Skip to main content

கத்திப் பேசினால் உண்மையாகிடுமா மோடி?

Published on 11/02/2018 | Edited on 12/02/2018

இந்திய நாடாளுமன்றத்தில் இப்படியோர் பிரதமர் இதுவரை கத்திப் பேசியதில்லை. அந்த அளவுக்கு பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல, தொண்டை கிழிய கத்தியிருக்கிறார். இது அவருடைய விரக்தியை வெளிப்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறும் அளவுக்கு சென்றுள்ளது.

 

modi

 

தனது அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை அடுக்கடுக்காக அடுக்கி, எதிர்க்கட்சிகளை திணறடிக்க வேண்டிய பிரதமர், தனது இயலாமையை மறைக்க தொண்டையை பெரிதாக்கியிருக்கிறார்.

 

மெதுவாக பேசினாலே எல்லோர் காதுக்குள்ளும் தெளிவாகக் கேட்கும் வகையில் நாடாளுமன்றத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, மோடி ஏன் இப்படி கத்துகிறார்? பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசினால்தான் அவருக்கு பேச்சு வருமா என்று இன்றைய இளம் தலைமுறையினர் கிண்டல் செய்யும் அளவுக்கு அவர் தன்னைத்தானே கேலிப் பொருளாக்கிக் கொண்டுள்ளார்.

 

சரி அவர் பேசியதில் முக்கியமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

 

குடியரசுத்தலைவரின் பேச்சு ஒரு கட்சிக்கு சொந்தமானதல்லஅதை மதிக்கவேண்டும்எதிர்க்க வேண்டும் 

என்பதற்காக அதை எதிர்க்கக்கூடாது. நேருவால் இந்தியாவுக்கு ஜனநாயகம் கிடைத்தது என்று நம்ப வைக்க முடியாது. பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரத்திலும், தேசத்திலும் இந்தியாவில் ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்கிறார் மோடி. 

மோடி சொல்வதை உண்மை என்று ஏற்றாலும், இதற்கு முன் பாஜக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் உரையை எப்படி மதித்திருக்கிறது என்பதை இந்த நாடு பார்க்கவில்லையா? மோடி அப்போது முதல்வராக இருந்ததால் தனக்கு தெரியாது என்பாரா?

 

அதுபோகட்டும், நேருவால் ஜனநாயகம் கிடைக்கவில்லை என்கிறார். அதுவும் உண்மைதான். ஆனால், இந்தியாவில் மக்களை சாதியால் பிரித்து, அதையே தர்மம் என்று பெயர்சூட்டியதைத்தான் ஜனநாயகம் என்று சொல்ல வருகிறாரா மோடி? படிக்க உரிமையற்று, சில தெருக்களில் நடக்க உரிமையற்று, மேலாடை அணிய உரிமையற்று இருந்தனரே அதைத்தான் ஜனநாயகம் என்கிறார் மோடி? விலங்குகளுக்கு கிடைத்த உரிமைகூட மக்களுக்குக் கிடைக்காமல் செய்தார்களே பார்ப்பனர்கள், அதைத்தான் ஜனநாயகம் என்கிறாரா மோடி?

 

அடுத்து இன்னொரு விஷயத்தை சொல்கிறார் மோடி. அதாவது, சர்தார் வல்லபபாய் படேல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தமாக இருந்திருக்கும் என்கிறார். இது நடந்திருக்குமா? காஷ்மீர் என்பது இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்ததா? என்பதையெல்லாம் பார்த்தால் மோடி, தனது விருப்பத்துக்கு அள்ளி விடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

சற்று விவரமாக பார்த்தால் இந்தியாவுக்கு பிரிட்டிஷ்காரர்கள் விடுதலை கொடுக்கும்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் சொந்தமில்லாமல், 565 சமஸ்தானங்கள் இருந்தன. இவை சுதந்திரமானவை. சத்ரபதி, மகாராஜா, ராஜா, ராஜே, தேஷ்முக், நவாப், என்று பல்வேறு ஆட்சியாளர்களின் தலைமையில் இந்த சமஸ்தானங்கள் இருந்தன. இவை, இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ தாங்கள் விரும்பும் எந்த நாட்டுடனும் இணைந்துகொள்ளலாம்.

விடுதலை ஆடைந்த மூன்று மாதங்களில் பாகிஸ்தானுடன் தாமாகவே சில சமஸ்தானங்கள் இணைந்தன.

ஆனால், இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்த வல்லபபாய் படேல், ராணுவத்தை கையில் வைத்துக்கொண்டு அந்த சமஸ்தானங்களை மிரட்டினார் என்பதுதான் வரலாறு. பிரிட்டிஷ் ராணுவ பலத்தை நம்பியிருந்த சமஸ்தானங்கள் இப்போது, இந்தியாவின் மிரட்டலை சந்திக்க வேண்டியிருந்தது என்பதுதான் உண்மை. பிரிட்டிஷ்காரன் கொடுத்திருந்த சுதந்திரத்தைக்கூட விடுதலை பெற்ற இந்தியா கொடுக்கவில்லை என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும்.

