Skip to main content

தமிழக அரசு ராஜாவை தப்பட்டை கலைஞர் என்றோ, கொம்புத் தப்பட்டை கலைஞர் என்றோ கூறுவது தவறு...- மணிமாறன்

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

கலைத்துறையில் சிறப்பான பங்காற்றுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படாத நிலையில் 2011 முதல் 2018 வரையிலான 7 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பிப்ரவரி 28 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. 201 விருதுகள் அடங்கிய அந்தப் பட்டியலில் சினிமா மற்றுமின்றி பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர். முதல் முறையாக பறையிசைக் கலைஞரான பனையூர் ராஜா அவர்களுக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் விருதுபட்டியலில் அவரது பெயரை பறையாட்ட கலைஞர் என குறிப்பிடவில்லை என்ற சர்சைகள் எழுந்தன. இதுகுறித்து பிரபல பறையிசைக் கலைஞரும் புத்தர் கலைக்குழுவின் நிறுவனருமான மணிமாறனிடம் பேசினோம். அந்த உரையாடலின் தொகுப்பு.

 

thappattam

 

“பனையூர் ராஜா மட்டுமில்லாமல், மதுரையைச் சேர்ந்த மரக்கால் கட்டை கலைஞர் கோவிந்தராஜ், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பம்பைமேலக் கலைஞர் அய்யா.ராஜநிதி ஆகிய கலைஞர்களும் கலைமாமணி விருதை பெறவிருக்கிறார்கள். இந்த நிகழ்வு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, தமிழக அரசுக்கு எனது நன்றிகள். ஆனாலும், இதைக் கொண்டாட முடியவில்லை. காரணம் பறையிசைக் கலைஞராக இருக்கக்கூடிய ராஜாவுக்கு, அவர் சார்ந்தப் பறையிசைக் என்றப் பெயரில் இல்லாமல் கொம்புத் தப்பட்டை என்றப் பெயரில் தமிழக அரசு விருது அறிவித்திருக்கிறது. மிருதங்கம், கடம், தவில் போன்ற இசைக் கலைஞர்கள் அவரவர் சார்ந்த துறைப்பெயர்களில் விருது பெறும்போது, ராஜா மட்டும் பறையிசைப் பெயரில் இல்லாமல் வேறு பெயரில் விருது பெறுவது அவர் சார்ந்தத் துறைக்கு பெரியப் பின்னடைவாகத்தான் பார்க்கிறேன். கொம்பு என்பது ஊதுகுழல் இசைக் கருவி, தப்பட்டையென்பது பறை போலவே வட்டவடிவிலான இசைக்கருவிதான், ஆனாலும் அதனுடைய நாதம், சப்தம், அடிக்கிற முறைகள் என்பது வேறு, பறையின் அடிமுறைகள் வேறு. அனைத்து தோல் கருவிகளுக்கும் தாய் கருவி பறை, தாய் சொல்லும் பறை என்பதுதான். இருந்தாலும் பறையிசை மற்றக் கருவிகளிலிருந்து நுட்பமான முறையில் வேறுபட்டுள்ளது. எனவே ராஜாவை தப்பட்டை கலைஞர் என்றோ, கொம்புத் தப்பட்டை கலைஞர் என்றோ கூறுவது தவறு. பறைக்கலைஞர் என்றுதான் ராஜா அறிவிக்கப்பட வேண்டும். தமிழக அரசு எந்த நோக்கத்தில் பறையிசையை கொம்பு தப்பட்டை என அறிவித்தார்கள் என தெரியவில்லை. இப்போது எங்கள் கோரிக்கையெல்லாம் அவருக்கு விருதுடன் வழங்கப்படுகிற சான்றிதழிலாவது பறையிசையென்றோ தப்பாட்டம் என்றோக் குறிப்பிட வேண்டும் என்பதே. 
 

