Skip to main content

சூடு பறக்கும் குளிர் பிரதேசம்! கொடநாடு வழக்கில் கைதாகப்போகும் முதல் நபர்!

 

Kodanad case police gonna arrest manager Nadarajan in re investigation

 

கொடநாடு கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக தற்போது நடைபெறும் மேலதிக விசாரணையில் முதன்முறையாக ஒருவரைக் கைதுசெய்யப் போகிறார்கள் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

 

கொடநாடு எஸ்டேட்டிற்குள் குற்றவாளிகளின் கார் சென்றதுமே அங்கிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன. சி.சி.டி.வி.யின் இயக்கமும், ஜெ. சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் நிறுத்தப்பட்டதைப் போல நிறுத்தப்பட்டது. மின்சாரத்தையும் சி.சி.டி.வி இயக்கத்தையும் நிறுத்தியது யார் என போலீசார் கூடுதல் விசாரணையின்போது ஆராய்ந்தார்கள். கொடநாட்டுக்கு மின் சப்ளை செய்யும் அதிகாரியை விசாரித்தார்கள்.

 

அவர் மிகத் தெளிவாக அறிக்கை தந்தார். தமிழ்நாடு மின்சார வாரிய ரெக்கார்டுகளின்படி கொடநாட்டில் கொள்ளை, கொலை நடந்த அன்று வி.வி.ஐ.பி. ஜெ.வின் பங்களாவரை எந்த மின்தடையும் ஏற்படவில்லை. அன்றைய தினம் கொடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட மின்தடை என்பது, அங்கே உள்ள ஒரு நபரால் ஏற்படுத்தப்பட்ட லோக்கல் மின்தடை. அது அங்குள்ள டிரான்ஸ்ஃபார்மரில் மின்மாற்றியை இயங்காமல் செய்வது மூலமாகவோ, மின் தொடர்பை அறுப்பதன் மூலமாகவோ நடந்திருக்கும். ஏனெனில், கொடநாடு பங்களாவிற்குச் செல்லும் மின்சாரம்தான் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் செல்கிறது. கிராமங்களில் எந்த மின்தடையும் ஏற்படவில்லை என மின்வாரிய அதிகாரி தெளிவாகக் கூறினார்.

 

மின் இணைப்பை கனகராஜ் துண்டிக்கவில்லை. கொடநாட்டில் விளக்குகள் அணைந்தபோது அவர் கொள்ளையடிப்பவர்களுடன் காரில் இருந்தார். அங்கு காவல்காரர்களாக இருந்த கிருஷ்ணதாபா, கொலையுண்ட ஓம்பகதூர் ஆகியோர் மின் இணைப்பையும் சி.சி.டி.வி. இயக்கத்தையும் நிறுத்தவில்லை. ஏனெனில், அவர்கள் இருவரும் கொள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்டார்கள். அதில் ஓம்பகதூர் உயிரிழந்தார்.

 

கொள்ளையடிக்கப் போகும்போது மின்சாரமும் சி.சி.டி.வி.யும் இயங்காது என கனகராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த இரண்டையும் பராமரித்துவந்த தினேஷ் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அப்போது கொடநாட்டில் கொலை, கொள்ளைக்கு உயிருடன் சாட்சியாக இருந்த கிருஷ்ணதாபா, அவரது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். கூடுதல் விசாரணையில் முதலில் பிடித்தது கிருஷ்ணதாபாவைதான். அவரது ரெக்கார்டுகள் போலீஸ் கையிலேயே இருந்தது. அவரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டது. அவர் கொள்ளை நடந்த அன்று மட்டுமல்ல, அடுத்த சில நாட்களிலும் கொடநாட்டில்தான் இருந்தார். தினேஷை தற்கொலைக்கு யார் தூண்டினார்கள் என கிருஷ்ணதாபாவிற்கு தெரிந்திருக்கிறது. கிருஷ்ணதாபாவை கொடநாட்டிலிருந்து போய்விடு என சொன்ன நபரும், தினேஷை இந்த உலகத்தைவிட்டு போய்விடும் அளவிற்கு மிரட்டிய நபரும், ஒரே நபர்தான் என போலீசார் கண்டுபிடித்தனர்.

