Skip to main content

உங்க வாரிசுகள் ரொம்ப மோசம்... கடும் அதிருப்தியில் மோடி! கெஞ்சிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021
ddd

 

ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். திடீர் டெல்லிப் பயணத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளன. இருவரும் பாரதப் பிரதமருடன் நடத்தியது ஒரே ஒரு மீட்டிங். அதைப்பற்றி பாரதப் பிரதமர் மோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இப்பொழுதுதான் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர்.

 

டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு எடப்பாடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தொடர்பாகத்தான் எடப்பாடி, பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.

 

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது கருப்புப் பணத்தை கருவறுக்கும் நடவடிக்கை என்று சொல்லப்பட்டதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, புதிய 2000 ரூபாய் வைத்திருந்தவர்களைத் தேடி வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும் களமிறக்கப்பட்டது. அதில் பெங்களூருவில் ஜெயச்சந்திரா என்பவர் சிக்கினார். லட்சக்கணக்கில் புதிய 2000 ரூபாய் வைத்திருந்தார் என சி.பி.ஐ. அவரை கைது செய்தது. கர்நாடகாவின் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என தமிழர் ஒருவர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கோடிக்கணக்கான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவருக்குப் புதிய நோட்டுகளைக் கொடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கியான தனலட்சுமி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் கர்நாடகா வங்கி அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள்.

 

ஈரோட்டைச் சேர்ந்த வியாபாரி அவர். ராமலிங்கம் என்கிற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார் என அறியப்பட்ட அவர், கர்நாடகாவில் சாலை போடும் பணியை செய்துவருகிறார் என சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை. எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் திருமணம் செய்துள்ள திவ்யாவின் இளைய சகோதரியான சரண்யாவை திருமணம் செய்தவர். அவர் பெயர் சந்திரகாந்த் ராமலிங்கம். அதாவது எடப்பாடியின் மகனின் சகலை. அவர் நடத்திவரும் கம்பெனியின் உரிமையாளர் மிதுனின் மாமனாரான ராமலிங்கம்.

 

2018-ஆம் ஆண்டு எஸ்.கோபி என்கிற சாலை போடும் நிறுவனத்தின் மீது வருமானவரித்துறை சோதனை நடத்தியது. 200 கோடி பணத்தை ரெய்டுக்குப் பயந்து 14 பி.எம்.டபுள்யு காரில் பதுக்கி வைத்தது இந்த கம்பெனி. 12,000 கோடி ரூபாய்க்கு சென்னையில் புறவழிச் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்றிருந்தது. 5000 கோடிக்கு மாநிலம் முழுவதும் சாலை அமைத்துக் கொண்டிருந்தது இந்தக் கம்பெனி. வெங்கடாசலபதி அண்ட் கோ என்கிற கம்பெனிக்கு சப்-காண்ட்ராக்ட் கொடுத்திருந்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு சப்-காண்ட்ராக்ட் பெற்ற வெங்கடாசலதிபதி அண்ட் கோவின் உரிமையாளர், 2016-ஆம் ஆண்டு பெங்களூருவில் கைது செய்யப்பட்ட சந்திரகாந்த் ராமலிங்கம் மற்றும் எடப்பாடியின் மகன் மிதுன் ஆகியோரின் மாமனார் ராமலிங்கம்.

 

இந்த வழக்குகள் பற்றிய கவலை எடப்பாடிக்கு எப்போதும் இருந்தது. அதே 2016-ஆம் ஆண்டு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை 20 கோடி ரூபாய் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, அவரிடம் கைப்பற்றப்பட்ட 136 கோடி ரூபாய்க்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் தொடர்பிருந்தது. அதைக்காட்டி மிரட்டித்தான் ஓ.பி.எஸ். பணிய வைக்கப்பட்டார். அதேபோல் எனது உறவினர்களையும் பா.ஜ.க. அரசு வழக்குகளைப் பதிவு செய்து சிறையிலடைக்கிறது என கூவத்தூர் முகாமில் சசிகலாவிடம் வருத்தப்பட்டார் எடப்பாடி. சசிகலாவை விட்டுப் பிரிந்து பா.ஜ.க. வசம் எடப்பாடி சென்றதற்கு, இந்த வழக்குகள் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

ddd

ஒன்றிய அரசு சார்ந்த இந்த வழக்குகள் முடியவில்லை. தொடர்ந்து தலைவலியாகவே எடப்பாடிக்கு இருந்துவருகிறது. அதில் ஒரு முடிவு ஏற்படுவதை பா.ஜ.க. விரும்பவேயில்லை. அடிக்கடி புண்ணை குத்துவதைப் போல எடப்பாடியை பா.ஜ.க. காயப்படுத்தி வந்தது. இதை பொறுக்க முடியாத எடப்பாடி, பலமுறை மோடியிடமும் நிர்மலா சீதாராமனிடமும் முறையிட்டார். ஆனால் பா.ஜ.க. சட்டமன்றத் தேர்தலில் சொன்ன சசி இணைப்பு உட்பட, சீட் ஒதுக்கீடு என அனைத்திலும் முரண்டுபிடித்தார் எடப்பாடி.

