Skip to main content

ஒன்றரை மணி நேரம் பேசிய எடப்பாடி! உளறும் சாட்சியால் அலறும் அதிமுக! 

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

 

Kodanadu case police investigating with anubav ravi

 

"கொடநாடு கொலை வழக்கு இதுவரை ஐந்து மரணங்களைச் சந்தித்திருக்கிறது. அடுத்து ஆறாவது மரணத்தைச் சந்திக்கப்போகிறது' என்கிற இந்த வழக்கைப் பற்றி விபரம் அறிந்த வட்டாரங்கள்.

 

எல்லா வழக்கிற்கும் ஒரு சாவி இருக்கும். முக்கியமான சாவி மூலம் அந்த வழக்கின் உண்மைகள் வெளிவரும். அதுபோல கொடநாடு கொள்ளை வழக்கின் முக்கிய சாவியாகவும் சாட்சியாகவும் இருப்பவர் அனுபவ் ரவி.


லாரி தொழிலாளியின் மகனாக கோவையில் வாழ்ந்த இவர், கோவையில் உள்ள நகை அங்காடி மிகுந்த ஒரு தெருவில் நகைக் கடைகளுக்கு வாடிக்கையாளர்களை அழைக்கும் சிறுவனாக வேலை பார்த்தவர். இன்று கோவை மாநகர வி.ஐ.பி.க்களுக்கு மிகவும் பரிச்சயமான நபராக, கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களுடன் வலம் வருகிறார். ஆரம்பத்தில் அரசியல் தலைவரான ஜான்பாண்டியனுக்கு நெருக்கமாக இருந்த இவர், அடுத்தகட்டமாக பா.ம.க. வி.ஐ.பி.யானார்.


கடந்த ஆட்சியில் கோவையில் கோலோச்சிய எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், எடப்பாடிக்கு வலதுகரமான இளங்கோவன் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகினார். இதற்கெல்லாம் காரணம் கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி தான்.


கோவையில் எங்கெல்லாம் நிலத் தகராறு இருக்கிறதோ அந்தச் சொத்தில் தலையிடுவதுதான் அனுபவ் ரவியின் வேலை. அந்தச் சொத்துக்களை மிரட்டி வாங்கி, அதில் கோடிக்கணக்கில் பணம் பார்த்துவந்த அனுபவ் ரவியை ஆறுகுட்டி அ.தி.மு.க.வில் சேர்த்துவிட்டார். ஆளுங்கட்சி, கட்டப்பஞ்சாயத்து என பணம் பார்க்கிற ரவிக்கு கொடநாட்டில் கொள்ளையடித்த கனகராஜ் நண்பராகிறார். குடிப்பழக்கத்தால் கார்டனிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட கனகராஜை, ஜெ.வின் செக்யூரிட்டி ஆபீசர் கோவையைச் சேர்ந்த அசோக்குமாரிடம் அனுப்பி வைக்கிறார். அசோக்குமாரிடம்தான் கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட சயானும் வேலை பார்க்கிறார். இப்படி சயானுக்கும் அனுபவ் ரவிக்கும் ஒரே நேரத்தில் அறிமுகமாகிறார் கனகராஜ். 

 

Kodanadu case police investigating with anubav ravi
அன்பரசன்

 

அந்த கனகராஜை தனக்கு நெருக்கமான ஆறுகுட்டி எம்.எல்.ஏ.விடம் அனுப்பி வைக்கிறார் ரவி. அத்துடன் வேலுமணி அண்ணன் அன்பரசனை, கனகராஜுக்கு அறிமுகப்படுத்துகிறார் ரவி. ஏற்கனவே சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட கனகராஜுக்கு இளங்கோவனையும், கார்டனில் இருந்ததால் எடப்பாடியையும் நன்றாகத் தெரிந்த கனகராஜுக்கு கொடநாடு கொள்ளை வழக்கின் சதித்திட்டத்தினை அனுபவ் ரவி சொல்லித் தருகிறார். அதற்கு சயானை பயன்படுத்திக்கொள்கிறார் கனகராஜ். கொடநாட்டில் கார்பெண்டர் வேலை செய்த சஜீவனின் துணையோடு கொள்ளை அரங்கேறுகிறது.


