Skip to main content

நடராஜனின் டெத் சர்டிபிகேட் எங்கே? - கேட்ட நீதிமன்றம், குழப்பிய உறவுகள்

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

மூளைச் சாவடைந்த இளைஞரின் குடும்பத்தினரை மசிய வைத்து, விதிமுறைகளுக்கு மாறாக உறுப்புத்தானம் பெற்று, கல்லீரல்-கிட்னி பொருத்தப்பட்ட ம.நடராஜன், கடந்த மார்ச் 20-ந்தேதி குளோபல் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு எதிரான சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.

கடந்த 1994-ல் போலி ஆவணங்கள் கொடுத்து இறக்குமதி செய்த லக்சஸ் கார் விவ காரத்தில் ம.நடராஜன், சசிகலா உறவினர் பாஸ் கரன் ஆகியோருக்கு சி.பி.ஐ.கோர்ட் விதித்திருந்த இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர்நீதி மன்றமும் சில மாதங்களுக்கு முன் உறுதிசெய்திருந்தது.

 

sasikala-natarajan


இந்த நிலையில் லக்சஸ் கார் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் 19-ந்தேதி வந்தபோது, நடராஜன் மரணமடைந்து விட்டதால், அவரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். மரணத்தை உறுதி செய்யும் இறப்புச் சான்றிதழ் எங்கே என நீதிமன்றத்தில் கேள்வி எழுந்தபோது, அதனை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய தவறியதால், வழக்கிலிருந்து நடராஜனை விடுவிக்க மறுத்ததுடன் ஜூன் 27-ல் டெத் சர்டிஃபி கேட்டை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார் நீதிபதி மலர்மதி. நடராஜனின் இறப்பு சான்றிதழ் எங்கே? யாரிடம் இருக்கிறது? என ஆராயத் துவங் கியபோதுதான், அவரது மரணத்தை முறைப்படி பதிவு செய்யாதது அம்பலமாகியிருக்கிறது.

சென்னை- பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் நடராஜன் மரணமடைந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் பிறப்பு- இறப்பு பதிவுப் பிரிவில் ஆராய்ந்தோம். மருத்துவமனையின் ஆவணங்களின்படி மார்ச் 20-ந்தேதி இறந்திருக்கிறார் நடராஜன். அதை வைத்து பிறப்பு- இறப்பு ரெக்கார்டுகளை ஆராய்ந்தபோது, அன்றைய தினத்தில் 107 பேர் இறந்ததாக மாநகராட்சியின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதில், நடராஜன் பெயரில் ஒருவர் மட்டுமே இறந்ததாக பதிவாகியிருக்கிறது. அவர், சசிகலாவின் கணவர் ம.நடராஜன் அல்ல.

 

 


இதுகுறித்து மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது,"மருத்துவ மனையில் ஒருவர் இறந்தாலும், பிறந்தாலும் மருத் துவமனை நிர்வாகமே முறைப்படி மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து இறப்பு சான்றிதழை வாங்கிக் கொடுத்துவிடும் அல்லது இறந்துபோனவரின் ரத்த சொந்தமுள்ளவர்கள் டெத் சர்ட்டிஃபி கேட்டை மருத்துவமனையிலிருந்து பெற்று அவர் களே பதிவு செய்வதும் உண்டு. ஆனால், நடராஜன் விசயத்தில் இந்த இரண்டு வழிகளும் நடக்கவில்லை. இறந்துபோனவரின் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளுக்கும் அரசுத் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் இறப்புச் சான்றிதழ்தான் செல்லுபடியாகும். மருத்துவமனையின் சான்றிதழ் மட்டுமே போதாது. அப்படியிருந்தும் நடராஜனின் மர ணத்தை முறைப்படி பதிவு செய்யாததன் காரணம் தெரியவில்லை'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

நடராஜனின் உறவுகள் தரப்பில் விசாரித்த போது, ‘""நடராஜனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாள் பரோல் கேட்டு பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் மனு செய்திருந்தார் சசிகலா. இறப்புச் சான்றிதழ் இணைக்கப்படாததால் பரோலில் சிக்கல் எழுந்தது. உடனே மருத்துவமனை கொடுத்த இறப்புச் சான்றிதழின் ஒரிஜினலை சிறைக்கு அனுப்பி வைத்தனர். சிறை நிர்வாகம் ஏற்கவில்லை. அந்த சான்றிதழின் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசிடம் சிறை நிர்வாகம் கேட்ட நிலையில், எடப்பாடி அரசு உறுதி செய்த தால் சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது. பரோலில் தஞ்சை வந்து நடராஜனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சிறைக்கு சென்று விட்டார். மருத்துவமனையின் அசல் சான்றிதழ் அவரிடம்தான் இருக்கிறது. அந்த சான்றிதழ் இல்லாமல் மாநகராட்சியில் பதிவு செய்ய முடியாது. பதிவு செய்வதில் சசிகலாவும் ஏனோ அக்கறை காட்டவில்லை'' என்கின்றனர்.

 

 


மேலும் நாம் விசாரித்தபோது, ""நடராஜனின் குடும்ப உறவுகளுடனான தனது நெருக்கத்தை சசிகலா ரொம்ப வருஷத்துக்கு முன்பே குறைத்துக் கொண்டுவிட்டார். நடராஜனுக்கு வாரிசு இல்லாத தால் அவரது உடலுக்கு அவரது தம்பி ராமச்சந்திர னின் மகன் ராசுதான் கொள்ளிவைத்தார். அதனால் நடராஜனின் சொத்துகளுக்கு ஒரு வகையில் அவர் வாரிசாகி விடுகிறார். நடராஜனுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் சொத்துக்களுக்கு அவரது குடும்ப உறவுகளையே நாமினியாக நியமித்திருப்பதாக தெரிகிறது. நடராஜனின் இறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தால்தான் அந்த சொத்துகள் நாமினியின் பெயர்களுக்கு மாறும். அப்படி மாறுவதை சசிகலா விரும்பவில்லை. மாநகராட்சியில் இறப்பை பதிவு செய்துவிட்டால் அது பப்ளிக் டாகுமெண்ட்டாகிவிடும். நடராஜனின் உறவினர்கள் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அதைத் தவிர்க்கத்தான் இறப்பை பதிவு செய்யவில்லைங்கிற சந்தேகம் நடராஜன் குடும்ப உறவுகளுக்கு இருக்கிறது'' என்கிறார்கள்.

 

 


சசிகலா உறவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ""உறவுகள் சுமுகமாக இல்லை என்றாலும், கணவரின் மரணத்தை வைத்து அவர் விளையாடியதில்லை. மருத்துவமனை கொடுத்த அசல் சான்றிதழ் சிறை நிர்வாகத்திடம் இருக்கிறது. முறைப்படி பதிவு செய்வதில் யாரும் அக்கறை காட்டாததால், தேவைப்படும்போது பதிவு செய்துகொள்ளலாமென அவரும் இருந்துவிட்டாரே தவிர வேறில்லை'' என்கின்றனர் அழுத்தமாக.

இந்த நிலையில், நடராஜனின் இறப்புச் சான்றிதழை நீதிமன்றம் கேட்டிருப்பது அவரது குடும்ப உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனையின் அசல் சான்றிதழை சசிகலா விடமிருந்து வாங்கி முறைப்படி பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நடராஜனின் உறவுகள்.