சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாக சரோஜாதேவி திகழ்ந்தார். அதன்பின் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சினிமாவைத்தாண்டி சொந்த வாழ்ககையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஜெயலலிதா மீது தனிப்பட்ட அக்கறையும், கவனமும் செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
ஆனால்... சினிமாவில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஜோடிப் பொருத்தம் கொண்டாடப்பட்ட வேளையில் விமர்சனங்களும் எழாமல் இல்லை. எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா முதன்முதலாக இணைந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இளமைத்துள்ளலான அவர்களின் காதல் காட்சிகளைப் பார்த்துவிட்டு, எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்குமிடையே இருக்கும் மிகப்பெரிய வயது வித்தியாசத்தைக் குறிப்பிட்டு கடுமையாக சில விமர்சகர்களும், பத்திரிகைகளும் எழுதினர்.
இது ஒரு விவாதப் பொருளாகவே தீவிரமடைந்துவந்த நேரத்தில், எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இணைந்து நடித்த ‘முகராசி’ படத்தில் ஒரு பாட்டின் மூலம் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரப்பட்டது. எம்.ஜி.ஆரின் நிஜ வாழ்க்கைத் தன்மைகளை பாடல்வரிகளில் கொண்டுவரக் கூடியவர் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர். கேரளத்துக்காரர் என்றாலும் தமிழர் இதயங்களில் வாழ்பவர். அந்த விஷயத்தை ‘பணத்தோட்டம்’ படத்தில் ‘பேசுவது கிளியா?’ பாடலில் எம்.ஜி.ஆரைப் பார்த்து சரோஜாதேவி பாடுகிறபோது 'பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா, சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா?' என வரும்படி வரிகளை வார்த்தார் கண்ணதாசன்.
அதுபோலவே, எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஜோடிப் பொருத்தத்தை விமர்சித்தவர்களுக்கு ‘முகராசி’யில் கண்ணதாசன் வேட்டு வைத்தார் பாட்டால்...
'எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்,
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
இனி யாருக்கு இங்கே கிடைக்கும்'
______________________________________________________________________________________
2002-2003 சமயம்... கமல்- சிம்ரன் உறவு பற்றி கல்யாணப்பத்திரிகை தவிர வேறு எல்லா பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துகொண்டிருந்தது. சிம்ரன் வாய் திறக்கவில்லை. கமல் இதை மறுக்கவில்லை. மாறாக, ‘என் பெர்ஸனல் விஷயங்களை ஏன் எழுதுகிறார்கள்?’ எனக் கேட்டார்.
கமல்- சிம்ரன் விஷயம் பரபரப்புத் தீயாக பற்றி எரிந்த நேரத்தில் கமல்- சிம்ரன் நடித்த ‘பஞ்சதந்திரம்’ படத்தில் தந்திரமாக இந்த விஷயத்தை பாட்டில் வைத்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
'என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்திக் காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா'
இப்படி கிசுகிசு கிளம்ப காரணம் நீயா? நானா? என கமலும், சிம்ரனும் ஒருவரைப் பார்த்து ஒருவர் கேட்டுக்கொள்வதுபோல ஆரம்பித்து... ‘ஆமா... நாங்க ஒண்ணுதான்’ என பதிலையும் இந்தப் பாட்டில் வைத்தார் வைரமுத்து.
'உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு வேறு நான் வேறு யார் சொன்னது'
இப்படி... தமிழ் சினிமாவில் திரைவாழ்வு திரைமறைவு வாழ்வு இரண்டு குறித்தும் பாட்டாலே பல மேட்டர் சொல்லப்பட்டிருக்கு!