Skip to main content

காதலில் விழுந்த ஹிட்லர் -பதினாறு வருட காதல் கதை.

Published on 20/04/2018 | Edited on 20/04/2018

உலக மக்களுக்கு சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே ஒருவருடைய பெயர் கண்டிப்பாக நியாபகம் இருக்கும், பள்ளிகளில் படித்த வரலாற்று பாடத்தில் மிகவும் மோசமானவர் அவராகவே இருந்திருக்க கூடும். அந்த மனிதரை போன்ற ஒரு சர்வாதிகார மனநிலைகொண்ட ஆட்சியாளன் நமக்கு வந்துவிட கூடாது என்ற எண்ணம் கண்டிப்பாக நமக்கு இருந்திருக்கும். குறிப்பாக யூதர்களால் அவரை மறக்கவே முடியாது. ஒரு இனத்தை எவ்வளவு மோசமாக படுகொலைகள் நிகழ்த்தி கொல்ல முடியுமோ அவ்வளவு மோசமான நிலையில்தானே கொன்று குவித்திருக்கிறார் அந்த சர்வாதிகாரி. அவருடைய ஆரம்பம் எங்கள் நிலத்தில் எங்கள் இனத்தாளர்தான் ஆள வேண்டும் என்ற கொள்கையை கொண்டது. அது காலப்போக்கில், யூத இனமே அழியும் நிலைக்கு அல்லவா கொண்டு வந்து நிறுத்தியது. சர்வாதிகாரி என்று சொல்லும்போதே கண்டுபிடித்திருப்பீர்கள். யூதர் என்று சொன்னவுடன் அது அடோல்ப் ஹிட்லர் என்று உறுதியே செய்திருப்பீர்கள். ஆம் அடோல்ப் ஹிட்லர் தான் பலருக்கு மிருகமாகவும், நாசிகளுக்கு வீரனாகவும், உலகத்துக்கு கொடூர குணம் கொண்ட சர்வாதிகாரியாகவும் தெரிந்த அவரேதான்.
 

hitler eva


எவா பிரான், கான்வென்டில் படித்து முடித்த பெண். தனக்கு பதினேழு வயதிருக்கும்போது புகைப்பட கலைஞரிடம் உதவியாளராக சேர்ந்துகொண்டார், அவர் ஹிட்லரின் புகைப்பட கலைஞர். அப்போதுதான் முதன் முதலில் ஹிட்லரை சந்திக்கிறார் இந்த பதினேழு வயது இளம்பெண். இவர் ஹிட்லரை சந்திக்கும்போது, அவர் அப்போதுதான் நாசி படைகளின் துணை கொண்டு உலக அரங்கில் பேசப்பட்டவராக இருந்தார், அவருக்கு வயதோ நாற்பது. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். கண்டிப்பாக இந்த காதல் கதையை கேட்கும் போது அப்படித்தான் தெரிகிறது. உலகமே பார்த்து அஞ்சிக்கொண்டிருந்த மனிதனை முதல் முறை சந்திப்பின் போதே அவரை பார்த்து காதல் வலையில் சிக்கியிருக்கிறார் இந்த எவா பிரான். ஹிட்லர் எவாவை நேரில் சந்தித்தபோது, "ஏன் இப்படி விழுங்குவது போன்று பார்க்கிறாய்? " என்று புகார் செய்துள்ளார். அவ்வளவு தான் எவாவுக்கு தலைகால் புரியவில்லை, தன் தங்கைக்கு ஹிட்லர் என்ற ஒரு மாமனிதனை பார்த்தேன், அவரின் மீது காதல் வயப்பட்டேன் போலும் என்று கடிதம் எழுதியிருக்கிறார்.
 

