கடந்த சில நாட்களாக திமுக, பாஜகவுக்கு இடையே வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் தொடர்பாக ஏற்படுத்திய சர்ச்சை தற்போது வரை குறைந்தபாடில்லை. தொடர்ந்து இருதரப்பும் அதுபற்றி பேசி வருகிறது. இந்நிலையில் இந்த வாட்ச் விவகாரத்தை வைத்தே 25 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று அண்ணாமலை பேசியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் குடியாத்தம் குமரனிடம் பேசியபோது, "பாஜக முதலில் உள்ளாட்சித் தேர்தலில் எங்கேயாவது வெற்றிபெற்றதை பார்த்துள்ளார்களா? சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாநகராட்சி தேர்தலில் எத்தனை கவுன்சிலர்கள் வெற்றி பெற்றார்கள், எத்தனை நகராட்சியைக் கைப்பற்றியுள்ளார்கள் என்ற விவரத்தை முதலில் சொல்வார்களா இவர்கள்.
தனித்து நின்றால் நோட்டா வாங்கும் வாக்குகள் கூட இவர்கள் வாங்க முடியாது என்ற நிலையில் அவர்கள் 25 சீட் ஜெயிப்போம், 50 சீட் ஜெயிப்போம் என்று கதை விட்டு வருகிறார்கள். கனவில் கூட இவர்களால் தேர்தலில் நின்று தமிழகத்தில் வெற்றி பெறுவதாக நினைக்கக்கூடாது. ஏனென்றால், நடக்காத ஒன்றை எதற்காக இவர்கள் தேவையின்றி நினைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. குறிப்பாகக் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற போது அவர்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றோம்.
எனவே பாஜக எங்களைத் தேர்தலுக்குப் பயந்த கட்சி என்றோ, எங்களால் வெற்றிபெற முடியாது என்றோ சொல்ல எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. இன்றைக்கு பாஜகவைச் சேர்ந்த அக்கா வானதி சீனிவாசன் எல்லாம் வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுகிறார். இவர்கள் எதற்காக அதைக் கையில் எடுக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். அண்ணாமலை பதவிக்கு வந்து அவர்களை டம்மி செய்ததன் காரணமாக நாம் திமுகவை விமர்சித்தால் தான் நம்மை நாலு திமுககாரர்ரகள் திட்டுவார்கள் என்ற எண்ணத்தில் திமுகவைப் பற்றித் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இல்லை என்றால் பாஜகவில் உள்ள யாரும் திமுகவை விமர்சனம் செய்ய எந்த தார்மீக தகுதியும் இல்லை" என்றார்.