Skip to main content

சாதியா? கல்வியா? பள்ளி புறக்கணிப்பால் 300 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

 issue caste Salem govt School

 

சேலம் மாவட்டம் மேச்சேரி வட்டாரத்தில் உள்ள வன்னியனூரில், அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி, 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 286 குழந்தைகள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளே தோற்றுப்போகும் அளவுக்கு ஒவ்வொரு வகுப்பறையிலும் சிசிடிவி கேமரா, ஒலிபெருக்கி, கணினி, சுற்றுச்சுவர், வாயில் கதவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு மைதானம், கலையரங்கம், மக்கள் நூலகம் என உள்கட்டமைப்பில் அதிரிபுதிரியாக விளங்குகிறது, வன்னியனூர் அரசுப்பள்ளி.  

 

இத்தனை வசதிகளையும் நேரம் காலம் பார்க்காமல் நன்கொடைகள், சிஎஸ்ஆர் நிதியுதவி மூலம் தலைமை ஆசிரியர் சிவக்குமார்தான் கொண்டு வந்து சேர்த்தார் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். சக ஆசிரியர்களும் 'ஈகோ' இல்லாமல் அதை ஒப்புக்கொள்கிறார்கள்.

 

கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த சிவக்குமார் (43), கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி திடீரென்று வாழதாசம்பட்டி அரசுப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.  உள்ளூர் மக்களின் அபிமானம் பெற்ற தலைமை ஆசிரியர் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, கடந்த ஆக. 26ம் தேதி முதல் 15 நாள்களுக்கும் மேலாக வன்னியனூர், பள்ளிப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

தலைமை ஆசிரியரின் இடமாற்றத்திற்குப் பின்னணியில், இதே பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்த ரவீந்திரநாத் (37) என்பவரை சுட்டிக்காட்டுகின்றனர் பொதுமக்கள்.  இது தொடர்பாக பள்ளிப்பட்டி 7வது வார்டு உறுப்பினர் சிவக்குமார், வன்னியனூரைச் சேர்ந்த சித்ரா, காசிநாதன், செல்வராஜ் ஆகியோரிடம் பேசினோம், “ஆசிரியர் ரவீந்திரநாத் கடந்த 2019ம் ஆண்டு இந்தப் பள்ளியில் சேர்ந்தார். அவர் சேர்ந்த பிறகுதான் எல்லா பிரச்னைகளும் ஆரம்பமாகின. ஜீவா என்ற மாணவனை அவர் தாக்கியதில், அவனுக்கு காதில் ரத்தம் வந்தது. கன்னம் வீங்கி விட்டது. அதுமட்டுமின்றி, மாணவிகளிடம் 'வயசுக்கு' வந்தது பற்றியெல்லாம் விசாரித்திருக்கிறார். பெண் குழந்தைகளை 'வாடீ... போடீ...' என்று பேசுகிறார். பணிக்கு தாமதமாக வருவார். அவர் தாமதமாக வந்தது குறித்து தலைமை ஆசிரியர் சிவக்குமார் விசாரித்தபோது, அவரை ரவீந்திரநாத் மாணவர்கள் முன்னிலையிலேயே மரியாதைக் குறைவாக பேசினார்.  அவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பள்ளியில் சாதி ரீதியாக நடந்து கொள்கிறார். 

 

 

இந்தநிலையில்தான், ஜீவா என்ற மாணவனை அவர் தாக்கியதைக் கண்டித்து, கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி பள்ளி முன்பு மறியல் போராட்டம் நடத்தினோம். அதையடுத்து, ரவீந்திரநாத்தை அன்று மாலையே விருதாசம்பட்டி பள்ளிக்கு 'டெபுடேஷன்' ஆக இடமாற்றம் செய்தனர்.  இதற்கெல்லாம் காரணம் தலைமை ஆசிரியர் சிவக்குமார்தான் என்று கருதிய அவர், தனக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள், அம்பேத்கர் இயக்கத்தினர் மூலம் சிவக்குமார் மீது இல்லாததும் பொல்லாததுமாக கலெக்டர், சிஇஓ உள்ளிட்டோருக்கு பொய்யான புகார் மனுக்களை அனுப்பினார்.  இவருடைய சாதிய அணுகுமுறையால் இன்றைக்கு ஒரு நல்ல தலைமை ஆசிரியரை இழந்து விட்டோம். சிவக்குமார் சாரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தும் வரை நாங்கள் எங்கள் குழந்தைளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்,'' என்றனர் ஒரே குரலாக. 