இந்தக் கொள்ளையில் முதலில் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்படுகிறார். அடுத்ததாக கனகராஜ் கொல்லப்படுகிறார். கனகராஜ் கொல்லப்படுவதற்கு முன்பு என்னைக் காப்பாற்றுங்கள் என அனுபவ் ரவியைத்தான் தொடர்புகொள்கிறார். அனுபவ் ரவியை அரசுத் தரப்பு சாட்சியாக வழக்கில் சேர்க்கிறது. அவர் கோர்ட்டுக்கு எம்.எல்.ஏ. ஸ்டிக்கர் போட்ட காரில் வர... தி.மு.க. வழக்கறிஞர் ஆனந்த், அதை பிரச்சனையாக்குகிறார். அனுபவ் ரவி ஒரு பொய் சாட்சி என பதிவு செய்கிறார்.

 

Kodanadu case police investigating with anubav ravi

 

எடப்பாடி ஆட்சி முடிந்ததும் கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு வந்தது. உடனே அனுபவ் ரவிக்கு, தனக்கு நெருக்கமான போலீசாரை வைத்து சம்மன் கொடுக்க வைத்தார் எடப்பாடி. அந்த சம்மனை எதிர்த்து மறு விசாரணைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அனுபவ் ரவி பேரில் வழக்கு போட்டார். அந்த வழக்கு டிஸ்மிஸ் ஆக.. வழக்கு விசாரணை சூடுபிடித்தது. வழக்கில் தன்னை எப்படியும் நெருங்குவார்கள் என கணித்த அனுபவ் ரவி, "நான் அப்ரூவர் ஆகிறேன்' என போலீசாருக்கு தூதுவிட்டார். போலீசார் கேட்டபோது, "எடப்படிதான் கொடநாட்டில் கொள்ளையடிக்கச் சொன்னார் என நான் சாட்சி சொல்கிறேன்' என்றார். "நாங்கள் எதையும் சொல்லப்போவதில்லை. நீ நடந்த உண்மைகளைச் சொல்' என கேட்டபோது, ஒன்றும் சொல்லாமல் நழுவினார் அனுபவ் ரவி.

 

கொஞ்சநாள் சைலண்ட்டாக இருந்த போலீசார், ஆறுகுட்டியை விசாரணைக்கு அழைத்தார்கள். விசாரணையில் கனகராஜும் அனுபவ் ரவியும் நெருக்கமான நண்பர்கள். மணிக்கணக்கில் போனில் பேசுவார்கள். கேட்டால் "அரசியல் நிலவரம் பேசுகிறோம்' என்பார்கள். "கொடநாடு கொள்ளையின்போது கோவைக்கு வரும் கனகராஜ், அனுபவ் ரவியுடன் சேர்ந்து சுற்றுவார். மற்படி எனக்கு எதுவும் தெரியாது' என்றார்.

 

போலீசார் அனுபவ் ரவி விவகாரத்தை நோண்ட ஆரம்பித்தார்கள். அவர் நடத்தும் திருட்டு நகைத் தொழில், கட்டப்பஞ்சாயத்து செய்து வாங்கிய சொத்து என அனைத்தையும் கைப்பற்றிய போலீசார், அனுபவ் ரவியை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்குச் சென்றுவிட்டு வந்த ரவி, வழக்கத்தை விட அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். "கொடநாடு கொள்ளையில் நான் ஈடுபட விரும்பவில்லை. என்னிடம் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றரை மணி நேரம் விடாமல் பேசி கன்வின்ஸ் செய்தார்'' என ரகசியங்களை உளறிக் கொட்டி வருகிறார். இதற்கிடையே அனுபவ் ரவியை கைது செய்யாமல் இருக்க அவருக்கு முன்ஜாமீன் கோரி, கோவை மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் பிரிவைச் சேர்ந்த சீனியர் வழக்கறிஞர் ஒருவர் ஊட்டி கோர்ட்டிலிருந்து வழக்கு ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கிறார்.

 

Kodanadu case police investigating with anubav ravi

 

போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ள அனுபவ் ரவியை யாரும் எதுவும் செய்துவிடக்கூடாது அல்லது அவரே விபரீத முடிவுக்கு போய்விடக்கூடாது என போலீசார் கவனமாகவே அவரை கண்காணிக்கிறார்கள். "வெளியில் போதையில் எடப்பாடி பற்றியும், கொடநாடு கொள்ளை பற்றியும் உளறும் அனுபவ் ரவி, போலீஸ் விசாரணையில் நடந்தவற்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்' என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.


