Skip to main content

"எனக்கும் பாலகுமாரனுக்கும் எப்போதும் மோதல் தான்" - நினைவுகளைப் பகிர்ந்த நக்கீரன் ஆசிரியர்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

 Nakkheeran Gopal Spoke about balakumaran

 

எழுத்தாளர் பாலகுமாரன் அறக்கட்டளை சார்பில் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் இலக்கிய விருது வழங்கும் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. 2023க்கான விருது எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன், நடிகர் டெல்லி கணேஷ், நக்கீரன் ஆசிரியர், ஜோதிடர் ஷெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர் பேசியதாவது: “இந்த விழாவில் தானாக விருப்பப்பட்டு கலந்துகொண்டு விருதுகளை வழங்கிச் சிறப்பித்த நல்ல மனிதர்; நக்கீரனின் வாசகர்; நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் அவர்களுக்கு நன்றி. பாலகுமாரன் அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களைச் சேர்த்து வைத்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. அவரைப் போன்ற உயரத்தில் இருப்பவர்கள் என்னை நண்பர் என்று சொல்வது எனக்குப் பெருமை. வண்ணநிலவன் அவர்கள் எவ்வளவு தைரியமானவர் என்று அனைவரும் பேசினார்கள். ஆனால், அவர் எவ்வளவு பயப்படுவார் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். 

 

தன்னுடைய வீட்டின் மாடியில் இருக்கும் ஒருவர் தொந்தரவு செய்வதால் அவரை காலி செய்ய வைக்க உதவ வேண்டும் என்று என்னிடம் ஒருமுறை வண்ணநிலவன் புகார் கொடுத்தார். அவருக்கு இந்த விருதை வழங்குவது விருதுக்கே பெருமை. ஒரு மாநில பத்திரிகையாக இருக்கும் எங்களுக்கு பிரதமரை பேட்டி எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அண்ணன் இல.கணேசன் அவர்கள் தான். அந்தப் பேட்டி நக்கீரனின் மகுடத்தில் ஒரு வைரக்கல்லாக இருக்கிறது. ஷெல்வி அவர்கள் நல்ல மனிதர்; நல்ல நண்பர். ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் அனைவரையும் அன்போடு அரவணைத்துச் செல்பவர். 

 

நமக்கும் பாலகுமாரனுக்கும் சண்டையில் தான் முதலில் தொடர்பு ஆரம்பித்தது. அதன் பிறகு எனக்கு நல்ல நண்பராக மாறினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த பிரச்சனைகளை நாங்கள் படமெடுத்தோம். அந்தக் கதையை என்னிடம் முழுமையாகக் கேட்டு அதை வைத்து ஒரு தொடர் எழுதினார் பாலகுமாரன். நாயகன் படத்தின் இறுதியில் அவர் எழுதிய "நீங்க நல்லவரா கெட்டவரா?" என்கிற வசனத்தை யாராலும் மறக்க முடியாது. அவரோடு நாம் ஒன்றாக வாழ்ந்தோம் என்பதே மகிழ்ச்சி. பாலகுமாரன் அவர்கள் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் நிரூபணமாகிறது.”