எழுத்தாளர் பாலகுமாரன் அறக்கட்டளை சார்பில் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் இலக்கிய விருது வழங்கும் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. 2023ம் ஆண்டிற்கான விருது எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன், நடிகர் டெல்லி கணேஷ், நக்கீரன் ஆசிரியர், ஜோதிடர் ஷெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த விருது வழங்கும் விழா நடைபெறுகிறது என்று தெரிந்தவுடன் நானாக விரும்பி இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். ஆளுநர் என்பதைக் கடந்து இல.கணேசனாக பாலகுமாரன் சம்பந்தப்பட்ட விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். வண்ணநிலவன் குறித்து இதற்கு முன்பு எனக்குத் தெரியாது. இப்போதுதான் தெரிந்தது துர்வாசர் என்கிற பெயரில் அவர் எழுதி வந்தது. துர்வாசராக அவர் எழுதிய எழுத்துக்களை நான் நிறைய படித்திருக்கிறேன்.
டெல்லி கணேஷ் அவர்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நக்கீரன் ஆசிரியர் என்னுடைய நீண்ட நாள் நண்பர். வாஜ்பாய் அவர்களோடு நக்கீரனுக்கு ஒரு சிறப்பு பேட்டியை நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களுடைய எழுத்துகள் சக்தி வாய்ந்த எழுத்துகள். எதிர்காலம் குறித்து தெளிவாகச் சொல்லக்கூடியவர் ஷெல்வி. எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதைச் செய்துகாட்ட வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒவ்வொரு ஆண்டும் பாலகுமாரன் குறித்த நினைவு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்கிற உறுதியைக் கொண்டிருக்கிற அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய நன்றி.
ஆர்எஸ்எஸ் அலுவலகம் இடிக்கப்பட்டபோது அந்த இடத்திற்கு வந்து அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார் பாலகுமாரன். அப்போதுதான் அவரை நான் முதல் முதலில் சந்தித்தேன். அதன் பிறகு எங்களுடைய நட்பு தொடர்ந்தது. அவருடைய குடும்பத்தை நான் என்னுடைய குடும்பம் போல் தான் நினைக்கிறேன். ஒரு பெண் எப்படி சிந்திப்பாள் என்பதைச் சரியாக எழுதக்கூடியவர் பாலகுமாரன். நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் எழுதியதைப் பார்த்துப் பலர் திருந்தியிருக்கின்றனர். யோகிராம் சுரத்குமார் அவர்களோடு தொடர்பு ஏற்பட்ட பிறகு ஆன்மீகத்தில் அவருக்கு பெரிய ஈடுபாடு ஏற்பட்டது.
அவருடைய மரணத்தை அவர் முன்பே கணித்திருக்கிறார். சித்தர் என்றே அவரை நான் அழைக்க விரும்புகின்றேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி. வண்ணநிலவன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.