மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம்! சாதனை படைத்த பெண்கள் நம்மையும் அறியாமல் நம் நினைவுக்கு வருகிறார்கள். ஆதரவற்ற பெண்கள் நல்வாழ்க்கை வாழ்வதே, நம்நாட்டில் பெரும் சாதனைதான்!
பெரும்பாலான பெண்கள், கணவன் இறந்துவிட்டாலோ, பிரிந்துவிட்டாலோ, நிர்க்கதியாகிவிட்டோம் என்று உடைந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்து விடுவார்கள். மற்றொரு ஆண் தயவை எதிர்பார்த்து வாழ்க்கையை நகர்த்துவதே வழக்கத்தில் உள்ளது. செல்வி அப்படி கிடையாது. அதனால்தான், 2018-ல் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சாதனைப் பெண்மணி என்ற விருதை அவருக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
நம்மில் இன்னும் பலருக்கு செல்வியைத் தெரியாமல் இருக்கலாம். அல்லது, அவருடைய பெயர் மறந்துபோயிருக்கலாம். மகளிர் தினமான இன்று, அவர் குறித்து தெரிந்துகொள்வோம்!
கர்நாடகா மாநிலம் - மைசூர் அருகிலுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவரைப் பற்றிய ஆவணப்படம் தற்போது நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது, அந்த அளவுக்குப் பிரபலமடைந்துவிட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 14 வயதில் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டார் செல்வி. கொடுமைக்கார கணவனிடமிருந்து தப்பித்து, 18 வயதில் மைசூரிலுள்ள மகளிர் காப்பகம் ஒன்றில் அடைக்கலமானார். தனக்கான வாழ்க்கை குறித்த தேடல் இருந்ததால், அக்காப்பகத்தின் உதவியுடன், ஆர்வமாக டிரைவிங் கற்றுக்கொண்டார். 2004-ல் வாடகைக் கார் ஓட்டும் அளவுக்கு முன்னேறினார். அதனால், தென்னிந்தியாவில் டாக்ஸி ஓட்டும் முதல் பெண்மணி என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. பிறகு சொந்தமாக டாக்ஸி வாங்கி ஓட்டிய செல்வி, படிப்படியாக லாரி போன்ற கனரக வாகனங்களையும் ஓட்டத் தொடங்கினார். 2014-ல் ஹெவி லைசென்ஸ் பெற்றார்.
2014-ல் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார் கனடாவைச் சேர்ந்த எலிசா பலோச்சி. அவர், செல்வியின் டாக்ஸியில் பயணித்தார். அப்போது, செல்வி வெகு லாவகமாக கார் ஒட்டுவதைக் கண்டு வியந்த அவர், வாழ்க்கையில் செல்வி பட்ட கஷ்டங்களைக் கேட்டார். தனக்குப் பல கொடுமைகளை இழைத்த கணவன், கடைசியில் கைவிட்டதையும், குழந்தைகள் இருவரையும் காப்பாற்றுவதற்காக வைராக்கியத்துடன் இத்தொழிலுக்கு வந்ததையும் அவரிடம் விவரித்தார் செல்வி.
செல்வியின் சோகக்கதையைக் கேட்டுவிட்டுத் தன் நாட்டுக்குத் திரும்பிய எலிசா பலோச்சி, ‘டிரைவிங் வித் செல்வி’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தார். அதில், செல்வியின் வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தையும் இடம்பெறச் செய்தார். அமெரிக்கா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் அந்த ஆவணப்படத்துக்கு அமோக வரவேற்பு. அதனால், பல்வேறு திரை விழாக்களிலும் அப்படம் திரையிடப்பட்டது. மீண்டும் இந்தியா வந்த எலிசா பலோச்சி, டாக்ஸி டிரைவர் செல்வியை, பெண்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தார். அதனால், உள்ளூரிலும் செல்வியின் புகழ் பரவியது. தற்போது, சொந்தமாக டாக்ஸி நிறுவனம் நடத்தும் செல்வி, தனக்குக்கீழே மூன்று பெண்களுக்கு வேலைகொடுக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார். பள்ளிகளுக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களையும் அனுப்புகிறார்.
கடந்த வாரம், ‘டிரைவிங் வித் செல்வி’ ஆவணப்படம், கண்டாவில் 2 விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விருது கிடைக்கும் என்ற அழுத்தமாக நம்புகிறார் எலிசா பலோச்சி. தான் பிறந்த நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய சாதனைப் பெண்ணாகத் திகழ்கிறார் செல்வி.