Skip to main content

புதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு இல்லை -நாராயணசாமி திடீர் பேட்டி! 

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

narayanasamyகரோனா நோய்ப் பரவலை தடுக்கும் வகையில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. 
 


தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் கடலூர், விழுப்புரம், நாகை போன்ற புதுச்சேரி மாநிலத்தின் எல்லையோர பகுதிகளைச் சார்ந்த குடிவெறியர்கள் தமிழ்நாட்டுக்குள் மது பாட்டில்கள் வாங்க வருகின்றனர்.
 

அதையடுத்து புதுச்சேரி மாநிலத்திலும் மதுக்கடைகள் திறக்க நேற்று (18.05.2020) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
 

இதுகுறித்து நேற்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறக்க கடை உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் அரசின் வருவாயைக் கூட்ட புதுச்சேரியிலும் மதுபானக் கடைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (18.05.2020) முதல் மதுக்கடைகள் திறக்கப்படும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடை திறந்திருக்க வேண்டும்.  
 


மதுபானங்கள் வாங்குபவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் சாராயக்கடை, கள்ளுக்கடை என அனைத்து வகையான கடைகளும் திறக்க அனுமதித்துள்ளோம். அதேசமயம்  மதுபானங்களை  அமர்ந்து சாப்பிடும் வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
 

ஆனால் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "மதுக்கடைகளைக் காலை 7 மணியில் இருந்து திறக்க முடிவு எடுக்கப்பட்டது. வெளிநாட்டு மது வகைகளும் 5 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவை கூட்ட முடிவின் படி மதுபானக்கடைகள் திறக்க துணை நிலை ஆளுநர் ஒப்புதல் கிடைக்காததால் நாளை (19.05.2020) திறக்கப்படாது. துணை நிலை ஆளுநர் ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட வேண்டும். ஆதலால் நாளை (19.05.2020) மதுக்கடைகள் திறக்கப்படாது. அரசாணை வெளியிடப்பட்டு நாளை மறுநாள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 
 

 

 

 

Next Story

சாராயம் காய்ச்சி குடித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Published on 12/07/2024 | Edited on 13/07/2024
People admitted to hospital after drinking liquor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன்(65).  அடுப்புக்கரி வியாபாரம் செய்து வரும் இவர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலைக்குத் தெரியவர, உடனடியாக  மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருடன் தேவன் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியுள்ளார்.

சோதனையில்  சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த ஊறல் மற்றும் காய்ச்சி வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றினர். மேலும் தேவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, சாராயத்தைக் காய்ச்சி தன்னிடம் வேலை செய்யும் மணி, பெருமாள், அய்யனார், ராதா கிருஷ்ணன், மதுரை ஆகிய 5 பேருக்கு குடிக்கக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் அதில் 3 பேரை  பிடித்து முழு மருத்துவ பரிசோதனை செய்தனர். மூவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று  மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கைக்காக அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எஞ்சியுள்ள 2 பேருடன் சேர்த்து 5 பேரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

படுஜோராக நடக்கும் மதுபாட்டில் விற்பனை; சர்ச்சையை கிளப்பும் கள்ளச்சந்தை  விவகாரம்!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Liquor bottles are sold in the black market in Tirupur district

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை அடுத்து அதனை ஒடுக்கும் நடவடிக்கையாக, போதைப்பொருள் தடுப்பு வேட்டையில், போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் ஆங்காங்கே கைது சம்பவங்களும், போதைப் பொருட்கள் பறிமுதல்களும் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவது குறைந்தபாடில்லை. அரசு மதுபாட்டிலைவிட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், கிராமப் புறங்களில் இருக்கும் குடிமகன்கள் இரு சக்கர வாகனங்கள் மூலம் கள்ளச் சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுகின்றனர். கள்ளச்சாராயம் மிகவும் குறைந்த விலை என்பதால் ஏராளமான இளைஞர்களும் சாராயம் குடிக்கத் தொடங்கினர். இதனால் திறந்தவெளி பகுதியில் பட்டப்பகல் நேரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதும் அந்த சாராயத்தை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

ஆனால், கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடக்கும் சாராய விற்பனைகள் பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. இதை தடுத்தாலும் மறுபுறம் அரசு டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்று அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். 24 மணி நேரமும் நடக்கும் இந்த மதுபான விற்பனை சுற்றுவட்டார பகுதிகளில் படுஜோராக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலிபாளையம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை தவிர அந்த பகுதியில் வேறு எந்த கடைகளும் இல்லாததால் அங்கு ஏராளமான சந்துக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தகவலை தெரிந்துகொண்ட மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஒரு சில சந்துக்கடைகளில் உள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்து பெயர் அளவிற்கு கைது நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கூலிப்பாளையம் நால்ரோடு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி அதிகாலை நேரத்திலும் நள்ளிரவு நேரத்திலும் மதுபாட்டில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.  அதே வேளையில், இதனை கண்டும் காணாதபடி இருக்கும் உள்ளூர் காக்கிகள்.. விற்பனையாளர்களிடம் அதிகளவில் பணம் வாங்குகின்றனர். இதனிடையே, நால்ரோடு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அதிகாலை நேரத்தில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சந்தையில் விற்கப்படும்  மது வகைகளால்.. கள்ளச்சாரயத்தை போன்று பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக, விதிகளை மீறி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.