hitler eva


ஹிட்லர் எவாவின் மீது காதல் வயப்பட்டாரா என்று புரியாத புதிராகவே உள்ளது. இருந்தாலும் அவரை எங்கு சென்றாலும் தன்னுடன் அழைத்து சென்று இருக்கிறார். இவர்களுக்கிடையில் நெருக்கம் அதிகமாக, ஹிட்லர் எவாவை தன்னுடனே தங்க வைத்தார். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று இவர்களின் குடும்பத்தார்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்திருக்கிறது. மற்றவர்கள் யாரேனும் வீட்டிற்கு வந்தால், எவாவை தனியாக ஒரு அறைக்கு அனுப்பிவிடுவாராம் ஹிட்லர். வரலாற்றில், ஹிட்லர் தன் காதலியை மறைமுகமாக வைத்திருந்ததற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஹிட்லரின் மேடை பேச்சுக்கும், கட்டை மீசைக்கும் அதிகமான பெண் விசிறிகள் அப்போது இருந்தார்களாம், தனக்கு காதலி இருப்பது வெளியுலகத்துக்கு தெரிந்தால்,  பெண்விசிறிகள் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர், "ஹிட்லரின் அரசியல் பயணத்தில், தன் மீது மக்களுக்கு இருக்கும் பயமும் போய்விடும்" என்று நினைத்தார் என்றும் சொல்கின்றனர். அது போலவே அவர் எவாவை காதலிக்கும் போதே, பல பெண்களுடன் உல்லாசமாக ஊர் சுற்றியிருக்கிறார். ஹிட்லரின் கொடுமையா, இல்லை தலையில் எழுதியதா என்று தெரியவில்லை, ஹிட்லருடன் நட்புக்கொண்டிருந்த எட்டு பெண்களும், ஒரு முறையாவது தற்கொலைக்கு முயன்று இருந்திருக்கிறார்கள்.
 

eva hitler


எவாவே, மூன்று முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதில் இரண்டு முறை உயிர் தப்பித்துவிட்டார். முதல் முறை ஹிட்லரின் கவனத்தை திருப்ப தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார், இரண்டாவது முறை அவர் தன்னை விட்டு வேறொரு பெண்ணுடன் ஹிட்லர் சுற்றிக்கொண்டிருந்ததாலும், மூன்று மாதம் எவாவிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்ற ஏக்கத்தினாலும் முப்பத்தி ஐந்து தூக்கமாத்திரைகளை உட்கொள்ள இருந்தாராம். ஆனால் அன்று ஹிட்லர் அவரை பார்க்க வந்துவிட்டதால் அது வெறும் முயற்சியாகவே முடிந்தது. மூன்றாவதுமுறை ஹிட்லர் தற்கொலை செய்யப்போவதால், எவா இனி வாழ இயலாது என்று தற்கொலை செய்துக்கொண்டார், சைனட் உட்கொண்டு இறந்துவிட்டார். எவா, ஹிட்லர் போட்ட அனைத்து விதிகளையும் தாண்டாமல் உண்மையாக இருந்தது கண்டிப்பாக அவரின் மீது உள்ள பயம் கிடையாது, அது காதலே. அத்தனை ரகசியங்களையும் உடைத்துக்கொண்டு அவர்கள் காதல் வெளியே வர இருந்தது, அதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா, ஜெர்மனியை வெல்ல இருந்தது. அந்த நேரத்தில் தான் எவா ஹிட்லரை திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்திமூன்று, ஹிட்லருக்கு ஐம்பத்தியாறு .  
 

ஹிட்லர் எவாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்வதற்கே பல விதங்களில் நாசி படைகளை விட்டு வேவு பார்த்திருக்கிறார், அவர் யூத இனத்தை எவ்விதத்திலும் சேர்ந்தவரா என்று அறிவதற்காக. ஹிட்லர் மீதுமட்டும் காதல் இருந்ததால், ஹிட்லரின் அரசியல் வாழ்க்கையை ஒருபோதும் கேட்காத பெண்ணாக இருந்திருக்கிறார். காதலுக்காக விட்டுக்கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்த பெண்கள் என்று பலர் இருக்கின்றனர். ஆனால், இவருக்கோ ஹிட்லரை காதலித்ததால் அந்த பாக்கியமும் கிடைக்கவில்லை. பதினாறு வருட காதல் பயணம், இருபதே மணிநேரத்துக்குள் முடிந்த திருமண வாழ்க்கை. அந்த புல்பூண்டு முளைக்காத நிலத்தில் ரோஜா பூவே முளைத்திருந்தது. ஆனால், அதை அந்த சர்வாதிகாரி சரியாக பராமரிக்கவில்லை.