ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய காதலை கீர்த்தி சுரேஷிடம் தெரிவிக்கும் காட்சி தமிழக இளைஞர்கள் பலரின் கனவு காட்சியாக இருக்கிறது. பல பெண்கள் நமக்கும் இதுபோல ஒன்று நடந்துவிடாதா என்று வேண்டிக்கொண்டார்கள். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என முரட்டு சிங்கிள்ஸ் இந்த காட்சியை வன்மையாக கண்டித்தனர். ஆனால், இந்த காட்சியை எல்லாம் மிஞ்சுவதுபோல உண்மையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
டோக்யோவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய மேரேஜ் புரோபோஸலுக்காக ஆறு மாதங்கள் பயணம் செய்து, உலகை திரும்பி பார்க்கும் வகையில் ஜிபிஎஸ் ஓவியம் ஒன்றை வரைந்து இணையத்தில் வைரலாகி வருகிறார். இந்த ஜிபிஎஸ் ஓவியமானது உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் ஓவியம் என்பதால் கின்னஸ் விருதும் பெற்றிருக்கிறது.
அப்படி என்ன மாதிரியான ஓவியத்தை, அவர் எங்கு எதனால் வரைந்தார் என்று கேட்கிறீர்களா? ‘மேரி மி’ அதாவது என்னை திருமணம் செய்துகொள் என்று ஜப்பான் முழுவதும் பயணம் செய்து ஜிபிஎஸ் ஆர்ட் செய்திருக்கிறார். இதற்காக இவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு 6 மாதங்கள் ஊர் ஊராக சுற்றி திரிந்து 7000 கிமீ தொலைவு பயணம் செய்து இதை வரைந்திருக்கிறார்.
ஜிபிஎஸ் ஆர்ட் என்பது கூகுள் எர்த் செயலியை பயன்படுத்தி நாம் செல்லும் இடங்களின் வழிதடங்களை கிராஃபிக் இமேஜாக பதிவு செய்ய முடியும். அப்படி பதிவு செய்யப்பட்ட கிராஃபிக் இமேஜைதான் ஜிபிஎஸ் ஆர்ட் என்று அழைக்கப்படுகிறது. ஜிபிஎஸ் ஆர்ட் என்பது தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.
நட்ஷூகி என்னும் பெண்ணைதான் திருமணம் செய்துகொள்ள போவதாக யாஷனின் கடந்த 2008ஆம் ஆண்டே முடிவு செய்துவிட்டார். ஆகையால் இந்த உலகத்தில் யாரும் புரோபோஸ் செய்யாத விதத்தில் மிக பெரிதாக புரோபோஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து ஜிபிஎஸ் ஆர்ட் செய்ய திட்டம் தீட்டியுள்ளார். ஹோக்காய்டோ தீவிலிருந்து காஹாஷோஹிமா கடற்கரை வரை பயணம் செய்து ‘மேரி மி’ என்ற வாக்கியத்தை எழுதியிருக்கிறார். புரோபோஸ் செய்ததற்கு இவருடைய காதலி நட்ஷூகியும் சரி என்று கிரீன் சிக்னல் போட்டிருக்கிறார். இதனால் யாஷனின் பத்து வருட கனவும் வாழ்க்கையும் வெற்றியடைந்துள்ளது.
இறுதியாக கூகுள் இவருடைய பயண வாழ்க்கை வீடியோவாக பதிவு செய்து இவருடைய காதல் கதையை உலகம் முழுவதும் கேட்க செய்துள்ளது. கூகுள் ட்விட்டரில் வெளியாகியுள்ள யாஷனின் வீடியோ செம வைரலாகி வருகிறது. பல இளைஞர்கள் இந்த புரோபோஸலை பார்த்து வியக்கிறார்கள். நமக்கும் இப்படி நடந்தால் நன்றாகதான் இருக்கும் என பொறாமை படுகிறார்கள். ஒரு சின்ன மோதிரத்தை வாங்கி கொடுத்து தன்னுடைய காதலை சாதரான ஒன்றாக வெளிக்காட்டாமல் வித்தியாசமாக உலகறிய செய்து கின்னஸிலும், வரலாற்றிலும், கூகுள் எர்த்தில் இவருடைய காதலை இடம்பெற செய்திருக்கிறார் யாஷனின்.