செப்டம்பர் 01, 2017 - மாதத்தின் முதல் நாள் ஒரு மாணவியின் இறுதி நாளானது. அதுவரை 'இதென்னப்பா ஒரு எண்ட்ரென்ஸ் எக்ஸாம்தான... அதுக்குபோய் ஏன் இவ்வளோ பண்றீங்க' என நினைத்தவர்களையெல்லாம் கூட 'அய்யையோ ஒரு உயிர் போயிருச்சே' என புலம்ப வைத்தது. அதுதான் மருத்துவராகும் கனவுடன் மாய்ந்த மாணவி அனிதாவின் மரணம். அவரிடம் கனவு மட்டுமில்லை, மிக உயர்ந்த மதிப்பெண்ணும் இருந்தது. மருத்துவராகி பல துர்மரணங்களை தடுக்கவேண்டிய உயிர் இப்படி மரணித்துவிட்டதே என்ற சோகம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது, நீட் தேர்வின் வன்மையை உணரவைத்தது.
கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு ஒரு பெரிய போராட்டத்தை தமிழ் நாட்டில் நடக்கச் செய்தது. மருத்துவக் கல்வி கனவுடன் இருந்த மாணவியான அனிதாவை டாக்டர்.அனிதாவாக மாற்றின போராட்டக்குழுக்களும், போஸ்டர்களும், பதிவுகளும். இதன்பின்தான் நீட்டின் கொடூரம் பலருக்கும் தெரியவந்தது. நாம் வருடாவருடம் பார்க்கும் ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலைகளுடன் இந்த மரணத்தை ஒப்பிட முடியாது. அந்த மரணங்கள் சாதாரணமானவை என்று கூறுவதாக அர்த்தம் இல்லை. இந்த மரணம் போராட்டத்தின் உச்சமாக நடந்த ஒரு படுகொலை. அனிதா அமர்ந்து படிக்கும் அந்தப் புகைப்படம் ஒரு சமூக அநீதியின் வரலாற்றுக் குறியீடு.
முத்துக்குமாரின் மரணம் ஈழப் போராட்டத்தை தமிழ்நாட்டில் பற்றவைத்தது போல அனிதா தன் உயிரை எரித்து நீட் எதிர்ப்பு போராட்டத்தைப் பற்ற வைத்தாள். அவரது மரணத்திற்குபின் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெகுண்டெழுந்தது. தமிழ்நாடு முழுக்க பெரும் அளவில் போராட்டங்கள் நிகழ்ந்தன. அவை ஒரே குரலாய் ஒலித்தன, “டாக்டர். அனிதா வாழ்க, நீட் ஒழிக”. உண்மையைக் கூறினால் நீட்டை விரட்ட அப்போதுதான் தமிழ்நாடு முழுமையாக இறங்கியது, தமிழ்நாடு என்று கூறுவதைவிட உலகில் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் போராட்டங்கள் நடந்தன என்பதே உண்மை. எங்கும் போராட்டங்கள், அதன் விளைவாகவே நீட்டைத் தவிர்க்க முயல்வதாக வார்த்தை அளவிலாவது சொன்னார்கள் அமைச்சர்கள். அதுமட்டுமில்லாமல் அரசு, தனியார் சார்பில் பல இலவச நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. ஆளும் அரசைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் நீட்டை ஒழித்தே தீருவோம் எனக் கூறின.
'நீட் தேர்வை எதிர்கொண்டு ஜெயித்திடவேண்டியதுதானே' என்பவர்களுக்கு... மத்திய பாடத்திட்டத்தின்கீழ் படித்தவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டதுபோல்தான் இருந்தது நீட் தேர்வு. மாநில பாடத்திட்டம் என்ற ஒன்று இருப்பதை மறந்துவிட்டனர். அதுமட்டுமின்றி நீட் அமல்படுத்துவதற்கு முன்பு, கல்வி மாநில பட்டியலில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே அரசு, என்ற இலட்சியம் கொண்டவர்களின் அடுத்த முயற்சி ஒரே தேர்வு. அதனடிப்படையில்தான் இந்த நீட் நடைமுறைக்கு வந்தது, நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை நடத்தியவிதம் அடுத்த கொடுமை. மூன்று மணிநேர தேர்வுக்கு ஆறு நாட்கள் பயணிக்கவைத்தது, கண், காது, வாய் என டார்ச் அடித்து பார்த்தது, உடைகளை அவிழ்க்கச் செய்தது, சோதனை என்ற பெயரில் நடந்த அத்துமீறல்களால் மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகினர், இன்றும் ஆளாகிக்கொண்டிருக்கின்றனர்.
இவற்றையெல்லாம் தாண்டி உள்ளே சென்றால் அங்கு கேள்வித்தாளே தவறாக இருந்தது. ஆங்கிலத்தில் தேர்வெழுதுபவர்களுக்கு ஒரு கேள்வி, தமிழில் தேர்வெழுதுபவர்களுக்கு ஒரு கேள்வியென பாகுபாடு வேறு. இதற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழில் எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது. 'ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மருத்துவக்கல்வி படிப்பார்கள்?' என்று கேட்டுள்ளது. சரிதான், ஆனால் கேள்வித்தாளில் நடந்த தவறை கேட்க வேண்டாமா?
இத்தனை காரணங்களும் சொல்கின்றன நீட் ஒரு அடக்குமுறை என்று. இன்று வேறுவழியின்றி மாணவர்கள் தேர்வுகளை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நீட்டை அடித்து துரத்துவோம், விரட்டி விளாசுவோம், நீட்டே எங்கள் நாட்டைவிட்டு ஓடு என அரசியல் வீர வசனங்கள் பேசியவர்களெல்லாம் இன்று அது தமிழ்நாட்டு நிலத்தில் ஆலமரம்போல வேர்விட்டுக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கின்றனர். இவையனைத்திற்கும் ஒரே தீர்வு கல்வி மீண்டும் மாநில பட்டியலில் வருவதுதான். இந்தியா எப்போதெல்லாம் மாநில உரிமைகளை துச்சமாக நினைக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தனது கடைசி இரண்டு எழுத்துகளுக்கான பொருளை எதிர்ப்புகளின் வாயிலாக தெரிவித்துக்கொண்டுதான் வருகிறது.
அனிதாவின் மரணம் கோழைத்தனமானது, அது அர்த்தமற்றுப் போய்விட்டது என்று எண்ணுபவர்கள் அனிதாவின் மரணம் தமிழக மாணவர்களுக்கு அளித்திருப்பது பயத்தை அல்ல என்பதை உணர வேண்டும். அனிதா தன் உயிரைக் கொடுத்து, சமூக அநீதி எப்படி இருக்கும் என்பதை இந்தத் தலைமுறை மாணவர்களுக்கு உணர்த்திவிட்டார். மாணவர்கள் தங்கள் கனவை நோக்கி கால்களில் கட்டப்பட்ட இரும்புச்சங்கிலியோடு நடக்கிறார்கள். அதை அவிழ்க்க வேண்டிய அதிகாரமுள்ளவர்கள் தலை கவிழ்ந்து நிற்கிறார்கள். சமூக நீதி சரித்திரம் கொண்ட தமிழ்நாட்டில், ஒரு தகுதி வாய்ந்த மாணவி இப்படி மரணத்தைத் தேடியது கரும்புள்ளி என்பதை உணர்ந்து நீட்டைக் கலையும் நோக்கத்தில் நாட்டை ஆள்பவர்கள் கவனம் கொள்ள வேண்டும்.