‘இந்த விருதுநகர் மாவட்டத்தில் சொல்லிக்கிற மாதிரி லஞ்சம் வாங்காத நேர்மையான போலீஸ் அதிகாரின்னு யாரும் இருக்காங்களா?’ என்று கேட்டோம் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம். சிரித்தபடி அவர் “நானே என்னை அப்படிச் சொல்லிக்க முடியாது. ஆனா, எங்க டிபார்ட்மென்ட்ல எல்லாரும் ஆச்சரியப்படற மாதிரி ரொம்பவும் ஹானஸ்ட்டா ஒரு விமன் ஆபீசர் இருக்காங்க. விருதுநகர் பஜார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரியா தான் அப்படி ஒரு நல்ல பேரு வாங்கிருக்காங்க.” என்று கூற, இன்ஸ்பெக்டர் பிரியா குறித்த தகவல்களைத் திரட்டினோம்.
பிரியாவின் அப்பா சொர்ணபாண்டியன், ஓய்வுபெறும் வரையிலும் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார். பிரியாவின் கணவர் செந்தில்குமாரும் ஒரு நேர்மையான போலீஸ்காரர்தான். எந்தச் சூழ்நிலையிலும் அநீதிக்கு வளைந்து கொடுக்காதவராக பிரியா இருப்பதால் அரசியல்வாதிகளோ, வழக்கறிஞர்களோ இவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதில்லை. சற்று விலகியே நிற்பார்கள்.
காக்கிகளுக்கே உரிய கடும் சொற்களையும் பிரியா பிரயேகிப்பதில்லை. அடிக்கடி அவர் இப்படிச் சொல்வாராம். ‘என் அம்மா, அப்பா என்னை நல்லபடியாக வளர்த்தார்கள். அவர்கள் கற்றுத் தந்ததைத்தான் வாழ்க்கையிலும், பணியிலும் நான் கடைப்பிடித்து வருகிறேன். மனசாட்சிக்கு விரோதமாக எந்த ஒரு காரியத்தையும் பண்ணுவதில்லை. ஒருவருக்கு கெடுதல் செய்தால், அது நமக்கே திரும்பிவரும் என்பதை உணராதவர்களே தவறு செய்கிறார்கள். பணத்தைப் பெரிதாக நினைத்து, தவறான வழியில் அதைச் சம்பாதித்து வருங்கால சந்ததியினருக்கு நாம் பாவத்தைச் சேர்த்து வைக்கக் கூடாது. நேர்மையைக் கடைப்பிடித்தால், வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பதை, அதனை அனுபவித்து வருபவர்கள் மட்டுமே உணர்கிறார்கள். நேர்மையாக வாழ்ந்து பாருங்களேன்!’ என்று, பிறருக்கும் ஒரு தூண்டுகோலாக இருந்து வருகிறாராம்.
பிரியாவிடம் பேசினோம். “என்னளவில் நான் சரியாக இருக்கிறேன். மற்றபடி, என்னைப் பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.” என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார். காவல்துறையில் ஒரு அதிகாரி நேர்மையை மட்டுமே கடைப்பிடித்து வருவது, மிகப்பெரிய சவால்தான்!