நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை தொடர்பாக சில செய்திகளை தெரிவித்தார். தனக்கு முதல்வர் பதவியில் விரும்பம் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ரசிகர்கள் அவரின் இந்த கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு,
பலநாட்களுக்கு பிறகு அரசியல் தொடர்பாக ரஜினிகாந்த் நீண்ட செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன் மக்களிடம் எழுச்சி வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் பதவியை தான் ஏற்கப்போவதில்லை என்றும், கட்சியும் ஆட்சியும் வெவ்வேறு நபர்களிடம் இருக்கும் என்ற வகையில் அவர் பேசியுள்ளரார். இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
எல்லோரும் அரசியலுக்கு வரட்டும். ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரட்டும். அவர் வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கேள்விகளை தவிர்த்து வந்தோம். இப்போது அவர் வரவில்லை. இப்போது அவரே எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டார். அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். ஊடகங்களுக்கு ரஜினி தேவைப்படுகிறார். யாரோடு வேண்டுமானாலும் அவரை சேர்த்து கட்டுரை எழுதலாம். பத்திரிக்கைகள்தான் அவர் இவரோடு கூட்டணி வைக்கப் போகிறார், அவரோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று மாற்றிமாற்றி அவரை கூட்டணியில் கொண்டுவந்து விடுகிறார்கள். அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை தற்போது தெளிவாக கூறியுள்ளதாகவே நான் கருதுகிறேன்.
இத்தனை ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அண்ணாவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார், ஆனால் அண்ணாவின் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு அண்ணாவை பற்றிய புரிதல் தற்போது வந்துள்ளது. அவர் முதலில் வரட்டும். வீடுவீடாக சென்று வாக்கு கேட்கட்டும். முதல்வர் பதவியில் அமரமாட்டேன் என்கிறார். எதிர்கட்சி தலைவர் பதவியையும் ஏற்க மாட்டாரா? தேர்தலில் போட்டியிடுவாரா? சட்டமன்ற தேர்தலில் நிற்பாரா? என்று நமக்கு தெரியவில்லை. அப்படி நடந்தால் தொண்டர்கள் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்பாரா? அல்லது அவருடைய மனைவி பள்ளிக்கூடம் நடத்துவதை போல தனக்கும் அதற்கு சம்மந்தம் இல்லை என்று கூறுவாரா? என்று தெரியவில்லை.
1996 தேர்தலில் ரஜினி ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கே ரஜினி ஒரு காரணமாக இருந்ததாக சொல்லப்பட்டது. அப்படி என்றால் அவரால் ஆட்சி அமைக்க முடியாது என்பதை எப்படி தீர்மானமாக சொல்ல முடியும்?
அவர்தான் தெளிவாக சொல்லிவிட்டாரே, பத்திரிக்கையாளர்கள் மக்களிடம் சென்று தெளிவாக பேச வேண்டும் என்று உங்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளார். பெண்களுக்கு சரியா வாக்களிக்க தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டிலேயே பெண்களுக்கு வாக்களிக்க தெரியவில்லை என்று கூறிய ஒரே ஆள் இவராகத்தான் இருப்பார். இந்த கருத்தை இவரை தவிர யாராலும் சொல்ல முடியாது.