 

modi

 

இப்படித்தான் இஸ்லாமியர்களை அதிகமான ஜனத்தொகையைக் கொண்ட காஷ்மீரின் மன்னராக இந்து மதத்தைச் சேரந்த ஹர்சிங் என்பவர் இருந்தார். அவர், இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைய விரும்பவில்லை என்று முடிவெடுத்தார். அவருடைய முடிவை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டது. ஆனால், படேல் காஷ்மீரை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்தே, பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. காஷ்மீரின் பாதிக்குமேற்பட்ட பகுதியை அது கைப்பற்றியது. படேல் பிரதமராக இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். பாவம் மோடி, அவருக்குத் தெரிந்த வரலாறும் பொய்களால் வரையப்பட்டதுதானே. இப்படித்தான் பேசுவார்.

 

இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியிருந்தால், அதற்கேற்ற திட்டங்களை தீட்டியிருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும் என்கிறார் மோடி. அதேசமயம், முந்தைய அரசுகளின் பங்களிப்பால்தான் இந்த நாடு இவ்வளவு உயரத்துக்கு வந்திருக்கிறது என்று அவரே பதிலும் சொல்லிக் கொள்கிறார்.

 

ஆர்எஸ்எஸ்சைப் போல, பாஜகவைப் போல, மக்களை பிரி்த்து, அவர்களுக்கு இடையே சாதி மத மோதல்களை ஏற்படுத்தி, அந்த வெப்பத்தில் குளிர்காயும் கட்சிகள் இருக்கும்வரை அரசுகள் எந்தத் திட்டத்தையும் உருப்படியாக செய்ய முடியாது.

 

அணைகளைக் கட்டவும், மின் திட்டங்கள் கட்டவும் பொறியாளர்கள் தேவை, ஏழை மக்களுக்கும் மருத்துவம் கிடைக்க மருத்துவர்கள் தேவை என்று நேரு அறைகூவல் விடுத்தார். ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் பாபர் மசூதியை இடிக்க கரசேவகர்களைக் கேட்டது. ரயில்பெட்டியில் தீ வைத்துவிட்டு, அப்பாவி முஸ்லிம்களை வெட்டிக் கொன்றது. இன்றுவரை பசு மூத்திரத்தை மருந்து என்றுதானே பாஜக சொல்கிறது.

 

மக்கள் எந்த உணவை உண்ணவேண்டும் என்ற உரிமையைக்கூட மக்களுக்குத் தர விருப்பமில்லாத மோடி அரசு ஜனநாயகம் பற்றி பேசலாம்? மாடுகளை விற்கவோ, வாங்கவோ, கறியாக்கி உண்ணவோ தனி மனிதனுக்கு உரிமையுண்டு என்பதைக்கூட ஏற்காத காட்டுமிராண்டிகளுக்கு வக்காலத்து வாங்கும் அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது?

 

இன்றைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத கையாலாகாத அரசாக இருந்துகொண்டு, தொண்டை கிழிய கத்திப் பேசுவதால், பேசுகிற அனைத்தும் உண்மையாகிவிடும் என்று நினைக்கிறாரா மோடி?

 

ஆதார் கார்டு திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாரென்றால், நேர்மையில்லாதவர்களும், ஊழல் செய்பவர்களும், இடைத்தரகர்களும்தான் எதிர்க்கிறார்கள் என்று மோடி சொல்கிறார்.

 

இதே மோடிதானே, முதல்வராக இருக்கும்போது ஆதார் கார்டு திட்டத்தை எதிர்த்தார். 2014 தேர்தல் வாக்குறுதியிலேயே ஆதார் திட்டத்தை நிறுத்துவோம் என்றுதானே கூறியிருந்தார்கள். அந்தத் திட்டத்தில் இவர்களுக்கு ஏதோ லாபம் இருப்பதால்தான் அதைத் தொடருகிறார்கள் என்று பொதுமக்களே ரொம்பநாளா பேசிக் கொள்வது இவர்களுக்கு தெரியாதா என்ன?

 

உண்மைகள் வெளிப்படும்போது உதறல் எடுப்பதும், உதறலை மறைக்க உரக்கப் பேசுவதும் மனிதர்களின் இயல்புதானே. பாவம் மோடிக்கு இப்போதே 2019 மக்களவைத் தேர்தலை நினைத்து உதறல் எடுக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டார்.

Next Story

பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Tamilnadu Cm condemns  Prime Minister Narendra Modi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை (01-03-24) பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது. இது தொடர்பாக, அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ‘இந்திய ஒன்றிய ஆட்சி மாற்றமே, இனிய பிறந்தநாள் பரிசாகும்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் என் பிறந்தநாள் செய்தி மடல். பிறந்தது முதலே தி.மு.க.காரன் என்பதுதான் என் நிரந்தரப் பெருமிதம். எனக்கு நினைவு தெரிந்த வயது முதல், என் பிறந்தநாளான மார்ச் 1-ஆம் நாளன்று தலைவர் கலைஞரையும், தாயார் தயாளு அம்மா அவர்களையும் வணங்கி வாழ்த்துகள் பெறுவதே என் முதல் கடமையாக இருக்கும். இப்போதும் தலைவர் கலைஞர் படத்தின் முன் வணங்குகிறேன். அம்மாவை அரவணைத்து வாழ்த்து பெறுகிறேன். உடன்பிறப்புகளாம் உங்கள் முகம் கண்டு உவகை கொள்கிறேன். உங்களின் வாழ்த்துகள்தான், நான் ஓயாமல் உழைத்திட ஊக்கம் தருகின்றன.