 

தேர்தலில் எடப்பாடி தோற்றதும், மறுபடியும் எடப்பாடிக்கு எதிராக வழக்கை பா.ஜ.க. கையிலெடுத்தது. அத்துடன், எடப்பாடி அமைச்சரவையில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் மீது வருமானவரித்துறை எடுத்த ரெய்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டது. அதேநேரத்தில் தி.மு.க.வுடன் பா.ஜ.க. நெருக்கம் காட்டி கலைஞரின் படத்தை திறக்க ஜனாதிபதியை அனுப்பி வைத்தது. ஜெ.வின் படத்தை திறக்க பிரதமரை அழைத்தும் வரவில்லை. ஜெ.வை ஊழல் குற்றவாளி என மோடி அன்று சொன்னார். இப்போது எடப்பாடி குடும்பம் சார்ந்த ஊழல் வழக்குகளையும் கிளறுகிறார்.

 

அதுபோலவே ஓ.பி.எஸ்.ஸின் இரு மகன்களான ரவீந்திரநாத் எம்.பி, ஜெய்பிரதீப் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான சர்ச்சைகள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால், அது குறித்தும் டெல்லி சந்திப்பின்போது மோடி கடுமை காட்டியிருக்கிறார். அத்துடன் சசிகலா விவகாரம் உட்பட அனைத்தையும் பேசி முடிக்கத்தான் அவசர அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டனர் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.

ddd

ஒருபக்கம் தி.மு.க. எங்களை ஊழல் குற்றம்சாட்டி தாக்குகிறது. அந்தவேளையில் மத்திய அரசு, அ.தி.மு.க.வினர் மீதான வருமானவரித்துறை வழக்குகளை வேகப்படுத்தி நோட்டீஸ்கள், சம்மன்கள் அனுப்புவது எந்தவிதத்தில் நியாயம் என மோடியிடம் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் தனித்தனியாகக் கெஞ்சிக் கேட்டார்கள். ஓ.பி.எஸ்.ஸின் மகன், எடப்பாடியின் மகன் ஆகிய இருவரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என மோடி அதிருப்தி தெரிவித்தார். தி.மு.க.வின் ரெய்டுகளுக்கு எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. சசிகலா விவகாரத்தில் நீங்கள், நாங்கள் சொன்னதை கேட்கவில்லை என அதிருப்தியை தெரிவித்தார். பஞ்சாயத்து அமித்ஷா வசம் சென்றது. அமித்ஷாவும் மோடி சொன்னதையே திருப்பிச் சொன்னார். எங்களை ஏன் தாக்குகிறீர்கள்? என எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் கூறியதைக் கேட்க, பஞ்சாயத்து தலைவராக நிதியமைச்சர் நிர்மலாவுக்கு உத்தரவிட்டனர் மோடியும் அமித்ஷாவும்.

 

இருவரின் பேச்சைப் பொறுமையாகக் கேட்ட நிர்மலா, "இந்த வழக்குகளில் வருமானவரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அந்த துறைகள் எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்க முடியாது என பதில் சொல்லிவிட்டார். நிர்மலா சொன்ன பதில் மோடியும் அமித்ஷாவும் சொன்ன பதில், என்பதைப் புரிந்துகொண்ட ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும், இனிமேல் நாம் ஒற்றுமையாக இருப்போம். அ.தி.மு.க.வை வலுப்படுத்துவோம், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. நம்மிடம் வரவேண்டும். அப்பொழுது பேசிக்கொள்ளலாம்'' என முடிவு செய்து சென்னைக்குத் திரும்பினர்.

 

"அந்த ஒற்றுமை உணர்வு அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் ஓ.பி.எஸ். சசிகலா பற்றி அளித்த பேட்டியிலும் எதிரொலித்தது' என நடந்ததை சொல்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

இதற்கிடையே, இனி தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையேதான் போட்டி என தமிழக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. இதில் என்ன செய்வது என குழப்பத்தில் அ.தி.மு.க. ஆழ்ந்துள்ளது.