 

வன்னியனூர் கள நிலவரத்தைப் பற்றி கண்டுகொள்ளாத சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையோ செப். 8ம் தேதி அன்று வன்னியனூர் பள்ளிக்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அன்றைய தினம் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம், சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர், மேட்டூர் உதவி ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் திரண்டு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

 

இன்னும் 6 மாதத்திற்குள் தலைமை ஆசிரியரை இதே பள்ளிக்கு இடமாறுதல் செய்வதாகவும், அதுவரை வேறு ஹெச்.எம். நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதி கூறினர். அந்தக் கூட்டத்தில், மறுநாள் முதல் அதாவது செப். 9ம் தேதி முதல் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதாக பெற்றோரும் ஒப்புக்கொண்டனர்.  

 

இதை நம்பி, குழந்தைகளை வரவேற்க வருவாய்த்துறையினர் வாழை மர தோரணங்கள், ரோஜா பூக்கள், சாக்லெட்டுகளுடன் ஆவலுடன் காத்திருந்த நிலையில் செப். 9ம் தேதியும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.  இது ஒருபுறம் இருக்க, தலைமை ஆசிரியர் சிவக்குமாரிடம் கேட்டபோது, “ஆசிரியர் ரவீந்திரநாத்தின் கற்பித்தல் பணியைப் பொருத்தமட்டில் குறை எதுவும் சொல்ல முடியாது. அவருக்கும் எனக்கும் சின்னச்சின்ன உரசல்கள் இருந்தது.  பெண் குழந்தைகளிடம் தவறாக பேசினார் என்பதிலும், மாணவன் ஜீவாவை காயம் ஏற்படும் அளவுக்கு அடித்தார் என்பதிலும் உண்மை  இல்லை. அதேநேரம், அவர் காலையில் கொஞ்சம் தாமதமாக வருவார். ஆசிரியர் சங்கத்தில் இருப்பதால், பள்ளி நேரத்தில்கூட செல்போனில் பேசிக்கொண்டு இருப்பார். ஒருமுறை, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளைச் சேர்ப்பதில் டி.சி., தேவையா இல்லையா? என்பதில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என்றாலும், பள்ளியின் வளர்ச்சியில் ஒருங்கிணைந்துதான் செயல்பட்டோம்” என பட்டும் படாமலும் சொல்லி முடித்தார்.  


 
ரவீந்திரநாத் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க, கடந்த ஜூன் மாதம், ஆத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை கடந்த ஆக.26ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அன்றைய தினமே தலைமை ஆசிரியர் சிவக்குமார் வாழதாசம்பட்டிக்கும், விருதாசம்பட்டிக்கு ஏற்கனவே டெபுடேஷனில் சென்றுள்ள ஆசிரியர் ரவீந்திரநாத்தை பள்ளிப்பட்டி பள்ளிக்கும் இடமாற்றம் செய்தனர்.  