இதுவரை சஜீவன், ஆறுகுட்டி என சென்றுகொண்டிருந்த புலன்விசாரணையில், வேலுமணியின் அண்ணன் அன்பரசன் எப்படி சம்பந்தப்படுகிறார் என குற்றவாளிகள் தரப்பு சொல்லியிருக்கிறது. அவர்களை கேரளாவிலிருந்து சஜீவனின் தம்பி சுனில் அழைத்து வந்து வேலுமணிக்கு நெருக்கமான இடத்தில் வைத்து போலீசிடம் ஒப்படைத்ததாக தெளிவாக அவர்கள் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.


கனகராஜ் கொல்லப்படுவதற்கு முன்பு தன்னைக் காப்பாற்ற அனுபவ் ரவிக்கு போன் செய்திருக்கிறான். அதேபோல் அனுபவ் ரவியின் நண்பரான அசோக்குமார் மற்றும் அனுபவ் ரவி ஆகியோர் இணைந்து, கோவை குப்புசாமி மருத்துவமனையில் விபத்தில் சிக்கி, படுத்திருந்த சயானுக்கு நான்கு லட்ச ரூபாய்க்கு மருத்துவம் பார்த்திருக்கிறார்கள்.


இப்படி... கொடநாடு கொள்ளையில் நீக்கமற நிறைந்துள்ள அனுபவ் ரவி, போலீசில் அனைத்தையும் சொல்லியிருக்கிறார். விசாரணை நடத்தும் ஐ.ஜி. சுதாகரின் ஸ்டைலே, ஒரு குற்றவாளியை விசாரிப்பதற்கு முன்பு அவர் சம்பந்தமான விவரங்களை அவரது டெலிபோன் ரெக்கார்டுகள் உட்பட அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டுதான் விசாரிப்பார். அதில் அனுபவ் ரவி சேர்த்த வில்லங்கமான கட்டப்பஞ்சாயத்துகளை வைத்து அவரை சுதாகர் நெருக்கியிருக்கிறார்.


"கோடிகளை இழக்க விரும்பாத அனுபவ் ரவி... எடப்பாடி, இளங்கோவன், எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் உட்பட அனைவரைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்' என்கிறார்கள் அனுபவ் ரவியின் நண்பர்கள் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.


"கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள், பினாமி சொத்துக்களான அதற்குரிய ஆவணங்கள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் எடப்பாடி கொடுத்துவிட்டார். இந்தக் கொள்ளை எங்கே வெளியே தெரியப்போகிறது என நினைத்த எடப்பாடி, தனது ஆபரேஷனில் அனுபவ் ரவி போன்ற பலவீனமான நபர்களை ஈடுபடுத்தியிருக்கிறார். அதுதான் இந்த வழக்கின் உண்மைகளை வெளிக்கொண்டுவரும் சாவியாக மாறியுள்ளது' என்கிறார்கள் வழக்கைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

 

 

Next Story

கொடநாடு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
C.b.C.I.D search in KodaNadu Bungalow

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (07.03.2024) நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது கொடநாடு பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (08.03.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கொடநாடு வழக்கு; மனோஜ் சாமிக்கு சம்மன் அனுப்பிய சி.பி.சி.ஐ.டி.

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
case of Kodanadu CbCID sent summons to Manoj Sami

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கு தொடர்பாக முதல் குற்றவாளியாக சேர்க்கப்ட்டடுள்ள சயான் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) மதியம் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி இருந்தனர். இந்த விசாரணையின் போது அவர் 35 பக்கங்களுக்கு வாக்குமூலம் அளித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவில் பூசாரியாக உள்ள மனோஜ் சாமி 9 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சயான் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக மனோஜ் சாமிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அளித்துள்ளனர். அதில் வரும் 15 ஆம் தேதி (15.02.2024) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வகக் குழு தமிழகம் வருகை தந்திருந்தனர். அதன்படி இந்த குழுவினர் திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் இந்த வழக்கில் தொடர்புடைய 60 தொலைபேசி எண்கள், 19 டவர் இடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.