முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்திற்கு சென்னையில் இருந்த விமானம் மூலம் இன்று வந்தார். ஓமலூரில் உள்ள விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்பட எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.
தொடர்ந்து ஜெயலலிதாவைப் போல் பெண்களை வைத்து பூரண கும்ப மரியாதை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அப்போது, ஒரு அதிமுக தொண்டர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து, அண்ணோவ்... எட்டு வழிச்சாலை வேண்டாங்கண்ணா... நம்ம ஆளுங்களே பாதிக்கப்படுறாங்க... என்றார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தொடர்ந்து சேலத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன், நெருங்கிய உறவினர்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சேலம் வீட்டிலேயே தங்குகிறார். நாளை காலை கிருஷ்ணகிரியில் நடக்கும் சில திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கார் மூலமே நாளை இரவு சென்னை திரும்புகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எட்டு வழிச்சாலை வேண்டாம் என அதிமுக தொண்டர்கள் கூறியது பற்றி, அவர்களிடம் பேசினோம். இந்த பசுமை வழிச்சாலையால் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமல்ல. எங்கள் கட்சிக்காரர்கள் நிலமும் பறிபோகிறது. இந்த திட்டத்தால் ஆட்சிக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை சொல்லத்தான் விரும்பினோம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கும்பிட்டுக்கொண்டே போய்விட்டார் என்றார்கள். எட்டு வழிச் சாலை விவகாரம் அதிமுகவிலும் எரியத் தொடங்கியுள்ளது.