 

வன்னியனூர் பிரச்னை குறித்து விசாரித்த கல்வி அலுவலர்களுள் ஒருவரான சேலம் ஊரக வட்டாரக் கல்வி அலுவலர் சுமதியிடம் பேசினோம் “தலைமை ஆசிரியர் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர் இருவர் மீதும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. மாணவன்  ஜீவா தாக்கப்பட்ட சம்பவம் கூட மிகைப்படுத்தப்பட்ட புகார்தான்.  ஒரு தரப்பினர் சிவக்குமாருக்கும், இன்னொரு தரப்பினர் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர். அவர்கள் அதே பள்ளியில் தொடர்வதன் மூலம் எதிர்காலத்தில் சாதி மோதல் உருவாக வாய்ப்பு உள்ளதால், இருவரையும் இடமாறுதல் செய்திருக்கிறோம். ஆனால் இருவரிடமும் ஏதோ ஒரு வகையில் 'ஈகோ' இருப்பது உண்மைதான்” என்றார் சுமதி.  

 

இது தொடர்பாக மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவத்திடம் பேசினோம், “சார்... வன்னியனூரில் உள்ள எல்லாருமே எனக்கு சொந்தக்காரர்கள்தான். நானே அங்கு உணர்ச்சி பூர்வமாக பேசியும் ஒன்றும் எடுபடவில்லை. பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். மக்கள் வீம்பாக இருப்பதில் எனக்கு வருத்தம்தான். ஆசிரியர் ரவீந்திரநாத், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஒரு மாணவனை தாக்கியதாகவும் சொல்கிறார்கள்.  

 

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆகியோர் ரவீந்திரநாத்தின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள், ரவீந்திரநாத் மீதான புகாரை மாற்றி அரசுக்கு அனுப்பி விட்டனர். அவர்கள்தான் வேண்டுமென்றே தலைமை ஆசிரியர் சிவக்குமாரை இடமாற்றம் செய்துவிட்டனர்,'' என்கிறார்.


இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் ரவீந்திரநாத் பள்ளிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டதற்கு அந்த ஊர் மக்களும், ஆசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவரை கரும்புசாலியூர் அரசுப்பள்ளிக்கு மாற்றினர். அங்கேயும் ஆசிரியர்கள் தூண்டுதலினால் பொதுமக்கள் போர்க்கொடி தூக்க, கடைசியாக வேறு வழியின்றி அவரை, இல்லம் தேடிக் கல்வித்திட்ட மேற்பார்வையாளராக நியமித்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. செல்லும் இடமெல்லாம் பந்தாடப்பட்டு வரும் ரவீந்திரநாத், பட்டியல் சமூகத்தில் பிறந்தவர் என்பதைத் தவிர, வேறெந்த குற்றமும் புரியவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்த ஆசிரியர்கள்.  

 

கள விசாரணையில் இன்னொரு தகவலும் நமக்குக் கிடைத்தது. ஆசிரியர் ரவீந்திரநாத்தின் சொந்த ஊர் மல்லிகுந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனி. அந்த ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் செல்லம்மாள் வைத்தியலிங்கத்தின் மகன் கலைசெல்வன் (42) என்பவர்தான், ஊராட்சிமன்றப் பணிகளைச் செய்து வருகிறார். இந்த ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடு நடப்பதாக ரவீந்திரநாத்தின் ஆதரவாளர்கள் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பி வந்துள்ளனர்.  

 

அதனால், பாமகவை சேர்ந்த கலைசெல்வனுக்கும், ரவீந்திரநாத்துக்கும் உள்ளூரில் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாகவே, சுத்துப்பட்டில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள வன்னியனூர், பள்ளிப்பட்டி, கரும்புசாலியூர் பள்ளிகளில் அவர் எங்கு மாற்றலாகிச் சென்றாலும் அங்கெல்லாம் மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கிறார் என்கிறார்கள்.  

 

இது தொடர்பாக கலைசெல்வனிடம் கேட்டபோது, ''அவனெல்லாம் புனிதமான ஆசிரியர் பணிக்கே லாயக்கு இல்லாதவன். போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தான். நிதி முறைகேடு பற்றி கேட்க அவன் என்ன மக்கள் பிரதிநிதியா?  பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் உள்பட எந்த வாத்தியாரையும் அவன் மதிப்பதே இல்லை. மாணவிகளிடம் தவறாக நடந்திருக்கான். ஒரு பையனையும் அடிச்சிருக்கான். அதனால்தான் அவனை எல்லோரும் எதிர்க்கிறார்கள். இந்தப் பிரச்னையில் பாமக பெரிய லெவலில் இறங்கும். இனிமேல் அவனுக்கு எதிராக பெட்டிஷன் பறக்கும் பாருங்க,'' என ஆரம்பதில் இருந்தே ரவீந்திரநாத்தை ஏக வசனத்தில் விளாசினார்.  

 

ஒருவழியாக, பெற்றோர்கள் திங்கள்கிழமையாவது (செப். 12) குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையானது. திங்களன்றும் பள்ளி புறக்கணிப்பை மக்கள் தொடர்ந்ததால் அதிர்ந்து போன வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் நேரடியாக குழந்தைகளைத் தேடி அவர்களின் வீட்டுக்கே சென்றனர்.  குழந்தைகளை வலுக்கட்டாயகமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். இந்த வகையில் மொத்தம் 14 குழந்தைகளை மட்டுமே பள்ளிக்குக் கொண்டு வர முடிந்தது.  வன்னியனூரைச் சேர்ந்த ஒருவர், ''எங்களுக்கே விருப்பம் இல்லாதபோது காவல்துறையினர் அத்துமீறி பூட்ஸ் காலுடன் வீட்டுக்குள் நுழைந்து குழந்தைகளை கடத்திச்செல்வது போல பள்ளிக்குக் கொண்டு சென்றனர். மேலும் மேலும் எங்களின் கோபத்தைத் தூண்டுகின்றனர்,'' என்றார்.  

 

 

செப். 9ம் தேதி இரவு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பேசுகையில், ''பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தர தயாராக இருக்கிறோம். ஆனால், அரசியல் ஈகோவை ஒன்றும் செய்ய முடியாது. 11 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியரை இடமாறுதல் செய்த பிறகு மீண்டும் அவரையே கேட்பதில் நியாயமில்லை. விரைவில் இந்தப் பிரச்னை சுமூகமாக முடிந்து விடும்,'' என்றார்.

 

வன்னியனூர் பிரச்னையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வரும் மேட்டூர் காவல்துறை டிஎஸ்பி விஜயகுமார், “எல்லாமே லோக்கல் பாலிடிக்ஸ்தான் சார். மற்றபடி ஆசிரியர் ரவீந்திரநாத் மீது கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை.  செப். 12ம் தேதியன்று, குழந்தைகளை வரவேற்க வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் வன்னியனூர் பள்ளிக்கு காலை 8.15 மணி முதல் காத்திருக்கிறோம். ஆனால் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் கொஞ்சமும் ஆர்வமின்றி வழக்கம்போல் 9.15 மணிக்குதான் வந்து சேர்ந்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் கடைசி வரை அங்கு வந்து சேரவில்லை.  

 

தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் வீடு வீடாக குழந்தைகளை அழைக்கச் சென்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக நாங்களும் சென்றோமே தவிர, எந்தக் குழந்தையையும் வலுக்கட்டாயமாக தூக்கி வரவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

 

கடந்த ஜூன் 17ம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியபோதும், மேச்சேரி வட்டாரக் கல்வி அலுவலரான ராஜேஷ்கண்ணன் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இன்றும் அவர் வரவில்லை.   பள்ளிகளில் சாரணர் படையை கட்டமைப்பதில் ராஜேஷ்கண்ணன் சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டாலும், கொங்கணாபுரத்தில் இவர் பணியாற்றியபோது, ஒரு பெண் ஆசிரியர் இவரால் மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார் கூறியிருந்தார். அந்த விவகாரத்தில், அப்போது ராஜேஷ்கண்ணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதிலிருந்து அவர் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தலையிடுவதில்லை என்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்த ஆசிரியர்கள்.  