 

ad

 

இந்த விசாரணையில் கூடுதலாக ஒரு தகவலை மத்திய அரசின் வருமான வரித்துறை அளித்தது. அந்தத் தகவலும் குறிப்பிட்ட நபரைப் பற்றித்தான் இருந்தது. பேங்க் ஆஃப் இந்தியாவின் கொடநாடு கிளையிலும், குன்னூர் கிளையிலும் கொடநாடு எஸ்டேட்டின் வங்கிக் கணக்குகள் இருந்தன. அங்கு அந்த நபரின் பெர்ஸனல் அக்கவுண்ட்டும், அவர் தன் பெயரில் ஆரம்பித்த டீ கம்பெனியின் அக்கவுண்ட்டும் இருந்தது. இவை அனைத்தையும் முடக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது மத்திய வருமானவரித்துறை.

 

அந்த நபர், கொடநாடு எஸ்டேட்டில் விளையும் டீயை வியாபாரம் செய்வதோடு, குன்னூரில் ரகசியமாக தேயிலைகளையும் விற்றுவந்தார். கொடநாடு எஸ்டேட்டில் மட்டும் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு தேயிலை வியாபாரம் நடந்தது என கணக்கு காட்டும் அந்த நபர், குன்னூர் விற்பனையை சரியாக கணக்கு காட்டுவதில்லை. அதை தனது சொந்த கம்பெனி அக்கவுண்ட்டில் போடுகிறார் என வருமானவரித்துறை தகவல் வர, போலீசார் நொந்துபோனார்கள்.

 

அந்த நபரை போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தார்கள். அவர் அப்போது, கொடநாடு கொள்ளை வழக்கை விசாரித்த நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா மற்றும் பாரி மீது பரபரப்பான குற்றச்சாட்டை வீசினார். கொடநாட்டில், முதல் மாடியில் இருந்த ஜெ., சசி ஆகியோரின் அறைகள் மற்றும் பொருட்கள் வைத்திருந்த ஸ்டோர் ரூம் ஆகியவற்றுடன், கூடுதலாக ஒரு ரூம் என நான்கு அறைகளைத்தான் கொள்ளையர்கள் களவாடினர். ஆனால், ஐந்தாவதாக ஒரு ரூம் இருந்தது. அது ஜெ., சசியின் ரகசிய அறை. அதைத் திறந்தது, கொலை, கொள்ளைக்குப் பிறகு வந்த முரளி ரம்பாவும் பாரியும்தான் என்றும், அங்கிருந்த பொருட்களின் கணக்குகள் மாறுகின்றன எனவும் சொல்லப்பட, கூடுதல் விசாரணை செய்யும் ஐ.ஜி. பாரியே நேரடியாக கொடநாட்டில் ஐந்தாவதாக உள்ள ரூமை பார்த்துவிட்டுச் சென்றார்.

 

இந்த நபர் முதல் சாட்சியம் அளிக்கும்போது தனக்கு எதுவும் தெரியாது என்றார். அப்போது விசாரணையில் சயானின் வக்கீல், ஆனந்தலட்சுமி என்கிற வேலைக்கார பெண், ஜெ. அறையில் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. அதை நான்தான் சுத்தம் செய்தேன் என சொல்கிறாரே என கிராஸ் செய்தபோதுதான் சில உண்மைகளை ஒத்துக்கொண்டார். அந்த நபரால் உடைக்கப்பட்ட ஐந்தாவது அறையில் சசிகலா, ஜெ. சம்பந்தப்பட்ட டாகுமெண்டுகள் இருந்தன. அவற்றை அப்போது சோதனை செய்ய வந்த காவல்துறை அதிகாரிகளே எடுத்துச் சென்றனர் எனக்கூற, கூடுதல் விசாரணை செய்யும் டீம் அவர்களைக் கேட்க, அவர்கள் நடந்த விசாரணைகளை தெளிவாகச் சொல்லிவிட்டனர்.

 

சாதாரண செருப்புக் காலுடன் அங்கிருந்த மேனேஜருக்கு உதவியாக வந்த நபர், இன்று நூற்றுக்கணக்கான கோடிக்கு அதிபர். இவரும், இவரது மச்சானான பத்திரப்பதிவு அதிகாரி செல்வகுமாரும் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதிப்பதற்கு அதிமுக அரசு உதவி செய்துள்ளது. அதற்கு நன்றிக்கடனாகத்தான் இந்த நபர், கொடநாடு கொலை, கொள்ளைக்கு உதவி செய்துள்ளார். அவர்தான் கொடநாடு மேனேஜர் நடராஜன். அவரை விரைவில் கைது செய்து விசாரிக்க உள்ளனர் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.