காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் - மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக பஸ் வசதிகள் இல்லாத கிராமப்புறங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் சைக்கிள் மற்றும் மொபட் பைக்கில் சென்று ஜவுளி வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர்.
அப்போது அவர்களுக்கு ஜவுளிக்காரர் என்ற அடைமொழியுடன் நல்ல வரவேற்பும், வருவாயும் இருந்து வந்தது. காலப்போக்கில் பிரமாண்டமான ஜவுளிக்கடை முதலாளிகள் தங்கள் கடைகளுக்கு வாடிக்கையாளர்களை வரவழைக்க நடிகர்கள், நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்ததால் கவர்ச்சிகரமாக இத்தொழில் மாறியது. இதனால் சைக்கிள், மொபட் ஜவுளிக்காரர்கள் பாதிக்கப்பட்டு ஜவுளி அதிபர்கள் பலர் உருவாகினார்கள்.
இது ஒருபுறம் இருக்க பழைய பாரம்பரியம் குலத்தொழில் காணாமல் போய்விடக் கூடாது என விழுப்புரம், வேலூர், திருக்கோயிலூர், ஆரணி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட ஜவுளிக்காரர்கள் தற்போது அவர்கள் வைத்திருந்த மொபட் பைக்குகளை 3 சக்கரமாக மாற்றி, அதை கடைபோன்று அமைத்து நடமாடும் ஜவுளிக்கடை என்று பெயர் வைத்து மீண்டும் கிராமப் பகுதிகளுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விழுப்புரம் சின்னசாமி என்பவரிடம் கேட்டபோது, மீண்டும் கல்பாக்கம் மாமல்லபுரம் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளுக்கு ஜவுளிக்காரராக வியாபாரத்துக்கு வந்தேன். பெண்களிடம் நடமாடும் ஜவுளிக்கடை என்ற இந்த வண்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.