புதிய குடியுரிமைச் சட்டத்தை இயற்றிவிட்டு, தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு ஏற்பாடு செய்யப் போவதாக அறிவித்துவிட்டு, மக்கள் எதிர்ப்பை கண்டதும் தனது உள்துறை அமைச்சர் சொன்னதையே பிரதமர் மோடி மறுத்துப் பேசும் நிலை உருவானது. ஆனால், அதுவும் பொய் என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.
என்ஆர்சி தொடர்பாக பிரதமர் மோடி சொன்னவற்றை இங்கே பார்க்கலாம்.
1. 2014ல் நான் முதல்முறையாக பிரதமர் ஆனவுடன் என்ஆர்சி குறித்து ஒருபோதும் விவாதிக்க மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதி கொடுத்தேன் என்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் மோடி பேசினார். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் என்ஆர்சியை அமல்படுத்துவோம் என்று கூறப்பட்டிருந்தது. அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்திலும் இதை வலியுறுத்தினார். முதலில் குடியுரிமைச் சட்டத்தை திருத்துவோம். பிறகு நாடு முழுவதும் என்ஆர்சியை அமல்படுத்தி, அன்னியர்களைக் கண்டுபிடித்து இந்தியாவை விட்டு விரட்டுவோம் என்று அவர் பேசியிருக்கிறார்.
2. குடியுரிமை இல்லாதவர்கள் என்று அறியப்படுவோருக்கு முகாம்கள் கட்டுவதாக பாஜக மீது காங்கிரஸும், அறிவுஜீவிகளும் குற்றச்சாட்டு கூறுவது பொய் என்று மோடி சொன்னார். ஆனால், அசாம், மும்பை, பெங்களூரு ஆகிய மூன்று இடங்களில் இத்தகைய முகாம்கள் கட்டப்படுவதை புகைப்பட ஆதாரங்களுடன் பத்திரிகைகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.
3. எரிக்க விரும்பினால் எனது உருவபொம்மையைக் கூட எரியுங்கள். ஏழைகளை துன்புறுத்தாதீர்கள். போலீஸார் மீது கல்லெறிந்து அவர்களை காயப்படுத்துவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்றும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேசினார். இதுவும் உண்மையில்லை. ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்களை மட்டுமல்ல, நெருக்கடியில் சிக்கிக்கொண்ட பொதுமக்களையும் போலீஸார் தாக்கியதை ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
4. குடியுரிமை சட்டமோ, தேசிய குடிமக்கள் பதிவேடோ இந்திய முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று மோடி கூறியதும் உண்மையல்ல. 2019 ஏப்ரல் மாதம் அமித்ஷா பேசும்போது, முதலில் குடியுரிமைச் சட்டத்தை கொண்டுவருவோம். இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை கொடுப்போம். பிறகு இந்தியாவுக்குள் ஊடுருவியர்களை எளிதில் கண்டுபிடித்து வெளியேற்றுவோம் என்றார். அதாவது இந்துக்களுக்கு குடியுரிமை கொடுக்க எந்த ஆவணமும் தேவையில்லை. அப்படியானால், என்ஆர்சி கணக்கெடுப்பில் முஸ்லிம்களுக்கு மட்டுமே கடும் நெருக்கடி கொடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கில் காட்டவேண்டிய ஆவணங்களைக்கூட மத்திய அரசு இன்னும் இறுதி செய்யவில்லை.
5. அர்பன் நக்சல்களும், காங்கிரஸ் கட்சியும் வதந்திகளை பரப்புகின்றன என்றும் மோடி கூறினார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அர்பன் நக்ஸல்கள் என்று மோடி குறிப்பிடும் அறிவுஜீவிகளும், காங்கிரஸ் கட்சியும் வதந்திகளைப் பரப்புவதால்தான் போராட்டங்கள் தொடர்வதாக மோடி கூறுவதே ஜோக் என்கிறார்கள். போராட்டங்கள் தொடங்கும்போது ராகுல்காந்தி தென்கொரியாவுக்கு சென்றுவிட்டார். எனவே அவர் தூண்டிவிட்டார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தென்கொரியாவிலிருந்து திரும்பியதும்தான் காங்கிரஸ் கட்சி காந்தி சமாதியில் ஒரு போராட்டத்தை அறிவித்தது. அதில் வெளிப்படையாகவே மாணவர்களையும் இளைஞர்களையும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். நாடு முழுவதும் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான போராட்டங்களை பார்க்கிறவர்கள் யாரும் அதை யாரோ தூண்டிவிட்டு நடந்ததாக நினைக்க மாட்டார்கள்.
பாஜக அமைச்சரே பல்டி!
அசாம் மாநில பாஜக அரசில் நிதியமைச்சராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பேட்டி மோடிக்கு சரியான பதிலாக இருக்கும். மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கும் குடியுரிமை வழங்குவோம் என்று அவர் கூறியிருக்கிறார்.
மோடிக்கு அமித்ஷா சப்பைக்கட்டு!
மக்கள் போராட்டக் களத்தில் இறங்கிய பிறகும் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று கூறிய அமித்ஷாவும், என்ஆர்சி குறித்து மோடி சொன்ன பொய்யை உண்மையாக்க, அவர் பேசியதை அவரே மறுக்கிற நிலைக்கு சென்றிருக்கிறார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு என்ப்படும் என்ஆர்சிக்கும், தேசிய மக்கள்தொகை பதிவேடு எனப்படும் என்பிஆர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் விவரங்கள் என்ஆர்சிக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என்று கூறியிருக்கிறார். என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக இதுவரை நாடாளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ விவாதிக்கவில்லை. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி சொல்வது சரிதான் என்றும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.
சிதம்பரம் கிண்டல்
"பாஜக செயல் தலைவராக இருக்கிற நட்டா என்ஆர்சி அமல்படுத்தப்படும் என்கிறார். அமித்ஷா நாடாளுமன்றத்திலேயே என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்கிறார். ஆனால், மக்கள் போராட்டம் தீவிரமானதும் எல்லாவற்றையும் மறைக்கப் பார்க்கிறார்.
என்ஆர்சியால் மக்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை. அவர்களுக்காக அரசு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்ய வேண்டும். அசாமில் 19 லட்சம் பேரை குடியுரிமை அற்றவர்களாக அறிவித்துள்ளனர். அவர்களுக்காக முகாம்கள் கட்டப்படுவதாக சொல்லப்படுவதை மோடி மறுக்கிறார். ஆனால், படங்களுடன் செய்தி வருகிறது. 3 ஆயிரம் பேர் தங்குவதற்கு 40 கோடி செலவில் முகாம் கட்டப்படுகிறது. அப்படியானால், 19 லட்சம் பேரை தங்கவைக்க 24 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. இதெல்லாம் இப்போது தேவையா? இந்தியாவை இன்னொரு ஜெர்மனியாக மாற்றும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம்" என்று சிதம்பரம் கூறியிருக்கிறார்.