Skip to main content

'கை' சின்னத்தில் கமல் போட்டியா?  - மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் விளக்கம்!

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

 Murali Abbas | MNM | Kamal Haasan | Rahul Gandhi |

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சி உருவாகி அடுத்த 14மாதத்தில் 2019 மக்களவை தேர்தலை சந்தித்தது. எனவே, வரவிருக்கும் தேர்தலுக்கு நாங்கள் தயாராகத் தான் இருக்கிறோம். சமீபத்தில் நடந்த எங்கள் செயற்குழு கூட்டத்தில், கூட்டணி குறித்து தலைவர் முடிவெடுப்பார் என முடிவெடுத்தோம். ஆனால், நிச்சயம் அது என்.டி.ஏ. கூட்டணியாக இருக்காது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பின்னர், இ.ந்.தி.யா. வுடன் கூட்டணி வைக்கிறோமா அல்ல தனித்து போட்டியிடுவதா என்பதை தலைவர் தான் தீர்மானிப்பார். சமீபத்தில் கூட, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு கமல் அவர்கள் ஆதரவு தெரிவித்தார்.

 

மேலும், கர்நாடக தேர்தல், ஈரோடு இடைத் தேர்தலிலும் ஆதரவளித்தார். ஆகையால், எங்களுக்கும் காங்கிரஸிற்கும் நெருங்கிய நடப்பு இருக்கிறது. கூட்டணி குறித்து உகந்த சூழல் வரும்போது அடுத்தடுத்த கட்டங்களில் முடிவுகள் எட்டப்படும். இ.ந்.தி.யா. கூட்டணியில் தி.மு.க. இருப்பது எந்தவிதத்திலும் பிரச்சனை இல்லை. நாங்கள் இன்றைக்கு முயல்வது மத்தியில் பத்து வருடம் ஆளும் பாஜகவின் ஆட்சியை மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு உதவவே. ஏனென்றால், சமீபத்தில் கூட அரசியலமைப்பில் சோசலிச மதச்சார்பற்ற போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு சர்ச்சையானது. இதனையெல்லாம் வைத்து தான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்கிறோம். காங்கிரஸ் ஆட்சியமைக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. ஆனால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமா என்பது கூடிய விரைவில் தீர்மானிக்கப்படும்.  

 

மக்கள் நீதி மய்யம் துவங்கி 14 மாதங்களில் பெரிய தேர்தலை சந்தித்த அனுபவம் எங்களிடம் உள்ளது. மேலும், மய்யம் என்ற புதிய கருத்தியலை கொண்டு வருகையில் அதற்கு வரவேற்பு சற்று குறைவாக இருக்கும் என்பதும் அறிந்ததே. எனவே, முதல் தேர்தலில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தத் தேர்தலில் வெற்றியை பெற முயல்வோம். மேலும், நாங்கள் முன்னின்று நடத்திய மாதிரி கிராம சபைக் கூட்டங்கள், முதலில் அறிவித்த பெண்களுக்கு மாத ஊதியம் ஆகியவை இன்றைக்கு தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றுகிறது. மக்கள் நீதி மையம் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில், பிற கட்சிகள் அதனை நிறைவேற்றக் கூடிய சூழலை உருவாக்குகிறோம். ஆதலால், நாங்கள் படிப்படியாக வளரவே விரும்புகிறோம். மேலும், நாளை முதல்வராகும் கனவில் நாங்கள் தேர்தலுக்கு வரவில்லை. கட்சியின் எதிர்காலம் குறித்து தலைவர் கமல் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு நாங்கள் செயல்படவுள்ளோம். 

