Skip to main content

"இங்க துரத்தினா அங்க போவார், அங்க துரத்தினா இங்க வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்!" - ஜோதிமணி சிறப்பு பேட்டி

Published on 24/03/2019 | Edited on 25/03/2019


கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி, பரபரப்பான பிரச்சாரத்தில் இருந்தார். அதிமுகவின் சீனியரும் முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரையை எதிர்த்துப் போட்டியிடுகிறார். கள நிலவரம் குறித்தும், வியூகம் குறித்தும்  அவரிடம் பேசினோம். நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி. 
 

 

M. Thambidurai

 

தம்பிதுரை உங்களுக்கு எந்த அளவுக்கு போட்டியாக இருப்பார்?

 

தம்பிதுரை எனக்கு ஒரு போட்டியாகவே இருக்க முடியாது. அதிமுகவின் மூத்த தலைவர், முன்னாள் சட்ட அமைச்சர், துணை சபாநாயகர் என பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார். துரதிருஷ்டவசமாக துணை சபாநாயகர் பதவியில் இருந்த அவரை இன்று மக்கள் ஊருக்குள் விடாமல் விரட்டி அடிக்கும் சூழல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவார், மக்களை சந்திக்க மாட்டார். மக்களும் அவரை சந்திக்க முடியாது.

 

 

மக்கள் கடுப்பில் இருப்பார்கள். உடனே கிருஷ்ணகிரி போய்விடுவார். அங்கும் மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார், தொகுதிக்கும் எதுவும் செய்ய மாட்டார், அங்கு மக்கள் கோபப்படுவார்கள், திரும்பவும் கரூருக்கு வந்துவிடுவார். இப்படித்தான் அவர் அரசியல் செய்கிறார். போனமுறை ஜெயலலிதாவின் வலுவான ஆதரவால் கரையேறினார். 

 

இன்று அதிமுக, பாஜகவுக்கு பினாமியாக இருக்கிறது. பாஜக ஒரு சுமை, அதனை தூக்கி சுமக்க முடியாது என்று சொன்னவர், அடுத்த நாள் பாஜகவைப்போல், மோடியைப்போல் ஒரு சிறந்த கட்சியோ, தலைவரோ இருக்க முடியாது என்கிறார். 48 மணி நேரத்தில் தனது பேச்சை மாற்றி பேசுகிறார். 48 மணி நேரத்தில் என்ன நடந்தது?. என்ன கைமாறியது?.

 

எனவே நம்பகத்தன்மை அற்றவராகவும், மக்களுக்கு எதுவும் செய்யாதவராகவும், மக்களால் அணுக முடியாதவராகவும் இருக்கிறார். இன்று 40 வயதில் உள்ள இளைஞர்கள் 60 சதவீதம் இருக்கிறார்கள். அவருக்கு வயது 70க்கு மேல் ஆகிறது. எனவே இளைஞர்களை தொடர்புகொள்ள அவரால் முடியாது. மோடி தமிழகத்தில் ஒரு வெறுக்கப்படும் நபராக இருக்கிறார்.

 

பினாமியாக உள்ள அதிமுக அரசு அதைவிட பெரிய வெறுக்கக்தக்க அரசாங்கமாக இருக்கிறது. அதன் பிரதிநிதியாகவும் அவர் இருக்கிறார். கட்சியோ, கூட்டணியோ, வேட்பாளர் வலுவோ எதுவும் இல்லாத சூழலில் இருக்கிறார்.


தமிழகத்தில் எங்களின் வலிமையான கூட்டணியை திமுக தலைவர் தலைமையேற்று நடத்துகிறார். கரூரில் திமுக தலைமையில் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக, தீவிரமாக களத்தில் நிற்கிறோம். எனவே தம்பிதுரையை வெல்வது எளிதான விஷயம். இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். 

 

கரூர் தொகுதியைப் பொறுத்தமட்டில் நீங்கள் முக்கியமாக கவனம் செலுத்தும் பிரச்சனைகள் என்னவாக இருக்கும்?

