கரோனா சமீபத்தில் டெங்கு நோய் தாக்குதலுக்குள்ளாகி மரணத்தைத் தழுவிய, முப்பது வயதைக்கூட நிறைவு செய்யாத இளம் மருத்துவர் ஜெயமோகனின் இழப்பு உள்ளத்தை உறையவைக்கிறது.
அவருக்கு நேர்ந்த துர்பாக்கியமான மரணத்தை நினைவுகூர்வதற்கான தேவை அவரது இளம் வயது என்பதல்ல. கரோனா நோய் தொற்றைக் கண்டு நாடே உறைந்து நிற்கையில், சாவு தம்மை நெருங்கிய நிலையிலும் கூட அர்ப்பணிப்புணர்வுடன் மருத்துவ சேவையாற்றிய அவர் ஓர் அரசு மருத்துவர் என்பதற்காக.
நீலகிரி மாவட்டத்தின் தெங்குமரஹடா எனும் மலைக்கிராமம் ஒன்றின் ஆரம்ப சுகாதார மையத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்தவர்தான் ஜெயமோகன். பழங்குடிகள் வாழும் இம்மலைகிராமத்திற்கு பொதுபோக்குவரத்து கிடையாது. இருசக்கர வாகனங்களில்கூட பயணிக்க முடியாது. பரிசலிலும் கால்நடையாகவும் மட்டுமே தொலைவை கடக்க வேண்டும். இந்தச்சூழலின் காரணமாகவே, இம்மலை கிராமத்திலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றுவதை எந்த மருத்துவரும் விரும்பியதில்லை. கட்டாயத்தின் பேரில் பணிக்கமர்த்தப்பட்டாலும், விரைவில் மாறுதல் உத்தரவு பெற்று விடைபெறவே விழைவார்கள். ஆனால், மருத்துவர் ஜெயமோகன் மூன்றாண்டுகளுக்கும் மேலாக விரும்பி பணியாற்றி வந்திருக்கிறார் என்பது நெகிழ்ச்சியானது. யாரும் நினைத்துப்பார்க்க முடியாதது.
பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலிடம், மருத்துவக்கல்லூரி தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று உயர்நிலைத் தகுதியுடன் மருத்துவரானவர் ஜெயமோகன். அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயின்று மருத்துவராக வெளியேறுகிறவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டுமென்பது கட்டாயம் என்ற போதிலும், இந்த கால கட்டத்தை தண்டனைக்குரிய காலத்தைக் கழிக்கும் சிறைக்கைதிகளைப்போல கடந்து செல்வார்கள். நட்சத்திர அந்தஸ்து பெற்ற தனியார் மருத்துவமனை அல்லது தனியே மருத்துவமனை என்பதே அவர்களின் இலட்சியமாக இருக்கும். ஒருவேளை அரசு மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தாலும், வசிப்பிடத்திற்கு அருகேயுள்ள சிக்கலில்லாத அரசு மருத்துவமனைகளுள் ஒன்று என்பதுதான் அவர்களின் தேர்வாக இருக்கும்.
கோவையைச் சேர்ந்த நடுத்தரக்குடும்பப் பின்னணியிலிருந்து மருத்துவரான ஜெயமோகன், முதலில் ஈரோட்டிலும் பிறகு தெங்குமரஹடா ஆரம்ப சுகாதார மையத்திலும் தனது பணியைத் தொடர்ந்திருக்கிறார். கூடவே, உயர்கல்விக்கான தகுதித்தேர்வுக்காகவும் படித்து வந்திருக்கிறார்.
தெங்குமரஹடா என்பது வழக்கு மொழியில் சொல்வதைப்போல, பட்டிக்காடு என்ற அளவில் மட்டுமல்ல; அடர்காட்டுக்குள் அமைந்த மலைவாழ் மக்கள் வசிக்கும் மலைக்கிராமம். அங்கிருந்து இவர்களை வெளியேற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடும் பழங்குடிகள் வாழும் கிராமம். இதன்காரணமாகவே, சாலை வசதி உள்ளிட்ட அரசிடமிருந்து எந்தவிதமான ஒத்துழைப்பையும் எளிதில் பெற்றுவிடமுடியாத துர்பாக்கியசாலிகள் நிறைந்த கிராமம். அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட நிலையில் வாழும் இம்மக்களுக்கு மருத்துவ சேவையளிப்பதை மறுக்கக்கூடாதென்ற நோக்கில் மருத்துவர் ஜெயமோகன், விரும்பி தெரிவு செய்த கிராமம் தெங்குமரஹடா.
மருத்துவர் என்பதற்கு அப்பால், அப்பழங்குடி மக்களோடு தங்கி அவர்களுடன் நட்புறவோடு கலந்துரையாடியிருக்கிறார். அவர்களுடன் இணைந்து வனத்தை நேசிப்பவராகவும் இருந்திருக்கிறார். வனத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளில் தன்னார்வலராகப் பங்கேற்று பொதுச் சேவையாற்றியிருக்கிறார்.