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியது முதல் வேறு கட்சிகளில் இருந்து எவரும் இங்கு வரவில்லை. காரணம், அவர்களின் வழக்கமான அரசியல் முறைகளை நாங்கள் பின்பற்றுவதில்லை என்பது.மற்றும் எங்கள் கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களால் நிர்வாகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால், அந்த இடத்திற்கு வேறொரு தொண்டன் அடுத்து தயாராகுவார். நான் துணிச்சலாக சொல்வேன் மக்களிடம், வேறெந்த கட்சிக்கும் இல்லாத மதிப்பு எங்கள் கட்சிக்கு இருக்கிறது. இதற்கு, எங்களின் தனித்துவ நேர்மையும், கொள்கையும் தான் காரணம். ஏன், 2021 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதைவிட, கமல் தோல்வி அடைந்ததை நினைத்து மக்கள் வருந்தினார்கள். மேலும், அனைத்து கிராமங்களில் எங்கள் கட்சிக் கொடிகள் இருக்கவும் செயல்பட்டு வருகிறோம். 

 

சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியல் செய்வது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே வந்தது. அவர், 1972ல் கட்சியைத் தொடங்கி 1977ல் ஆட்சியை கைப்பற்றினார். இதற்கிடையில் 14 படங்களில் நடித்தார். இருந்தும், மக்களுடனான தொடர்பும், அரசியல் வேலைகளும் தடைபடவில்லை. அதுபோலத் தான் கமல் அவர்களும். முன்பு, சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றார். தற்போது, அரசியலில் இருந்து சினிமாவிற்கு செல்கிறார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களுடன் நேரடியாக உரையாடுவதால் கட்சி மேலும் பலமாகிறது. 

 

மத்திய-மாநில நிர்வாகம் இருக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அர்த்தமில்லாத செயல். மேலும், இது குழப்பத்தில் தான் முடியும். தொடர்ந்து, இதனால் மாநிலத்தின் தனித்தன்மை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், மாநில அரசின் தேவைகள் வேறு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தலினால் மத்திய அரசின் கொள்கைகளுக்கு முன்னுரிமை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, ஒரே தேசம் என்று சொல்வது உணர்ச்சிவசமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை. 

 

மகளிருக்கான 33% சதவிகித ஒதுக்கீட்டை கமல் அவர்கள் புரட்சிகரமானது என்று கூறியுள்ளார். இது தான் எங்களின் நிலைப்பாடும். ஆனால், இது தற்போது செயல்படுத்த முடியாது என்பதால் கனவுத்திட்டமாக மாறிவிடக் கூடாது. மேலும், இதில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாட்டின் பங்கு தேசிய அரசியலில் குறையும். ஏனென்றால், தமிழகத்தில் குடும்பக்கட்டுப்பாடு விதிகளின் படி முறையாக மக்கள் தொகையை குறைத்துள்ளோம். இதனால், உ.பி. போன்ற மாநிலங்களுக்கு 11 எம்.பி. அதிகரிக்கும். இருந்தும், இட ஒதுக்கீடு கொண்டுவந்ததை பாராட்ட வேண்டும்.

 

உதயநிதி சனாதனம் அழிய வேண்டும் என்கிறார், எனில் அதற்கான எதிர் வாதத்தை வைக்க வேண்டும். மாறாக, குற்றச்சாட்டை மாற்றி பரபரப்பை ஏற்படுத்தக் கூடாது. நீங்களும் உங்கள் மேடைகளில் இது குறித்து தர்க்கம் செய்யுங்கள். எதனையும் கேள்வி கேட்கலாம்... கேள்வி கேட்கப்படாத ஒன்று உலகத்தில் இல்லை என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு. 

 

மேலும், தேர்தல் வருவதற்கு 200 நாட்களுக்கு முன்னர் கூட்டணி குறித்து பேச வேண்டாம் என நினைக்கிறேன். ஆனால், நிச்சயம் ம.நீ.ம. தலைவர் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் அவரின் குரல் ஒலிக்கும். ஆகையால், கூட்டணி குறித்து தற்போது பேச விரும்பவில்லை. கமல் போன்ற அறிவுடையவர் நாட்டு மக்களின் சார்பில் கருத்துகளை நாடாளுமன்றத்தில் பேசவே, அவருக்காக நாங்கள் இந்தத் தேர்தலில் உழைக்கிறோம். தொடர்ந்து, இந்த தேர்தலில் கை சின்னத்தில் நிற்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. கட்சியை வளர்ப்பது தான் தலைவரின் முடிவு.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...