Skip to main content

டுபாக்கூர் கரன்சி! மாஃபியாக்களுடன் நித்தி! 

Published on 31/08/2020 | Edited on 02/09/2020
nithyananda

 

 

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிமை மிஞ்சும் சர்வதேச தீவிரவாதி மற்றும் போதை கடத்தல் கும்பல் தலைவனாக நித்தியானந்தா மாறி வருகிறார் என சீரியஸாகவே குற்றம் சாட்டுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில், அவரைக் கைது செய்து கொண்டுவர வேண்டும் என்கிற வாரண்ட் பெண்டிங்கில் இருக்கிறது. அவருக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ் பெண்டிங்கில் இருக்கிறது. கைது நடவடிக்கைகளுக்கு கரோனா காலம் தடையாக வந்தது. அதனால் மத்திய அரசும் விட்டு வைத்திருந்தது.

 

"நான் ஒரு பொறம்போக்கு'' என தன்னைத்தானே கூறிக்கொண்ட நித்தியானந்தா, தற்போது கைலாசா என்கிற தனி நாடு, அதற்கு ஒரு ரிசர்வ் வங்கி, தனி நாணயம் என அறிவித்து மத்திய அரசின் கோபத்தை கிளறிவிட்டிருக்கிறார். இதுபற்றி நம்மிடம் பேசிய மத்திய அரசு அதிகாரிகள், "இந்திய குடிமகன் ஒருவன் இதுபோல தன்னுடைய விருப்பத்திற்கு நாணயங்கள் அச்சிடுவது தேச விரோத குற்றமாகும். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தே இது ஒரு கடுமையான குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

 

நித்தியானந்தா இப்பொழுது இந்திய குடிமகன் இல்லை. மேற்கு இந்திய தீவுகள் நாடான பெலிஸ் என்கிற கியூபாவிற்கு பக்கத்தில் இருக்கும் நாட்டின் பாஸ்போர்ட்டை மூன்று கோடி ரூபாய் கொடுத்து பெற்றிருக்கிறார். வெறும் ஐந்து லட்சம் மக்கள் வசிக்கும் அந்த சிறு நாட்டில் துணை ஜனாதிபதி ஒரு இந்தியர். அத்துடன் செயிண்கிட்ஸ் என்கிற போபர்ஸ் ஊழலோடு தொடர்புடைய மற்றொரு நாட்டின் பாஸ்போர்ட்டையும் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே உள்ள மாநாடோ தீவில் கைலாசா பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் வங்கிக் கணக்குகளை வைத்துள்ளார். இந்த மூன்று தீவுகளுக்கிடையில் கப்பலில் சுற்றி வரும் நித்தியானந்தாவுடன், மலேசியாவைச் சேர்ந்த ஐந்து பேர், அமெரிக்க இந்தியர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். ஜனார்த் தன சர்மா மகள்கள் உள்ளிட்ட பெண்கள் மேற்கு இந்திய தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடைசியாக அவர்கள் பார்படோஸ் என்கிற மேற்கு இந்திய தீவில் காணப்பட்டார்கள்.

 

அங்கிருந்து நித்தி இருக்கும் தீவிற்கு வந்து செல்வார்கள். இந்த மூன்று தீவுகளில் ஒரு இடத்தில் அனைத்து விதமான தகவல் தொழில்நுட்பங்களுடன் ஸ்டூடியோவை நித்தி அமைத்திருக்கிறார். அங்கிருந்து வீடியோ எடுத்து அமெரிக்கா, ஆங்காங், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பக்தர்களுக்கு அனுப்புவார். அவர்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு ஐ.பி. முகவரிகள் மூலமாக அந்த வீடியோவை வெளியிடுவார்கள்.

 

nithyananda

 

குஜராத்தில் நித்தியின் ஆசிரமத்தை, குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட மாபிரனாப்பிரியா, மாஅசலா மற்றும் ஆண் துறவியான ரிஷி அட்வைதி ஆகியோர் நிர்வகிக்கிறார்கள். பெங்களூரு, திருவண்ணாமலை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் ஆசிரமங்கள் இயங்குகிறது. இதுதவிர உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா மையங்களை நடத்தி வருகிறார். அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

 

நித்தியின் தேவைகளை கவனிப்பதற்காக அவரது சமுதாயத்தைச் சேர்ந்த விஐபிக்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் மூலமாகத்தான் நித்திக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாஜக பிரமுகர்கள் கவனிக்கப்படுகிறார்கள். மொத்தம் 5 ஆயிரம் கோடி ரூபாயை சர்வதேச பணமாகவே வைத்திருக்கும் நித்தியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்தான் அபாயகரமானவையாக இருக்கிறது'' என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.

 

"மேற்கு இந்திய தீவுகள் உள்பட நித்தி நடமாடும் இடங்கள் எல்லாம் போதை பொருள் கடத்தலுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் பெயர் பெற்ற இடங்கள். இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நித்தி, அப்பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், மற்றும் வெளிநாட்டு கரன்சிகளுடன் சுற்றித் திரிவது சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் மற்றும் தீவிரவாத ஆதரவு மாஃபியா குழுக்களின் ஆதரவில்லாமல் நடக்காது.

 

மாஃபியா கும்பல் சொல்வதன் அடிப்படையில்தான் அவர் தனிநாடு, தனி கரன்சி, தனி ரிசர்வ் வங்கி என உருவாக்கியதாக அறிவித்துள்ளார். நித்தியின் செயல்களை ஐ.நா. உள்பட எந்த சர்வதேச அமைப்பும் அங்கீகரிக்கவில்லை. இந்தியாவில் இந்துக்கள் பாதுகாப்பான முறையில் வாழ வழியில்லை என அரசை விமர்சித்து ஐ.நா.வுக்கு நித்தி எழுதியதும், கைலாசா நாட்டை அங்கீகரிக்க சொல்லி அனுப்பிய கடிதமும் ஏற்கப்படவில்லை.

 

நித்தியின் செயல்பாடுகள் சர்வதேச அளவிலான சட்ட விரோத கும்பல்களின் செயல்பாடு களோடு ஒத்துப்போகிறதா என அமெரிக்கா உள்பட பல சர்வதேச நாடுகள் கவலையோடு உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கின்றன. கரோனா முடிந்தவுடன் இந்தியாவின் உதவியுடன் அத்தனை நாடுகளும் நித்தி மீது பாயத் தயாராக இருக்கின்றன.

 

இதிலிருந்து நித்தி தப்பிக்க வேண்டுமென்றால் தன்னிடம் உள்ள தங்கத்தையும், பணத்தையும் கொடுத்து சர்வதேச போதை கடத்தல் கும்பல்களுடன் சேர்ந்து தலைமறைவாகிவிட வேண்டும். இனி சாமியார் அவதாரமெல்லாம் நித்தி எடுக்க முடியாது என்கிறார்கள் சர்லவதேச காவல்துறை வட்டாரங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்