இன்னோன்று, ஒரே ஒரு பறையிசைக் கலைஞருக்கு மட்டும்தான் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2011 முதல் 2018 வரையுள்ள 8 ஆண்டுகளுக்கான 201 விருதுகளில் 51 விருதுகள் திரைத்துறையைச் சார்ந்தவர்கள், 20 குரலிசைக் கலைஞர்கள், 13 பேர் பரதநாட்டியம், 5 பேர் பரத ஆசிரியர்கள், 6 நாதஸ்வரக் கலைஞர்கள், 5  புல்லாங்குழல் இசைக் கலைஞர்கள், 4 வையிலின் கலைஞர்கள் ஆகியோருக்கும், சிலதுறைகளில் தலா ஒருவருக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. மத்திய அரசு அறிவித்திருக்கும்  ‘பால சரஸ்வதி’ விருதும்கூட இரண்டு பரதக் கலைஞர்களுக்கும், ஒரு பரத ஆசிரியருக்கும் வழங்கப்படுகிறது. வரலாற்றில் முதல்முறையாக பறையிசைக்கலைஞருக்கு விருது வழங்கப்படுகிறது.ஆயினும் மற்றக் கலைஞர்களோடு ஒப்பிடும்போது பறைக் கலைஞர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனிலையிலும், இத்தனையாண்டுகாலம் பறைக்கலைஞர்களுக்கு விருதுகளேதும் வழங்கப்படாத நிலையிலும் தற்போது ஒரேயொருக் கலைஞருக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தையளிக்கிறது.  மொத்தமாக சிலருக்கு கலைமாமணி விருது வழங்கப்படவேண்டும் என்பதே எங்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது. அதற்காக நாங்கள், திண்டுக்கல் பறைக்கலைஞர்  M.S.V தங்கவேல், மதுரை வேலு, அலங்காநல்லூர் மறைந்த கலைஞர் ஆறுமுகம், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜான் பீட்டர், எனது வாத்தியார் மறைந்த சிவகங்கை அழகர்சாமி போன்றவர்களின் பெயர்களை முன்மொழிந்தோம்.  ஐந்து பரத கலைஞர்களுக்கு மொத்தமாக விருது வழங்கப்படும்போது, ஏன் பறையாட்ட கலைஞர்களில் சிலருக்கு இந்த விருதை வழங்கியிருக்கக்கூடாது? வழங்கப்பட்ட ஒருவருக்கும் பறையாட்ட அல்லது தப்பாட்ட கலைஞர் என்றில்லாமல் கொம்புத் தப்பட்டையென்றப் பெயரில் கொடுப்பதற்கான அவசியம் என்ன?

 

manimaran


 

மாவட்டம்தோறும் கலைபண்பாட்டுத் துறைச் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனது அடையாள அட்டையில் பறையாட்டக் கலைஞர் என்றுதான் உள்ளது. இப்போது விருது வாங்கியிருக்கிற ராஜா அவர்களின் அடையாள அட்டையிலும் தப்பாட்டக் கலைஞர் என்றுதான் பதிவாகியுள்ளது. 2004ல் கலை பண்பாட்டுத் துறைச் சார்பாக கலை வளர்மணி விருது ராஜாவிற்கு வழங்கப்பட்டது, அதிலும் தப்பாட்டக்கலைஞர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதுதான். அதில் கொம்பு தப்பட்டை என்று குறிப்பிடப்படவில்லை எனும்போது கலைமாமணி விருதில் மட்டும் ஏன் இந்த மாற்றம் என்பது புரியவில்லை. மேடைகள்தோறும் பறையிசை கொண்டாட்டத்துக்கான இசை, துக்கத்துக்கான இசையில்லை. அது அனைத்து மக்களுக்குமான இசை, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான இசையில்லை என்பதை சொல்லிக்கொண்டே இருந்தாலும் மக்களிடையே பறைப் பற்றிய சாதியப் பார்வை மாறமல் இருந்தது. சமீபமாகத்தான் பறையிசை எழுச்சிப்பெற்றுவருகிறது. இப்போது என்னிடம் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பறையாட்டம் பயில வருகிறார்கள். தான் கற்றுகொள்வது மட்டுமில்லாமல் ஒரு நிகழ்த்துக் கலைஞராகவும் மாறவேண்டும் என்கிற அளவுக்கு ஆர்வம் கொண்டுள்ளனர்.  அவர்களிடம் நான் சொல்வதெல்லாம், எப்படி ஒரு மிருதங்கம் வாசிப்பவர் தன்னை மிருதங்க கலைஞர் என்றும், பரதம் ஆடுகிறவர் தன்னை பரதக் கலைஞர் என்றும் கூறிக்கொள்கிறாரோ, அதுபோல் நாமும் பறையிசைக் கலைஞன் என சொல்லிக்கொள்ள வேண்டும் என்பதெ. இத்தகைய சூழ்லில் அரசின் அதிகாரப்பூர்வமான சான்றிதழில் பறையாட்டத்திற்கு பதிலாக கொம்பு தப்பட்டையென மாற்றி குறிப்பிடப்படுவது இந்த துறைக்கே பெரிய பின்னடைவு". இவ்வாறு மணிமாறன் அவர்கள் கூறினார்.