அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுகவின் தலைவராகவும், போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒருமுறை கூட தோல்வியைச் சந்திக்காமலும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்தவர் கலைஞர். அவரின் 100வது பிறந்தநாளை திமுகவினர் கலைஞர் நூற்றாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கலைஞரின் நூற்றாண்டில் கலைஞருடன் பயணித்தவர்களையும், கலைஞர் குறித்து நூல்களை எழுதியவர்களையும் நக்கீரன் யூடியூப் பிரத்தியேகமாகப் பேட்டி கண்டு வருகிறது. அந்த வகையில் கலைஞருடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்த பேராசிரியர் நாகநாதன், நக்கீரன் யூடியூபுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியை நக்கீரன் வாசகர்களுக்காகத் தருகிறோம்.
நாகநாதன் கூறியதாவது; “நெருக்கடி காலகட்டத்தில் என் திருமணம் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக அப்போது ஆட்சியில் இருக்கிறது. எனது மாமனாரும், காமராஜரும் இரண்டு வருடங்கள் ஒரே சிறையில் இருந்தவர்கள். திருமணம் முடிந்து நான் எனது துணைவியார் எனது மாமனார் மூவரும் திருமலை பிள்ளை வீட்டில் காமராஜரை சந்தித்தோம்.
அப்போது காமராஜர், ‘எனக்கு உடலில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. வெயிலில் பட்டால் வியர்வை வந்து தோல் மீது அரிப்பு ஏற்படுகிறது. நான் தென் மாவட்டங்களுக்கு செல்லும்போது அரசு ஓய்வு விடுதிகளில் குளிரூட்டியை வைத்திருக்கிறார்கள். எப்படி அரசு ஓய்வு விடுதிகளில் குளிரூட்டி வந்தது என அதிகாரிகளிடம் கேட்டேன். அப்போது அவர்கள், முதலமைச்சர் தலையிட்டு, தனியார் சிமெண்ட் ஆலைகளின் அதிபர்களிடம் பேசி இதனை ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார் என்றார்கள்.
ஒரு முதலமைச்சர் எனக்காக முதலாளி அமைப்புகளிடம் பேச வேண்டாம் எனச் சொல்லுங்கள். அரிப்பு வந்தால் என்ன கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் காட்டிய அன்புக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று சொல்லுங்கள்’ என்றார்.
கலைஞருக்கு எச்சரிக்கை செய்த காமராஜர் - நாகநாதன்
இதனை நான் கலைஞரிடம் சொன்னேன். இதனைக் கேட்ட கலைஞர், ‘எவ்வளவு மக்களுடன் தொடர்பில் இருந்த முதலமைச்சராக இருந்திருக்கிறார்’ என்று மெச்சிப் பேசினார். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து கலைஞரும் நாவலரும் சென்று காமராஜரை சந்தித்துப் பேசிவிட்டு வந்தனர்.
முழு வீடியோ: