சரியாகப் பதினொரு ஆண்டுகளுக்கு முன் இதே நாட்களில் ஈழத்தில் தமிழினம் கொத்துக்கொத்தாய்க் கொன்றழிக்கபட்டத் துயரம் சூழ்ந்த வேளைகளில், விழுந்த இனத்தின் பிணங்களுக்கிடையே பிரசவிக்கப்பட்ட கட்சி நாம் தமிழர். ஈழத் தாயகத்தின் விடுதலை மட்டுமின்றி, தாயகத் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிற திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஊழல், சுயநலமிக்கது எனக்கூறி, அதிலிருந்து மக்களை விடுவிக்கப் போராடும் தமிழ்த்தேசிய அரசியலின் முகமாய்த் திகழ்கிறது நாம் தமிழர் கட்சி. கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு மத்தியில், ஊடகப் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் மக்களுக்கான அரசியலைத் தொடர்ச்சியாக இம்மண்ணில் நாம் தமிழர் கட்சி முன்வைத்து வருகிறது. மாற்று அரசியல் என்பது ஒரு கனவல்ல, நம்பிக்கைக் கொண்டோர் நினைத்தால் நடக்கும் நிகழ்வு என்று நம்பி தமிழர் கட்சி தனது அரசியல் பயணத்தில் தமிழக மக்களுக்கு உணர்த்தி வருகிறது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தமிழர் எனும் தேசிய இனம் தனக்கே உரிய தனித்துவமிக்கக் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல், வரலாறு எனத் தொன்ம விழுமியங்கள் யாவற்றையும் சிதையக் கொடுத்து, அழிவின் விளிம்பில் அடிமைப்பட்டுக் கிடக்கையில், இது யாவற்றிலிருந்தும் மண்ணையும், மக்களையும் மீட்டுக்காக்க வேண்டுமெனும் பெரும் தவிப்போடும், அளப்பெரும் ஏக்கத்தோடும், இனம் அழிக்கப்பட்ட நாளிலேயே, உலகத்தமிழர்களை ஒற்றைக்குடையின் கீழ் இணைத்து, அரசியல் பெரும்படையாய் உருவாகியுள்ளோம் என்கிறது நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பேரியக்கம் இந்நிலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வுகளும் சாதாரணமானது அல்ல. இந்நிலத்தில் இதற்கு முன்பாக மாற்று அரசியல் முழக்கத்தை முன்வைத்தவர்கள் சமரசங்களுக்கு ஆட்பட்டு, திராவிடக்கட்சிகளிடம் கரைந்துபோன வரலாற்றுத் தவறுகளிலிருந்து பாடம் கற்று ஒருபோதும் அதனைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதிபூண்டு, திமுக, அதிமுக எனும் இருபெரும் திராவிடக் கட்சிகளையும் காங்கிரஸ், பாஜக எனும் இருபெரும் தேசிய கட்சிகளையும் சமரசமின்றித் எதிர்த்துத் தனித்துக் களம் காணும் நாம்தமிழர் கட்சி மண்ணுரிமைக்களத்தில் தளர்வின்றிப் போராடுகிறது. மதத்திற்கு அரசியல், சாதிக்கு அரசியல், குடும்பத்திற்கு அரசியல் என்று சுயநல அரசியல் சூழ்ந்த காலகட்டத்தில் அனைத்து உயிர்களுக்காகவும், உயிரற்ற சூழலியல் வளங்களைக் காக்கவும் தனது புரட்சிகரத் தனித்துவமிக்க அரசியலால் தமிழக அரசியலின் போக்கையே மொத்தமாய் மாற்றி, அரசியல் திசையைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் தமிழர் உரிமைப் போராட்டக் களங்கள் அனைத்திலும் சமரசமின்றி முன்னின்று போராடி வரும் கட்சி நாம் தமிழர். மக்களுக்கும் மண்ணுக்கும் பேராபத்தினை விளைவிக்கக் கூடிய எந்த ஒரு திட்டத்தையும் ஆதரித்ததில்லை என்ற பெருமை அக்கட்சிக்கு உண்டு.
ஜல்லிக்கட்டுத் தடை செய்யப்பட்ட காலங்களில் தமிழகத்தின் வீதிகள் முதல் செய்தி ஊடகங்கள் வரை A1, A2 மாட்டுப்பால் குறித்தும் அதன் பின்னால் இருக்கும் பொருளாதாரச் சதி குறித்தம் வலுவான வாதங்கள் மூலம் மக்களிடம் பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய கட்சி நாம் தமிழர்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை தேசிய அளவிலான விவாதப் பொருளாக மாற்ற, ஐபிஎல் போட்டியைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டி, மத்திய அரசுக்குக் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிய கட்சி நாம் தமிழர். ஐபிஎல் போராட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மிகக் கடுமையான அதிகார ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட அரசியல் கட்சி நாம் தமிழர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின்போது அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் (2016 தேர்தல்) காலில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எட்டுவழிச்சாலைக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடியாதபடி அக்கட்சியினரை முடக்கும் வேலையில் ஆளும் அரசுகள் ஈடுபட்டபோதும் அதையும் மீறி களத்திலும் சட்டப்பூர்வமாகவும் போராடி நீதிமன்றம் வரை சென்று எட்டுவழிச் சாலைக்கான தடையைப் பெற்றுக் கொடுத்தது நாம் தமிழர் கட்சி. சேலத்தில் இதற்காக நடந்த போராட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதை ஆய்வு செய்து ஆதாரப்பூர்வமாக வெளியிட்டது நாம் தமிழர் கட்சி. தமிழகமெங்கும் அதற்கான போராட்டத்தையும் முன்னெடுத்தது. அன்றைய காலக் கட்டத்தில் எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்துப் போராடியதற்காக இன்றளவும் வழக்குகளைச் சுமந்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை, டெல்லி வரை போய் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடியது.