மக்களிடம் இன்முகத்துடன் அணுகியதோடு, தன்னோடு பணியாற்றிய சக மருத்துவப்பணியாளர்களையும் மரியாதையுடன் நடத்தியிருக்கிறார். இவ்வளவு இளம் வயதில் இத்தகைய உயரியப் பண்புகள் நிச்சயம் பிரமிக்கத்தக்கவை.
இந்நிலையில், கரோனோ தொற்றுக்கெதிராக நாடெங்கும் நடைபெறும் மருத்துவப்போராட்டத்தின் ஓர் அங்கமாக தமது மலைக்கிராமத்தில் சேவையாற்றியிருக்கிறார். மலைவாழ் மக்களிடையே கரோனா நோய்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். திடீர் உடல்நலக்குறைவும், தொடர் காய்ச்சலும் இருந்தபோதிலும் தன்னளவில் அதற்கான மருத்துவமுறைகளை மேற்கொண்டு தொய்வின்றி தமது மருத்துவ சேவையை தொடர்ந்திருக்கிறார். பணிசெய்ய முடியாத அளவிற்கு உடல்நிலை ஒத்துழைக்க மறுத்த நிலையில்தான், சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையொன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அவர், கரோனா நோய் தொற்று இல்லை என்ற முடிவு வருவதற்கு முன்னதாகவே, டெங்கு காய்ச்சலின் தீவிரநிலைக்கு அவர் சென்றிருந்தார். யாரும் எதிர்பாராத வகையில் மரணித்துப்போனார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனோ நோய் தொற்றுக்கெதிரான போரில் பங்கெடுக்க குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளை தவிர பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் முன்வரவில்லை. இறைச்சி கடையில் கூறுபோட்டு விற்கப்படும் இறைச்சி பாகங்களைப்போல, இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல்களுக்கான தனிச்சிறப்பான மருத்துவமனை உலகத்தரமான சிகிச்சை என்றெல்லாம் நேற்றுவரை விளம்பரப்படுத்தி வந்த தனியார் மருத்துவமனைகளெல்லாம் கதவை இழுத்துமூடிவிட்டன. அல்லது, நட்சத்திர விடுதிகளை குவாரண்டைன்களாக மாற்றி உயர்குடிகளுக்கான மருத்துவ சேவையை வழங்குவதன் மூலம் கல்லா கட்டுகின்றன.
கடனுக்கு வேலை செய்கிறார்கள், நோயாளிகளை மதிப்பதில்லை, தரமான மருத்துவ சேவை கிடைப்பதில்லை என்று இதுவரை எந்த அரசு மருத்துவமனைகளையும், அரசு மருத்துவர்களையும் குறைகூறி வந்தார்களோ; அந்த அரசு மருத்துவர்கள்தான் இந்த இக்கட்டான தருணத்திலும் போதிய பாதுகாப்பு கவசங்கள் இல்லாத நிலையிலும் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றிவருகின்றனர். இத்தகைய அரசு மருத்துவர்களுள் ஒருவராய் வாழ்ந்து மரணத்தை எய்திருப்பதால்தான் ஜெயமோகன் நம் நினைவிலிருந்து நீங்க மறுக்கிறார்.
ஜெயமோகன் மருத்துவம் படித்த காலத்தில் நீட் தேர்வுமுறை இல்லை. நீட் தேர்வை எதிர்கொள்ளாதவர் என்பதால் அவரிடம் எந்த தகுதிக்குறைவுமில்லை. பணம் சம்பாதிக்கும் தொழிலாக மருத்துவப்பணியை பாராமல், தன்னை மருத்துவராக்கிய சமூகத்திற்கு பொறுப்பாகவும் அர்ப்பணிப்போடும் பங்களிக்க வேண்டுமென்ற உணர்வில் இன்றளவில் இயங்கிவரும் மருத்துவர்கள் புகழேந்தி, எழிலன், ரவீந்திரநாத், பரூக் அப்துல்லா, அணுரத்னா போன்றோர்களெல்லாம் கண்ணுக்குத் தெரிந்த உதாரணங்கள். இவர்களெல்லாம் நீட் தேர்வுக்கு முந்தையவர்கள்தான்.
இழந்த ஜெயமோகனை மீண்டு கொண்டுவருவது அறிவியல் சாத்தியமில்லை என்பது உண்மைதான். ஏழை - நடுத்தரக் குடும்பத்திலிருந்தும், கிராமப்புற பின்னணியிலிருந்தும், அரசுப்பள்ளிகளில் பயின்றும், மருத்துவக்கனவுகளோடு காத்திருக்கும் எண்ணற்ற ஜெயமோகன்களை கருவருக்கக் காத்திருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக உறுதியாய் நிற்பது நிச்சயம் சாத்தியமானதுதான்.
கண்களில் கசிந்துருகும் கண்ணீர்த்துளிகளை மட்டுமே காணிக்கையாக்கிவிட்டு கடந்து சென்றுவிட நாமெல்லாம் மனிதம் மரணித்தவர்களா என்ன?
- இளங்கதிர்.