Skip to main content

கலைஞரை வாழ்த்த வந்த காந்தியின் பேரன்; கலைஞர் 100 இலச்சினை வெளியீடு!

 

M K Stalin Speech and Kalaignar 100

 

கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ‘கலைஞர் 100’ என்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். 

 

இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “இந்த இடம் கலைவாணர் அரங்கமாகக் கலைஞர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. அந்த கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டில் லோகோ வெளியீட்டு விழா நடப்பதும்; இந்த விழாவிற்கு சிறப்பு  சேர்க்கும் விதமாக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி கலந்து கொண்டதற்குப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் இயக்கத்தில் அண்ணல் காந்தியடிகளின் தொண்டராகத் தான் இருந்தார். பின்பு, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து கள்ளுக்கடை மறியல் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். வகுப்புரிமைக்காகக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் பெரியார். 

 

1947 ஆம் ஆண்டின் போது கோட்ஸேவால், அண்ணல் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது பெரியார் மிகுந்த வேதனை அடைந்தார் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது. தந்தை பெரியாரைப் போல, அவர் வழி வந்த அறிஞர் அண்ணாவும் காந்தி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். அறிஞர் அண்ணா, 1948 ஆம் ஆண்டின் போது ‘உலக பெரியார் காந்தி’ என்ற புத்தகத்தை எழுதி காந்தியின் பற்றை வெளிப்படுத்தினார்.

 

Kalaignar 100

 

பெரியார், அண்ணா, கலைஞர் என நாங்கள் உள்பட அண்ணல் காந்தியின் மீது பற்று வைத்திருப்பதைப் போல தான் காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ணன் காந்தி அவர்களும், எங்கள் மீதும் எங்களது திராவிட இயக்கத்தின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். பெரியார் மற்றும் அண்ணாவின் அரசியல் ஏழைகளுக்கானது, சாதியத்துக்கு எதிரானது, மதவாதத்துக்கு எதிரானது, சாமானிய மக்களுக்கானது என்று கோபாலகிருஷ்ணன் காந்தி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

 

வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமூகத்தை ஒளி கொடுத்து வாழும் காலத்தில் விடிவெள்ளியாக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தோன்றிய நாளான ஜூன் 3 ஆம் தேதி அன்று அவரது பிறந்தநாள் என்று சொல்வதை விட சமுதாயத்திற்கு உயிராக, உணர்வாக இருந்து உதயமான நாள் என்று சொல்வதே சரியாக இருக்கும். மேலும், கலைஞரின் இந்த நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு  ஓராண்டுக் காலம் கொண்டாடத்  திட்டமிட்டுள்ளது.  என் தலைமையிலான இந்த தமிழ்நாடு அரசைக் கலைஞருக்கு காணிக்கையாகச் செலுத்த விரும்புகிறேன். இந்த நவீன திராவிட மாடல் அரசுக்கு முன்னோடியாக இருப்பது கலைஞரின் வழிகாட்டுதல் பேரில் தான். ஏனென்றால், கலைஞர் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக இருந்து அந்த துறைகளில் வெற்றியையும் கண்டவர்.

 

அதனால் தான், விடுதலை இந்தியாவில் நடந்த 13  சட்டமன்றத் தேர்தல்களில் 5 முறை வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவி வகித்தார். முதலமைச்சராக மட்டுமல்ல மக்கள் மனதில் என்றும் ஆட்சி செய்து கொண்டிருப்பார். இலக்கியம், கவிதை போன்ற துறைகளில் தனது வெற்றி முகத்தைப் பதித்த கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

 

Kalaignar 100

 

கலைஞரின் பெயரில்  மாபெரும் நூலகம், மருத்துவமனை உள்ளிட்டவற்றை புதிதாக திறக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த ஓராண்டு விழா மாவட்டந்தோறும் நடக்கப்பெற உள்ளது. அந்த விழா வெறும் புகழ் பாடுவதற்காக மட்டும் அமைக்கப்படாது. கலைஞர் இந்த தமிழ் சமூகத்திற்குச் செய்த சாதனையைப் பற்றி விளக்கும் விழாவாக இருக்கும். கடந்த 50 ஆண்டுக்கால தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் அடித்தளம் வித்திட்டு தொலைநோக்கு பார்வையும் மக்கள் மீது பற்றும் கொண்ட கலைஞரால் மட்டுமே இத்தனை சாதனை செய்ய முடியும் என்று நிரூபித்தவர்.

 

பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், நகரங்கள் என நாம் இப்பொழுது காண்கிற அனைத்தும் கலைஞரால் கொண்டுவரப்பட்டது. பட்டப் படிப்பை முடித்தவர்கள்; பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்; வேலைவாய்ப்பைப் பெற்ற அரசு ஊழியர்கள் எனக் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் தொடர்புடையவர் தான் நமது கலைஞர். சென்னையையும் அதன் சுற்றி உள்ள மாவட்டங்களிலும் இத்தனை தொழிற்துறைகள் வளந்திருப்பதற்குக் காரணம் கலைஞர். அதனால் தான் அவர் வழி வந்த இந்த திராவிட அரசும் தொழிற்துறையை முன்னேற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்னே சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக ரூ.3,233 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகி இருக்கிறது என்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !