தேமுதிக தலைவர் விஜய்காந்தின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25-ல் வருகிறது. இவரது பிறந்தநாளை தேமுதிக தொண்டர்கள் தூள் பறக்க விடுவார்கள். ஆனால், சில வருடங்களாக விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டுவதில்லை. இந்த நிலையில், தற்போது தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய காலம் என்பதால், விழாவை பிரமாண்டமாக நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் நீண்ட நேரம் விவாதித்து வருகிறார் பிரேமலதா.
அவர்களிடம் விழா குறித்து விவாதித்து விட்டு தேர்தலை எதிர்கொள்வது பற்றி விரிவாக ஆலோசித்துள்ளார். அப்போது, அதிமுக கூட்டணியில் நமக்கு மரியாதை இல்லை என்பதையும், நாம் அதிமுகவினருடன் கூட்டணியில் இருப்பது அவர்களுக்குத்தான் நன்மை. நமக்கு எந்த பலனும் இல்லை. தேமுதிகவை வைத்து அதிமுகதான் அரசியல் ஆதாயம் அடைகிறது என்கிற ரீதியில் தேமுதிக மா.செ.க்கள் அனைவரும் தங்களின் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.
மா.செ.க்களின் குமுறல்களை கேட்ட பிரேமலதா, உங்களின் ஆதங்கம் புரிகிறது. உங்கள் உணர்வுதான் என்னுடைய உணர்வும். கேப்டனும் இதைத்தான் சொல்கிறார். அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்பதில் நம்பிக்கை இல்லை. சட்டமன்ற தேர்தலில் நம்மை மதிக்கும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு பிறகு கூட்டணி குறித்து பேசும் முந்தைய நடைமுறைகளை இனி பின்பற்றப்போவதில்லை.
இந்த முறை நவம்பர், டிசம்பருக்குள்ளேயே கூட்டணியையும், நமக்கான தொகுதிகள் தொடங்கி, நமது வேட்பாளர்கள் வரை அனைத்தையும் இறுதி செய்து முடித்து விடுவோம். 3 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், கேப்டனின் பிறந்தநாளில் இருந்து தேர்தல் பணிகளுக்கு தயாராகுங்கள். இந்த முறை நிச்சயம், மரியாதையான கூட்டணி அமைப்போம் என சொல்லி மா.செ.க்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் பிரேமலதா.