சாண்டர்ஸ் எனும் ஆங்கிலேய காவல் அதிகாரியை கொன்ற பகத் சிங்கும் அவனது நண்பர்களும் தூக்கிலிடப்பட்டதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் அந்த அதிகாரியை கொன்றதற்கு காரணம் லாலா லஜபதிராய் என்பது பலருக்கும் தெரியாது.
பஞ்சாபின் சிங்கம் என அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் வெள்ளையர்களால் தாக்கப்பட்டு இறந்த தினம் இன்று. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான ஒரு தலைவராக கருதப்பட்ட லாலா லஜபதிராய் 1865 ஜனவரி 28 ல் மோகா மாவட்டத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே இந்து மதத்தின் மீதும், பாரத தேசத்தின் மீதும் பெரும் பற்று கொண்டிருந்த இவர் பிற்காலத்தில் இவற்றின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றினார். ஒருங்கிணைந்த இந்தியாவின் லாகூரில் சட்டம் படித்து வந்த இவர் தயானந்த சரஸ்வதியின் இந்து மத சீர்திருத்தங்களால் ஈர்க்கப்பட்டு அவரின் ஆரிய சமாஜத்தில் சேர்ந்தார்.
படிப்பு முடிந்த பின் ஹிசார் மாவட்டத்துக்கு சென்றார் லஜபதிராய். சிறுவயது முதல் தனக்கிருந்த சுதந்திர வேட்கையை வெளிப்படுத்த சிறந்த நேரமாக அதனை கருதிய அவர், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக பல போராட்டங்களில் கலந்து கொண்டார். ஆங்கிலேயரால் இந்தியாவில் நடத்தப்படும் கொடுமைகளை வெளி உலகிற்குச் சொல்லும் பொருட்டு 1914 முதல் 1920 வரை இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து ஆட்சியின் கொடுமைகளை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு சேர்க்க அமெரிக்காவில் 'இந்திய சுயாட்சி கழகம்' என்ற அமைப்பை நிறுவினார். இதன் விளைவாக இந்தியாவின் நிலை எங்கும் தெரிய ஆரம்பித்து, அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இந்தியா சுதந்திர போராட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறத் தொடங்கின.
1920ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் இவர் ஆரம்பித்த 'இந்துஸ்தான் தகவல் சேவை' என்ற பத்திரிகை இந்தியர்களின் உணர்வுகளை உலக அரங்கில் பறைசாற்றியது. இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார் லஜபதிராய். 1928ல் இந்தியாவின் அரசியல் நிலவரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சைமன் குழுவில் இந்தியர்கள் யாரும் இல்லை என பெருமளவில் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
சைமன் குழு லாகூர் சென்ற பொழுது அதை எதிர்த்து அமைதிப் போராட்டம் நடத்தினார் லஜபதிராய். அப்பொழுது ஜேம்ஸ் ஸ்காட் எனும் காவலதிகாரி தலைமையிலான காவலர்கள் லத்தியால் அடித்து போராட்டத்தை கலைத்தனர். இதில் லஜபதிராயின் மேல் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலால் அவர் நிலைகுலைந்தார். 16 நாட்கள் உயிருக்குப் போராடிய அவர் 1928 நவம்பர் 17ல் வீரமரணமடைந்தார். இது பஞ்சாப் மக்களால் பெரும் துயராகப் பார்க்கப்பட்டது. லஜபதிராய் மீது கொண்ட மரியாதையால், இதற்கு பழிவாங்கும் பொருட்டு டிசம்பர் 18 ஆம் நாள் பகத் சிங் தனது நண்பர்களுடன் ஜேம்ஸ் ஸ்காட்டை கொல்ல செல்கிறார். ஆனால் அங்கு நடந்த குழப்பத்தில் ஸ்காட்டுக்கு பதிலாக சாண்டர்ஸ் கொல்லப்பட்டு, பகத் சிங் சிறைக்கு அனுப்பப்பட்டார்.