 

கரூர், விவசாயம் பின்புலம் உள்ள ஒரு தொகுதி. முருங்கைக்காய், பூ உள்ளிட்ட விவசாய பொருள்களின் மதிப்புக்கூட்டு  செய்வதற்கும் அதனை குளிர்பதன கிடங்கில் வைப்பதற்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தேவையானது நிலத்தடி நீர். நிலத்தடி நீரை அதிகப்படுத்த முக்கியத்துவம் தர வேண்டும். 

 

கரூர் மிகப்பெரிய தொழில் நகரம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.யால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி பிரதமரானதும் முதல் வேலையாக கரூர் மட்டுமல்ல, கொங்கு மண்டலம் உள்பட தமிழகத்தில் உள்ள அத்தனை சிறு, குறு தொழில் முனைவோரை அழைத்துச் சென்று அவர்களின் குறைகளை, பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்க செய்வோம். அவர்களின் பிரச்சனையை தீர்க்க துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

 

 

அதிகமான கிராமப்புற பகுதிகள் இருக்கிறது. அங்கு நிறைய இளைஞர்கள் எம்.ஏ., எம்.எஸ்.சி., பி.இ. என பட்டப் படிப்புகள் முடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலைக்கும் கல்விக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. கல்வி என்பது திறனாக மாறாமல் மொழி உள்பட பல்வேறு காரணங்களால் அந்த இடைவெளி ஏற்படுகிறது. இந்த இடைவெளியை நீக்கி அவர்களின் திறனை மேம்படுத்த நாங்கள் ஏற்கனவே அரவக்குறிச்சி பகுதியில் 'கற்க கசடற' என்று ஒரு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறோம். அதனை மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்துவோம். 

 

 

பெண்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மையம் என தொடங்க நினைத்தேன். பொள்ளாச்சி சம்பவம் வெளிவராததற்கு முன்பே இதனை தொடங்க முடிவு செய்தேன். ஒரு பெண்ணாக இருப்பதால், சமூகத்தில் பெண்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். பல மன அழுத்தங்களுக்கு இளம் பெண்கள், பெண்கள் உள்ளாகிறார்கள். அவர்களுக்கு ஒரு கவுன்சிலிங் சென்டராகவும், அவர்களது பிரச்சனைகளை போன் மூலம் சொல்லக்கூடிய உதவி மையம் போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கவும் நினைக்கிறோம். 

 

 

கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டிலும், உடற்பயிற்சியிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். மனதையும், உடலையும் ரிலாக்ஸாக வைத்திருக்க விளையாட்டும், உடற்பயிற்சியும் அவசியமாகிறது. இவர்கள் அதிக பணம் கொடுத்து தனியார் உடற்பயிற்சி கூடத்திற்கு போக முடியாது. எனவே இளைஞர்களுக்காக ஒரு உடற்பயிற்சி கூடம் உருவாக்கும் திட்டம் உள்ளது. 

 

 

சுத்தீகரிக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீர் எல்லா கிராமங்களுக்கும் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இவைதான் முக்கியமானவை. இது தவிர்த்து கரூர் தொகுதிக்கென ஒவ்வொரு ஊரிலும் ஆய்வு செய்து 'என் உறுதி' என்ற பெயரில் சில வாக்குறுதிகள் கொண்ட உறுதிமொழியை கொடுக்க உள்ளோம். அதனை தேர்தலுக்குப் பின்னால் நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்.  

 

congress karur candidate jothimani special interview

 

தேர்தலில் பண பலம்தான் வெற்றி பெறும் என்று கூறுகிறார்களே? 

 

பண பலம்தான் வெற்றி பெறும் என்று சொன்னால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் வெற்றிப்பெற்றிருக்க முடியாது. பணமதிப்பிழப்பிலேயும், ரபேல் ஊழலிலேயும் பல லட்சக்கணக்கான கோடிகளை அள்ளி வைத்திருக்கும் நரேந்திர மோடி அதையெல்லாம் கொண்டு போய் அங்கு கரைபுரள விட்டார். பணம் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் என்று மக்களை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. மக்கள் சிந்திப்பார்கள். சிந்தித்துதான் ஓட்டு போடுகிறார்கள். 

 

 

நாட்டின் பாதுகாப்பு, நிலையான ஆட்சிக்கு மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும் என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?

