1980களில் பாரதிராஜா தமிழ் சினிமாவில் தன் காதல் படங்களின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் காதல் வயப்பட வைத்தவர். காதல் படங்கள் தமிழில் எடுப்பதில் அவர்தான் வல்லவர் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும்போது, பகல்நிலவு என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் முதல் முறையாக கால் பதித்தவர் மணிரத்னம். பகல் நிலவும் காதல் படம்தான், இருந்தபோதிலும் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பதில் சந்தேகம்தான். ஆனால், அந்த படத்தின் கரு, வழி மாறி தவறான பாதைக்கு சென்றுகொண்டிருந்த ஹீரோவை தன் காதலின் மூலம் சரியான பாதைக்கு அழைத்து செல்வார் ஹீரோயின். அந்தக் காலகட்டத்தில் ரௌடியாக இருப்பவரை காதலிப்பது போன்றெல்லாம் கதாபாத்திரம் அமைக்க இயக்குனர்கள் யோசிப்பார்கள். ஆனால், இவரோ சினிமாவின் காதல் பொருட்டு அக்கோணத்திலும் காதல் கதையை எடுத்தார். தமிழில் இவரது அத்தியாயம் இங்கிருந்துதான் தொடர்கிறது.
தற்போது வரை காதல் படங்கள் என்றாலே மணிரத்னம் என்றளவிற்கு பெயர் பெற்றிருக்கிறார். அதற்கு முதல் சான்றாக அமைந்த படம் மௌனராகம்தான். 1986 ஆம் ஆண்டிற்கு மேல், ஊரில் அடாவடியாக சுற்றித்திரிந்த பசங்களெல்லாம் காதலிக்க ஆரம்பமாக இருந்தது இந்த படம் என்றே சொல்லலாம். அடாவடியாக சுற்றும் ஒரு கதாபாத்திரத்தைத்தான் முதன் முதலில் கல்லூரியில் படிக்கும் போது காதலிப்பார் இப்படத்தின் ஹீரோயின். அசட்டு தைரியம், கோபம், நகைச்சுவை, நிறைய காதல் என்று இருபது நிமிடங்களே வரும் இந்த காதல் அந்த சமயத்தில் தமிழ்நாட்டையே ஆண்டது. கல்லூரிகளில் படித்தவர்களை கவர்ந்தது, இது சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காதல் என்பது ஒரு குறிப்பிட்டவரை மட்டும் தான் காதலிக்க வேண்டும் என்பதில்லை. அவர் எப்படி இருந்தாலும் காதலிக்கலாம் என்றது. மேலும் இந்த படத்தில் காதல் தோல்வியடைந்தால், அதற்கடுத்து வாழ்க்கையே இல்லை, நாம் வேறொருவரை திருமணம் செய்துகொள்ள கூடாது என்று ஏமாற்றிக்கொண்டவர்களுக்கும் இந்த படத்தின் மூலம் மீண்டும் வாழ்க்கை இருக்கிறது என்று கற்றுக்கொடுத்தது. மௌன ராகம், மௌனத்தால் எல்லோராலும் உணரப்பட்ட காதலானது.
மதப்பிரச்சனை என்பது 1990களிலிருந்து இந்தியாவில் பல்வேறு காரணத்தால் தலைவிரித்து ஆடியது. அரசாங்க ரீதியாகவும் இதற்கு காரணம் சொல்லலாம். மேலும் பாபர் மசூதி இடிப்பு பெரிய கலவரத்தையே உண்டு செய்தது. அந்த சமயத்தில் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுக்கு தெரியாமல் வெளியேறிதான் தங்களது வாழ்க்கையை கடத்த வேண்டி இருந்தது. மதம் என்பது இந்த மனிதர்களுத்தான் தெரியும் காதலுக்கு தெரியுமா என்ன? இந்த மத அரசியலுடன் காதலை இணைத்து பம்பாய் என்ற படத்தினை 1995 ஆம் ஆண்டு வெளியிட்டார். ஹிந்து மதத்தை சேர்ந்த அரவிந்த் சாமியும், இஸ்லாம் மதத்தை சேர்ந்த மனிஷா கொய்ராலாவும் காதலித்து பம்பாய் சென்றுவிடுவார்கள். அப்போதுவரை அவர்களின் மீது கோபமாக இருந்த பெற்றோர்கள், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அனைத்தையும் மறந்துவிடுவார்கள். இதனைத்தொடர்ந்து சமூகத்தில் இருக்கும் மதவெறி. இந்த படத்தின் மூலம் மதம் என்பது தடையல்ல நல்ல புரிதல் இருவருக்கும் இருந்தால் போதும், நீ உன்னுடையதை பின்பற்று நான் என்னுடையதை பின்பற்றுகிறேன். ஆனால் நம்மிருவரையும் காதல் பொதுவாக மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காமல், இந்த காதல் நமக்கு நாமே என்பது போல எந்த காலத்திலும் அழியாமல் இருந்துகொண்டே இருக்கும்.
