறிச் சென்று அரசின் கல்லாவை ஏகத்துக்கும் நிறைத்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் 5330 டாஸ்மாக் சில்லறைக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் வருகிறது. இது சிறப்பு விடுமுறை நாட்களில் மட்டும் 150 கோடி ரூபாய்வரை எகிறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இது 600 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பே திகைப்பு விலகாமல் சொல்கிறது.
தீபாவளிக்கு முதல்நாளான 13-ஆம் தேதி 228 கோடி ரூபாய்க்கும், தீபாவளி நாளான 14-ஆம் தேதி, 238 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையானதால் டாஸ்மாக் தரப்பு கிக்கில் இருக்கிறது.
அதில் மதுரை மண்டலத்தில் மட்டும் 104 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 95 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 94 கோடி ரூபாய்க்கும் சரக்குகள் விற்பனையாகி உள்ளதாம். "அனைத்து மாவட்டங்களிலுமே இந்த ஆண்டின் விற்பனை சூடுபிடித்துக் காணப்பட்டது' என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள். கடந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 355 கோடியாக இருந்தது. அது இந்த ஆண்டு கிடுகிடுவென இரு மடங்கு ஆகியிருக்கிறது.
கரோனாவால் பெரும்பாலான குடும்பங்கள் வறுமை யில் தள்ளாடிவரும் நிலையில், இந்த இருமடங்கு விற்பனை எப்படி சாத்தியமானது?
நம்மிடம் பேசிய தகவல் பெறும் உரிமை ஆர்வலர் லப்பைக்குடிகாடு சாகுல்ஹமீது, விசேஷ நாட்களில் நட்பு விருந்து என்ற பெயரில் மது விருந்து நடத்தும் கலாச்சாரம் அதிகரித்திருக்கிறது. இப்போது திருமணம், காது குத்து, குலதெய்வ வழிபாடு என எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மது விருந்து நடக்கிறது.
அதேபோல் முக்கிய அரசியல் கட்சிகள், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைவரையும் கவனிக்கின்றன. குறிப்பாக கட்சிகளின் கீழ்மட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தீபாவளி அன்பளிப்பு வழங்கும்போதே, மதுபாட்டில்களையும் வழங்கிவிடுகிறார்கள். இளைஞர்களின் வாழ்க்கை கெடுவது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இங்கிருக்கும் அரசும் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக சொல்லிக்கொண்டே, விற்பனையைப் பெருக்குகிறது.
"தேசிய நெருஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும்' என்று நீதிமன்றங்கள் சொன்ன பிறகும், "நெடுஞ்சாலை ஓரம் குறிப் பிட்ட தூரத்திற்கு அப்பால் கடை வைக்கலாம்' என்று, அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்றிக் கொண்டு, டாஸ்மாக் கடைகளை வைத்து, வசூல் வேட்டை நடத்துகிறது என்கிறார் வருத்தமாய். நெடுஞ்சாலை பக்கம் கடையின் முதுகையும், எதிர்ப்பக்கம் வாசலையும் வைத்து வியாபாரம் செய்யும் டெக்னிக்கையும் டாஸ்மாக் நிறுவனம் கண்டுபிடித்து செயல்படுத்தியது.
"மக்கள் விழிப்புணர்வுமைய' பொறுப்பாளர் நெய்வேலி செல்வமோ, இந்த ஆண்டு டாஸ்மாக் வியாபாரம் 600 கோடி ரூபாய்க்கு என்று சொன்னால், அதில் தமிழக அரசுக்கு எத்தனை கோடி ரூபாய் வருமானம் இருந் திருக்கும்? இதில் மதுபான அதிபர்கள் எத்தனை கோடி ரூபாய் லாபம் சம்பாதித் திருப்பார்கள்? அரசுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக டாஸ்மாக்கை அனுமதிப்பதாகச் சொல்லும் அரசு, டாஸ்மாக்கை நடத்துவது போலவே, மதுபான ஆலையையும் நடத்தி அதன் மூலம் முழு லாபத்தையும் பார்க்கலாமே? ஏன் அதைச் செய்யவில்லை?
இன்று டாஸ்மாக் வியாபாரம் அதிகரிக்கிறது என்றால் நாம் சந்தோசப்படாமல் வெட்கப்படவேண்டும். இது அரசுக்குக் கிடைத்த வெற்றியல்ல. ஏனென்றால் இன்று மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி உழைக்கும் பெண்கள் வரை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அதோடு குடியால் குற்றங்களும் பெருகி வருகின்றன. இதற்கெல்லாம் அனுசரணையாக இருப்பது அரசு நடத்தும் டாஸ்மாக்தான். இவர்கள் ஒரு சமூகத்தையே சீரழித்து விட்டுதான் அரசாங்கத்தை நடத்தவேண்டுமா?'' என்று காட்டமாகவே கேட்கிறார்.
"டாஸ்மாக் விற்பனையால் அரசுக்குக் கிடைக்கும் லாபம் என்பது, பாவத்தின் சம்பளம் என்பதை உணரவேண்டியவர்கள் உணர்வார்களா?' என்ற கேள்விக்கு நியாயமான பதில் கிடைக்காது. ஏனென்றால், "கரோனா காலத்தில் ஏற்பட்ட அரசின் வரி இழப்புகளை சரிக்கட்டுபவை பத்திரப் பதிவுகளும், டாஸ்மாக் வியாபாரமும்தான்' என்று அரசே புள்ளிவிவரம் வெளியிட்டு வருகிறது.