மணிப்பூர் கலவரம் குறித்து தன்னுடைய கருத்துக்களை நக்கீரன் ஆசிரியர் கோபால் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்
மணிப்பூர் கலவரம் என்பது ஒரு தேசிய அவமானம். 140 கோடி மக்களும் வெட்கித் தலைகுனிகிறார்கள். இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி, வெறிநாய்கள் வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளன. இது சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்திராத ஒரு கொடூரம். இந்த ஒரு வீடியோ நம் நாட்டின் முகத்திரையைக் கிழித்துவிட்டது. வீடியோ வந்த பிறகுதான் பிரதமரே முழிக்கிறார். அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பேட்டி கொடுக்கிறார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த விஷயம் தெரிந்தும் காது கேளாதவர்கள் போல் இவ்வளவு நாட்கள் இருந்துள்ளனர்.
இந்தக் கலவரம் நடந்தபோது மோடியும், அமித்ஷாவும் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தனர். கலவரம் வந்தால் தடுப்பதும், கலவரம் நடக்காமல் தடுப்பதும் தான் உள்துறையின் வேலை. எப்படி நடந்தது இந்தக் கொடூரம்? "இந்தியா அனைவருக்குமான இல்லம்" என்று மோடி அமெரிக்காவில் பேசினார். ஆனால் ஆளும் பாஜகவினருக்கு மட்டும்தான் இந்தியா இல்லமாக இருக்கிறது. சிறுபான்மையினர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு இது வதைமுகாம் போல் காட்சியளிக்கிறது. வெளிவந்திருக்கும் வீடியோ என்பது ஒரு சாம்பிள் தான். இதுபோல் மொத்தம் எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
தன்னுடைய மனைவியை தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்று ஒரு இராணுவ வீரரே கண்ணீர் விட்டிருக்கிறார். காவல்துறையின் உதவியோடுதான் இத்தனை அட்டூழியங்களும் நடைபெற்றிருக்கிறது, அரசாங்கம் ஒரு சார்பாக இருக்கிறது என்று அங்குள்ள பாஜக எம்.எல்.ஏ ஒருவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசினால் வேங்கைவயல் பிரச்சனையைப் பேசி திசை திருப்புகின்றனர். வேங்கைவயல் பிரச்சனை மன்னிக்க முடியாத குற்றம்தான். அதைவிட 100 மடங்கு பெரிய குற்றம் இப்போது மணிப்பூரில் நடந்து வருகிறது.
அங்கு நடக்கவில்லையா, இங்கு நடக்கவில்லையா என்று பாஜக ஆதரவாளர்கள் தொலைக்காட்சிகளில் பேசி வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் இதுவரை மணிப்பூர் சம்பவம் போல் எதுவும் நடந்ததில்லை. அடிப்படை மருத்துவம் கூட கிடைக்கவில்லை என்று அங்குள்ள மக்கள் அழுகின்றனர். அதன் பிறகும் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசுபவர்களை எதைக்கொண்டு அடிப்பது? மணிப்பூரில் உள்ள கனிம வளங்களை பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கும் தொழிலதிபர்கள் அபகரிக்க முயற்சி செய்ததுதான் இதற்கான தொடக்கப்புள்ளி.
கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு அங்கிருக்கும் குக்கி இன மக்களை விரட்டியடிக்க வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்தனர். எதையோ செய்து தொலையுங்கள். ஆனால் அதற்காக அங்குள்ள பெண்களை ஏன் இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்கள்? இவ்வளவு கொடூரங்கள் நடக்கும் மணிப்பூரிலும், மத்தியிலும் ஆட்சியில் தொடர்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. எத்தனையோ தேவாலயங்கள், வீடுகள் அங்கு எரிக்கப்பட்டுள்ளன. மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் மீதுதான் அனைத்து தாக்குதலும் நடைபெற்றுள்ளது. கொலையைத் தொழிலாக வைத்திருக்கும் கொலைகாரனை விட மோசமானது இந்த அரசு.