வீட்டிற்கு ஒரு நூலகம் தேவை என்ற பேரறிஞர் அண்ணாவின் கூர் வாக்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் தமிழறிஞர் பேராசிரியருமான மு.பி.பா என்கிற மு.பி.பாலசுப்பிரமணியன். அவரின் 80 வது முத்து விழாவை முன்னிட்டுத் தான் அவரது பிறந்த பூமியான நெல்லை மாவட்டத்தின் தென்காசி வட்டத்தில் வருகிற அய்யாபுரம் கிராமத்தின் காந்தி தெருவில் அமைக்கப்பட்ட புதிய நூலகத்தினை கடந்த மே 16 அன்று பட்டித் தொட்டியெல்லாம். பட்டிமன்றம் புகழ் ஓங்கும் நடுநாயகர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், சாகித்திய அகாடெமி விருதாளர், எழுத்தாளருமான பொன்னீலன் ரிப்பன் வெட்டிக் குத்துவிளக்கேற்றிய முகூர்த்தத்தில் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டதின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர், பேராசிரியைப் பெருந்தகைகளான அழகேசன், ஜாஸ்மீன் ஆசீர், பா வளன் அரச பேராசிரியர் மு.பி.பா அறக்கட்டளை அறங்காவளர்களான பா.இன்பவல்லி, முனைவர் பா. கலையரசி, முத்துக்குமரன், முத்துமிழ் செல்வன், உள்ளிட்ட பல்துறைச் சான்றோர்கள் ஊர் மக்கள் என்று பெரியதொரு கூட்டமே திரண்டிருந்தது. மட்டுமல்ல, பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் வந்து நூலகத் திறப்பைச் சிறப்பித்துள்ளனர். பேராசிரியர் மு.பி.பா.வின் தமிழ்வளர்ச்சி, அவரின் தமிழ் தொண்டு பற்றியவைகளுக்குள் போவதற்கு முன், ஐயாவின் பூர்வீகம் பற்றி ஒரு எட்டு பார்த்துவிடலாம்.

இதே அய்யாபுரம் கிராமத்தின் பிச்சைமுத்து, கண்ணியம்மாள் தம்பதியரின் மகன் தான் மு.பி.பா 16.05.1939-ல் பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர் மற்றும் இரு சகோதரிகள். பேராசிரியரான மு.பி.பா வின் மனைவியான இன்பவல்லியும் இதே கிராமத்தைச் சேர்ந்தவரே. இவர்களுக்கும் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஆரம்பத்தில் எம்.ஏ.தமிழ் பி.எச்.டி. முனைவர் பட்டம் பெற்றவர். பின்பு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் பணியிலிருந்தவர். தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு மாறுதலானார். கவிதை மேகங்கள், வாணிதாசன் கவிதை ஓர் ஆய்வு, மணமல்லி, உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதி தமிழுக்குச் சிறப்பு செய்துள்ளார். குறிப்பாக இவரின் கவிதை மேகங்கள் என்கிற புத்தகம் கல்லூரி பாடமாகவும் இடம் பெறுமளவுக்குச் சிறப்புப் பெற்றதுமல்லாமல் கவிதைகள் பள்ளிப் பாடப் புத்தங்களிலும் இடம் பிடித்துள்ளது, கவனிக்கத்தக்க தமிழ் தொண்டு.

இது போன்று மு.பி.பா தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமில்லாமல் குறிப்பாக சிங்கப்பூர் மலேசியா, கனடா, சுவிட்சர்லாந்த், என கடல் கடந்து தூர கிழக்கு நாடுகளிலும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் பேராசிரியர் மு.பி.பா. தற்போது தமிழாலயம், எனும் இரண்டு மாதம் ஒருமுறை பருவ இதழினையும் கடந்த 17 வருடங்களாக நடத்திவரும் மு.பி.பா. மத்திய அரசின் தணிக்கைக்குழு உறுப்பினராகவும், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் தமிழ் மன்றத்தில் துணைத் தலைவராகவும் இருந்தவர். பேராசிரியர் மு.பி.பாவின் தமிழ் சிறப்புத் தொண்டினைப் பாராட்டும் வகையில் அவரது 80- வது பிறந்த நாளின்போதே நூலகம் திறக்கப்பட்டதோடு உடன் அறக்கட்டளையும் தொடங்கப்பட்டது.

வீட்டிற்கு ஒரு புத்தகச் சாலை தேவை என்றார் பேரறிஞர் அண்ணா. ஒரு நூலகம் திறந்தால் ஒரு சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும் என்பது விவேகானந்தரின் வாக்கு.. பிரான்சிஸ் பேகனின் கணிப்பு வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்பதே. அந்த அடிப்படையில் தான் இந்த நூலகம் திறக்கப்பட்டது என்கிறார்கள் பேராசிரியர்கள். பெயரளவில் நூலகம் என்றில்லாமல் அது புத்தங்களின் புதையலாகவே உள்ளது. திராவிட இயக்க நூல்கள்,வரலாற்று நூல்கள், இந்திய தமிழக அளவில் நடைபெறுகிற சிவில் சர்வீஸ் குரூப் தேர்வுகள் டி.ன்.பி.எஸ்.சி, நேவி எஸ்.எஸ்.இ, வங்கித்தேர்வுகள், ஆர்.ஆர்.டி. வனத்துறை, இந்து சமயம், மற்றும் அறநிலைத்துறை, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல தரப்பட்ட அரசுத்துறைப் போட்டிகளுக்கான புத்தங்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவும், மருத்துவம், நீட் தேர்வு, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வு புத்தங்களுடன், இலக்கிய இலக்கண ஆய்வு நூல்கள், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் உள்பட தமிழ் வளர்ச்சிக்கானது என்று நகரத்திற்கு இணையானதொரு மெகா நூலகத்தை உள்ளடக்கிய மு.பி.பா.வின் அய்யாபுரம் நூலகம், நாட்டு நடப்பை அறிய தினசரி நாளிதழ்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும், மு.பி.பாவின் அறக்கட்டளை கல்விக்காகவும், நூலகத்தின் வளர்ச்சிக்காக, மக்கள் நலப்பணிக்காகவும், உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது அதன் முன்னோட்டமாக அய்யாபுரம் கிராமத்தின் தொடக்கப்பள்ளியின் 150 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் எழுது பொருட்களும் அளிக்கப்பட்டதோடு நலிந்த ஆடவர், பெண்டிர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டுள்ளன. புத்தகக் களஞ்சியமான அய்யாபுரம், பல்கலைகழகமாக மாறி வருகிறது.