திருமணம் என்பது ஒவ்வொரு கலாச்சாரத்தை பின்பற்றுவதை பொருத்து அந்தந்த வழக்கத்தில் நடைபெறும். கண்டிப்பாக யாககுண்டத்தில் புகை, புகைக்க அதன் முன்னே திருமகன் திருமகளின் கழுத்தில் தாலியை கட்டி தன் மனைவியாக்கி கொள்வார். அதே போன்று கிருஸ்துவ மதத்தில் சர்ச்சில் பாதிரியார் முன்பு ரிங்கை மாட்டிக்கொள்வர். இதுபோன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலில் திருமணத்தை நடத்துவார்கள். 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு, குறிப்பாக அலைபாயுதே படம் வந்த பின்னர். பத்திரிகைகளில் அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் என்று தலைப்புகள் வந்த வண்ணம் இருக்கும். அது என்ன அலைபாயுதே ஸ்டைல்? வீட்டுக்கு தெரியாமல் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் தங்கள் காதலின் உச்சமாக திருமணம் செய்துகொள்வதை பதிவு செய்து, வீட்டிற்கு தெரியாமல் இருப்பர், இல்லையென்றால் வீட்டைவிட்டு வெளியேறியும் இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் இது பரவலாக நடைபெற்று வந்தது. இதற்கு முழு காரணம் இந்த படம் வந்ததால் இல்லை, காதலர்களின் தைரியத்தால் வந்தது. இப்படம் வந்த பிறகு மேலும் காதலிப்பவர்களுக்கு ஒரு தைரியம் கொடுத்தது. வீட்டில் ஒன்று சேர்த்து வைக்கவில்லை என்றால் முன்பெல்லாம் தற்கொலை செய்துவந்தனர். ஆனால், இதுவோ திருமணம் செய்ய தூண்டியது. இதுவும் ஒரு நல்ல தாக்கம் தானே.
இது போன்ற படங்களையும் எடுத்தவர் சமூகத்தின் மீது காதல்கொண்டும் திரைப்படங்கள் எடுத்திருக்கிறார். அலைபாயுதேவுக்கு பின்னர் 15 வருடங்களாக காதல் தாக்கம் சமூகக்கத்தில் இருப்பது போன்று மணிரத்னம் எடுக்கவே இல்லை. ரசிகர்களும் எல்லோரும் அவர் எப்போது எடுப்பார் என்று ஆவலாக காத்துக்கொண்டிருக்கையில், ஓ காதல் கண்மணி என்று ஒரு காதல் படத்தை எடுத்தார். அதுவரை என்னென்னமோ பெண்களுக்கு ஆங்கில பெயர்களில் செல்லமாக வைத்து அழைத்து வந்தவர்கள். திடீரென பாரதியார் போன்று கண்ணம்மா என்று தன் காதலியை அழைக்க ஆரம்பித்தார்கள். இதுவரை அவர் எடுத்த படங்களில் காதல் கடைசியாக திருமணத்தில் போய் முடியும். ஆனால், இந்த படமோ இந்தியாவின் கலாச்சாரத்தை கெடுத்துவிடும் என்று சொல்லப்பட்டு வரும் 'லிவிங் டு கெதர்' என்ற விஷயத்தை பற்றி பேசியது. இந்தியாவில் மெட்ரோபாலிட்டன் நகரங்களாக மாறிய இடத்தில் இது மிகவும் சகஜமான ஒன்று. உனக்கும் எனக்கும் காதல் இருக்கும் வரை வாழ்வோம், இல்லையென்றால் பிரிவோம். தேவையில்லாமல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வாழவேண்டாம் என்று சொல்லக்கூடியது இந்த படம். ஒரு விதத்தில் மணிரத்னம் 15 வருடங்கள் பொறுத்தது, இதுபோன்ற சமூகத்தில் ஏற்படும் காதல் மாற்றத்திற்காகத்தானோ? மணிரத்னம் இதுபோன்று சமூக தாக்கம் ஏற்படுவது போன்ற காதல் படங்களை எடுப்பதால் தீர்க்கதரிசி இல்லையென்றாலும் அவரது தாக்கம் மக்களிடையே இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.