நீட், நியூட்ரினோ, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, புதிய மின்சாரக் கொள்கை, புதிய மீன்பிடிக்கொள்கை, என்ஐஏ, சிஐஏ, கெய்ல் எரி குழாய் என்று இம்மண்ணுக்கும் மக்களுக்கும் எதிராகக் கொண்டு வரப்படும் அத்தனை திட்டங்களையும் தன் சக்திக்கு மீறி எதிர்த்துப் போராடிய கட்சி நாம் தமிழர். மக்கள் பிரச்சனைகளுக்காக அதுவரை 100 வழக்குகளுக்குமேல் தொடுக்கப்பட்டிருந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது.
"எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை” என்று நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த தொடர்ப் போராட்டங்கள் அரசியல் அரங்கை அதிரச்செய்து தூக்குக் கயிற்றை அறுத்தெரிந்தது.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குத் தொடங்கித் தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் தமிழில் கண்டிப்பாகக் குடமுழுக்கு நடத்த வேண்டுமெனச் நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தித் தாய்த்தமிழை கோபுரமேற்றிய கட்சி நாம் தமிழர்.
நாம் தமிழர் கட்சி பிரிவினைவாதம் பேசுகிறது என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட காலங்களிலும் கூட அக்கட்சியினர் மழைவெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க ஓடிக்கொண்டிருந்தனர்.
நாம் தமிழர் பிள்ளைகள் இணையதளங்களில் வரம்பு மீறிப் பேசுகின்றனர் என்று விமர்சனங்கள் வந்த நாட்களில் அவர்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நிலவேம்புக் குடிநீர், கபசுர குடிநீர் கொடுத்துக் கொண்டும் இருந்தனர்.
நாம் தமிழர் இம்மண்ணின் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுகிறது என்று குற்றம் சுமத்தப்பட்ட நாட்களில் அவர்கள் நீர்நிலைகளைத் தூர்வாரியும், பனையை விதைத்துக் கொண்டும், நெகிழியை அகற்றிக்கொண்டும் இருந்தனர்.
நாம் தமிழர் இனவெறியைத் தூண்டுகிறது என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றது அந்தக் கட்சி.
நாம் தமிழர் பிள்ளைகளைச் சீமான் சர்வாதிகாரி போல் வழிநடத்துகிறார் என்று மேடை போட்டுப் பேசிக்கொண்டிருந்தவர் கண் எதிரிலேயே சீமான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இரத்த வங்கியைத் தம்முடைய குருதிக் கொண்டு நிரப்பி அதிகக் குருதிக்கொடை தந்ததில் மாநிலத்தில் முதலிடம் பெற்றனர் அவருடைய தம்பிகள்.
எதிர்ப்புகள், அடக்குமுறைகள், கைதுகள் அத்தனையையும் எதிர்கொண்டு இம்மண்ணின் அத்தனை வாழ்வாதாரப் பிரச்சனைகளிலும் மக்களோடு மக்களாகத் தோள் கொடுத்துப் போராடுவது மட்டுமன்றித் தம்மால் முடிந்த அளவு அதைத் தீர்ப்பதிலும் உறுதுணையாக இருந்து வந்துள்ள கட்சியாக அது திகழ்கிறது. மேலே சொன்ன அத்தனை உதவியும் ஏதோ பெரிய பணமுதலாளிகளோ, பெரிய பெரிய நிறுவனங்களிடமிருந்தோ, அதிகாரப் பதவியில் ஊறிப்போய் ஊழலில் திளைத்த அரசியல்வாதிகள் மூலமோ முன்னெடுத்தவை அல்ல. வறுமையில் வாடும் எளிய வீட்டுப் பிள்ளைகள் தங்கள் உழைப்பின் வியர்வையில் அமைப்பாக ஒன்றுகூடிச் செய்யும் உதவிகள்.
மக்களுக்கு எதிரான திட்டங்களை மக்கள்மன்றத்தில் எதிர்த்துப் பேசிவிட்டு, நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களிப்பது, வெளிநடப்புச் செய்வது என எமது மண்ணின் மக்களின் உரிமைக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளுக்கு நடுவில், மக்கள் நலனை முதன்மையானதாகக் கொண்டு, எவ்வித சமரசத்திற்கும் ஆட்படாத உறுதிமிக்கப் போராட்டகுணமே நாம் தமிழர் கட்சியின் தனித்துவமிக்க அடையாளமாகத் திகழ்கிறது.