2020 ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 48 வார்டுகளை கைப்பற்றி ஆளும் கட்சிக்கு மரண பயத்தை காட்டியுள்ளது பாஜக. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முன்பு வரை மாநில பாஜக என்பது காண கிடைக்காத ஒரு கட்சியாகவே இருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு இந்த விவகாரம் அமித்ஷா காதுக்கு எட்டியது. புதிய பொறுப்பாளர்கள் போட்டார். அவருக்கே உரிய சில அரசியல் சடுகுடுகளை ஆடினார். விளைவு கே.சி.ஆரின் கோட்டையான அங்கு நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தன்னுடைய உறுப்பினர்களை நாடாளுமன்றம் அனுப்பியது.
இதைக்கூட மோடி அலை என்று சொல்லி மனசை தேற்றிக்கொள்ள டி.ஆர்.எஸ். மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயலும். ஆனால் கடந்த மாதம் துபக் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சியிடம் இருந்து தொகுதியை வென்றது பாஜக. இதை சற்றும் எதிர்பாராத டி.ஆர்.எஸ். அதிர்ந்து கிடந்த நிலையில், நேற்று வெளியான ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவு அதனை நிலைகுலைய வைத்துள்ளது. 150 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் 55 வார்டுகளை ஆளும் டி.ஆர்.எஸ். கைப்பற்றி இருந்தாலும், அதனால் முழு மெஜாரிட்டி பெற முடியவில்லை. கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மேயர் பொறுப்பை கைப்பற்ற அக்கட்சிக்கு தேவைப்படுகிறார்கள்.
ஆளும் கட்சியின் நிலைமை இப்படி இருக்க, தேர்தலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது பாஜக. மொத்தமுள்ள 150 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதே போன்று ஓவைசி கட்சியும் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்று இந்த தேர்தலை கடந்து போக முடியாது. கடந்த முறை நடைபெற்ற ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் இதேபோன்று 44 வார்டுகளை கைப்பற்றியது ஓவைசி கட்சி. எனவே முஸ்லிம்கள் அடர்த்தியாக உள்ள இடங்களில் தங்களுக்கான இடங்களை அவர்கள் தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.
ஆனால் அதே சமயம் கடந்த முறை வெறும் 4 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 12 மடங்கு உயர்ந்து 48 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. கிட்டதட்ட திரிபுரா அரசியல் மாதிரி மீண்டும் ஒருமுறை தன்னை நிலை நிறுத்தியுள்ளது. ஆளும் டி.ஆர்.எஸ். கடந்த முறை 99 வார்டுகளை கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது 55 வார்டுகளை மட்டுமே கைப்பற்றி மேயர் பதவியை கைவிட்டு நிற்கிறது. எப்படியும் ஓவைசியுடன் கூட்டணி அமைத்து மேயர் பதவியை தற்போது கைப்பற்றினால் கூட நிஜத்தில் இந்த தேர்தலில் உண்மையான வெற்றியை பதிவு செய்த கட்சி என்றால் அது பாஜக தான்.
நான்கு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அங்கு பிரச்சாரத்துக்கு வந்தபோதே இந்தத் தேர்தலில் பாஜக ஒரு திட்டம் வைத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்கள். அவர் கூறியது போலவே யாரும் எதிர்பாராத வகையில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது அம்மாநில பாஜக. "இந்த தேர்தலில் இரண்டாவது இடம் பெற்றுள்ளோம், ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்போம், அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அம்மாநில பாஜக தலைவர்கள் நேற்று சூளுரைத்துள்ளார்கள். அமித்ஷா மாயாஜாலம் தெலுங்கானா மாநிலம் வரை வந்துள்ளது, அது தமிழகம் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.