இத்தகைய திராவிட மாடல் ஆட்சியானது இன்று இந்தியா முழுவதும் கவனிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் மாபெரும் ஜனநாயகக் கடமை ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்திட நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிகமிக முக்கியமானதாகும். பாசிசத்தை வீழ்த்திட, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட மாநில உரிமைகளை மீட்டிட, ‘இந்தியா’ கூட்டணி வென்றிட வேண்டும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயகக் போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.வைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டித் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட்டங்களுக்குத் தடையாக இருந்தோமா? ஒன்றிய அரசின் எந்தத் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதைச் சொல்லட்டும். பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர்.

நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச் சாலையில் தடைக்கல் எழுப்புகிறார்கள். அதை எதிர்க்கத்தான் செய்வோம். மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தோம். உழவர்களை, நிலத்தில் இருந்து விரட்டுவது அது. குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மையினர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் எதிரானது. எதிர்க்கிறோம். எதை எதிர்க்கிறோமோ, அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டுத்தான் எதிர்க்கிறோம். 

Tamilnadu Cm condemns  Prime Minister Narendra Modi

ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பா.ஜ.க.வுக்கு உண்டு. 

கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன். பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் 'இந்தியா' கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் 'இந்தியா' கூட்டணிக் கட்சிக் கட்சிகளை பா.ஜ.க. தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது. 

‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ ஒலித்திடும் வகையில் உடன்பிறப்புகளின் களப்பணிகள் வீடு வீடாகத் தொடரட்டும். ‘நாற்பதும் நமதே - நாடும் நமதே’ என்கிற இலக்கினை அடைந்திடும் வகையில் உங்களின் உழைப்பு அமையட்டும். அது இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கட்டும். அதுதான் உடன்பிறப்புகளாகிய நீங்கள் உங்களில் ஒருவனான எனக்கு வழங்கிடும் இனிய பிறந்தநாள் பரிசாகும்.  கலைஞருக்கு அவரது நூற்றாண்டு விழாவில் நாம் அளிக்கும் உண்மையான பரிசாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

'பெயரைக் கூட பிரதமர் உச்சரிக்கவில்லை'- திமுக எம்.பி.கனிமொழி காட்டம்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
'Prime Minister did not even pronounce the name' - DMK MP Kanimozhi reply

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடியில், நடைபெற்ற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 4,586 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு சாலை திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.  தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னேற்றம் அடைந்த இந்திய வரைபடத்தின் எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்ச்சி. மத்திய அரசின் துறைமுகம் சார்ந்த திட்ட முதலீடுகளால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கோரிக்கைகளாக மட்டுமே இருந்த திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் படகு சேவை காசியில் கங்கை நதியிலும் பயணிக்க இருக்கிறது. தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகம் விரிவுபடுத்தப்படும் என்ற எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலை பணிகளையும் இன்று தொடங்கி வைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனது சாதனைகளை வெளியிட விடாமல் தொலைக்காட்சிகளை தமிழக அரசு தடுக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர் கொண்டு தமிழக வளர்ச்சிக்கு பாடுபடுவேன். மத்திய அரசால் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன' என்றார்.

nn

இந்நிலையில் 'திமுகவின் தொடர் வலியுறுத்தல்கள் மூலமாக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் கலைஞர் அவர்களின் கனவு நனவாகியுள்ளது' என திமுகவின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் தொடர் கடிதங்கள், நாடாளுமன்றத்தில் கோரிக்கை, துறைசார் அமைச்சர்கள் - அதிகாரிகள் சந்திப்பு என பத்து ஆண்டுகால நம் விடாமுயற்சியால் இன்று அடிக்கல் நாட்டப்படும் இத்திட்டம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு மோடி அரசு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தது என கேள்வி எழுப்பியுள்ள கனிமொழி, 'மாநில அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது பாஜக தான். ஒன்றியத்தின் பல திட்டங்களுக்கு மாநில அரசே நிதியை செலவிடுகிறது. திமுக காணாமல் போகும் என்று சொல்பவர்கள் தான் காணாமல் போகிறார்கள். திமுக இருந்து கொண்டே தான் இருக்கிறது. தூத்துக்குடி அரசு விழாவில் அமைச்சர் எ.வ.வேலுவும் நானும் பங்கேற்றோம். எங்களது பெயரைக் கூட பிரதமர் உச்சரிக்கவில்லை. மக்கள் உரிமைக்காக போராடும் இயக்கம் திமுக என்பதை அறிந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோமே தவிர  அயோத்தி பிரச்சனை தொடர்பாக நாங்கள் வெளிநடப்பு செய்யவில்லை''என தெரிவித்துள்ளார்.