 

முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு என்றால் என்னவென்று தெரியாது போல. மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்குகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மோடியின் ஆட்சியில் அச்சுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் நவாஸ் ஷெரீப் வீட்டுக்கு ஓசி பிரியாணி சாப்பிட அழையா விருந்தாளியாக போகிறார் நரேந்திர மோடி. இந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவித்திருக்கிறார்கள். 

 

எடப்பாடி பழனிசாமி அடிச்ச கொள்ளைக்கு மோடி பாதுகாப்பாக இருக்கிறார். மோடி அடிச்ச கொள்ளைக்கு எடப்பாடி பாதுகாப்பாக இருக்கிறார். மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள். அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். 

 

காங்கிரஸ் ஆட்சியைக் குறைகூறும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸின் முக்கியமான சாதனைகளாக எவற்றை சொல்வீர்கள்?

 

காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை சொன்னால் அடுத்த தேர்தலே வந்துவிடும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில்கள், உள்கட்டமைப்பு என ஏராளமான விஷயங்களை செய்திருக்கிறார்கள். தொழில்நுட்ப புரட்சியையும், தொலைதொடர்பு புரட்சியையும் ராஜீவ்காந்தி உருவாக்கினார். பசுமைப்புரட்சியையும், வெண்மை புரட்சியையும் இந்திராகாந்தி உருவாக்கினார். மிகச்சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா இருப்பதற்கு நேரு காரணம். அணைகள், பாலங்கள், விமான நிலையங்கள், கல்விக்கூடங்கள், சுகாதார நிலையங்களை உருவாக்கியிருக்கிறார்கள். மன்மோகன் சிங் காலத்தில் உணவு பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வனப் பாதுகாப்பு சட்டம், நில சீர்திருத்தச் சட்டம், 100 நாள் வேலைக்கான உறுதி அளிக்கும் திட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம். 

 

 

இவ்வளவையும் செய்ய மோடியை நாங்கள் வற்புறுத்தவில்லை. மோடியை நாங்கள் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவர் செய்த மூன்றே மூன்று சாதனைகளை மட்டும் சொன்னால் போதும். அவரால் சொல்ல முடியவில்லையென்றால் எடப்பாடி பழனிசாமி சொன்னாலும் பரவாயில்லை. 

 

congress karur candidate jothimani special interview

 

ராகுல் உங்களுக்காக கரூர் சீட்டை கேட்டுப் பெற்றதாக வெளியாகும் செய்திகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 

எனக்கென்று இல்லை, கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுபவர்கள், அரசியலை மக்கள் சேவைகளாக கருதுபவர்கள், கட்சிப் பணியில் தொய்வு இல்லாமல் எவ்வித எதிர்பார்பும் இல்லாமல் உழைப்பவர்கள் பின்னால் எப்போதும் உறுதியாக நிற்கக்கூடியவர் ராகுல்காந்தி. அந்த அடிப்படையில் என்னுடைய தகுதி மற்றும் உழைப்பின் பின்னணியில் அவர் உறுதியாக நின்றிருக்கிறார். ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மிகப்பெரிய அரசியல் பின்புலம் இல்லாதவர்கள், அரசியல் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளிக்கும் என்று நிரூபித்திருக்கிறார் என்று நான் பார்க்கிறேன். இது எனக்கு கிடைத்த வாய்ப்பாக நான் நினைக்கவில்லை, கரூர் பாராளுமன்றத்தில் இருக்கிற மக்களில் ஒருவருக்கு கிடைத்த வாய்ப்பு. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

 

மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்கிறார்களே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

நீங்கள் சொல்வதுபோல் இந்தப் பேச்சு தொகுதி முழுவதும் மிகப்பெரிய அளவில் பரவியிருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்கள் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை. கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்றுதான் நான் சென்றுகொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இப்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன், வெற்றி பெறுவேன். கரூர் நாடாளுமன்றத்திற்கும், தமிழகத்திற்கும் என்னால் என்ன செய்ய முடியுமோ அதைப்பற்றித்தான் யோசிக்கிறேனே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.