Skip to main content

“நக்கீரன் செய்தி பரபரப்பாக இருக்கும்; அவரைப் பார்த்தாலே பதுங்கிடுவோம்” - ஜோதிடர் ஷெல்வி

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Jothidar Shelvi Spoke about Nakkheeran

 

எழுத்தாளர் பாலகுமாரன் அறக்கட்டளை சார்பில் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் இலக்கிய விருது வழங்கும் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. 2023க்கான விருது எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன், நடிகர் டெல்லி கணேஷ், நக்கீரன் ஆசிரியர், ஜோதிடர் ஷெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர் ஷெல்வி பேசியதாவது: “பாலகுமாரன் ஐயாவின் ஆத்மா அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். அவருடைய மகன் போல் வளர்வது தான் எப்போதும் என்னுடைய பெருமை. வண்ணநிலவன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற இந்த விருது, பாலகுமாரன் அவர்களைப் பெருமைப்படுத்தும் ஒரு விருது. நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கும் எனக்கும் 25 ஆண்டுக்கால நட்பு உள்ளது. அந்த நட்பில் அன்று அவர் எப்படி இருந்தாரோ, அதுபோல்தான் இப்போதும் இருக்கிறார். எந்த சபையாக இருந்தாலும் எங்களை அவர் நன்றாகக் கலாய்ப்பார். அதனால் சில நேரங்களில் அவரைப் பார்த்தவுடன் நான் பதுங்கிக்கொள்வேன். 

 

அவருடைய பத்திரிகை எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் அவர் பரபரப்பே இல்லாமல் இருப்பார். ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களுடைய கணவர் என்னுடைய நெருங்கிய நண்பர். தன்னுடைய கம்பீரக் குரலில் பாலகுமாரன் அவர்கள் என்னுடைய பெயரைச் சொல்லி அழைக்கும்போது அவருடனேயே இருந்துவிட வேண்டும் என்று தோன்றும். அவ்வளவு உரிமையாகப் பேசுவார். அவர் இல்லாத வெறுமை பலருக்கும் இருக்கிறது. நான் ஊருக்கே நேரம் சொன்னாலும், எனக்கு நேரம் சரியில்லை என்றால் அவரிடம் தான் செல்வேன். 

 

அதுபோன்ற நேரங்களில் எனக்காக அவர் கோவிலில் பிரார்த்தனை செய்வார். அவரோடு பழக்கத்தில் இருந்த அத்தனை பேரையும் அவர் தாங்கிப் பிடிப்பார். ஒருமுறை அவருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் வந்தது. மெஷினோடு தான் இனி வாழவேண்டும் என்று மருத்துவர் சொன்னாலும், தன்னுடைய மனத்திடத்தால் மெஷின் இல்லாமல் வாழ்ந்து காட்டினார். தான் இறக்கும் தறுவாயில் "நான் சென்று வருகிறேன் ஷெல்வி. என்னுடைய குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்" என்றார். அதன்படி இன்றுவரை அவருடைய குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன்.