 

திங்களன்று (செப். 12) நாம் அவரை பலமுறை அழைத்தபோதும் அழைப்பை ஏற்கவில்லை. வன்னியனூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சசிகலாவும், அழைப்பை ஏற்க மறுத்தார். அதிலிருந்தே அவர்கள் எந்தளவுக்கு பள்ளி மீது அக்கறை செலுத்துகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  

 

இந்நிலையில், ஆசிரியர் ரவீந்திரநாத் மீது கூறப்படும் புகார் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டோம்''நான் மாணவிகளை 'வாடீ போடீ...' என்று அழைத்ததாக கூறப்பட்ட புகார் குறித்து விசாரிக்க 3 பெண் ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில், என் மீதான புகார் பொய் என்பது தெரிந்தது. மாணவன் ஜீவாவை நான் தாக்கியதால், அவனுக்கு காதில் ரத்தம் வந்ததாகச் சொல்வது கட்டுக்கதை என்பது சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் ஊர்ஜிதமாகிவிட்டது.  

 

 

வன்னியனூர் பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் இருந்தே வன்னியனூர் மக்களுக்கு என் மீது வேறு பார்வை இருந்து வருவதாக தலைமை ஆசிரியர் சிவக்குமார், சிலமுறை சொல்லி இருக்கிறார். அதற்குக் காரணம் நான், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதுதான்.  பள்ளிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் சிவக்குமார், வன்னியனூரைச் சேர்ந்த கருப்புச்செட்டி ஆகிய இருவரும் நான் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பையனை அடித்து விட்டதாகவும் அப்போது வீடு வீடாகச் சென்று பொய் பரப்புரை செய்து வந்துள்ளனர். தலைமை 
ஆசிரியர் சொன்னதன் பேரில் அவ்வாறு மக்களிடம் சொல்லி வருவதாவும் கூறியுள்ளனர். இதுகுறித்து பின்னர் தலைமை ஆசிரியர் சிவக்குமாரிடம் கேட்டபோது, அதை மறுத்துவிட்டார்.  

 

இந்தப் பள்ளி தொடங்கப்பட்ட 1962ம் ஆண்டு முதல் இப்போது வரை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் கூட இந்தப் பள்ளியில் படித்ததில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 16ம் தேதி முதன்முதலாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு அட்மிஷன் வழங்கினோம். அவர்களை நான்தான் பள்ளிக்கு அழைத்து வந்ததாக சிலர் கருதுகின்றனர். அதற்கு அடுத்த நாளில் இருந்துதான் எனக்கு எதிராக பொதுமக்கள் பிரச்னை செய்ய ஆரம்பித்தனர். 

 

மல்லிகுந்தம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்வதில்லை. இது தொடர்பாக என் நண்பர்கள் கேள்வி எழுப்பினர். அதை மனதில் வைத்துக்கொண்டு அந்த ஊராட்சி மன்றத் தலைவரின் மகனும், பாமக பிரமுகருமான கலைசெல்வன், எனக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு இவ்வாறு பிரச்னையை திசை திருப்புகிறார்,'' என்றார் ரவீந்திரநாத்.  

 

 

வன்னியனூர் விவகாரம் குறித்து விசாரிக்க, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனை செப்.5ம் தேதி முதல் 12ம் தேதி வரை முயன்றோம். ஒருவழியாக திங்களன்று லைனில் பிடித்தோம், “இன்னிக்கு 16 மாணவர்கள் வந்துள்ளனர். மக்கள் மனசு மாறணும். அங்கு நிலவும் பிரச்னைக்கு நிறைய காரணிகள் இருக்கு. புதன்கிழமை (செப். 14) எல்லா குழந்தைகளையும் அனுப்புவதாகச் சொல்லி இருக்கிறார்கள். நம்புகிறோம். பார்க்கலாம்...'' என்றார் சிஇஓ முருகன்.  

 

சுத்துப்பட்டில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் வன்னியனூர் பள்ளியைத் தேடி வந்து படிக்கிறார்கள் என்கிறார்கள் மக்கள். ஆனால், அதே பள்ளியில் பணியாற்றும் லட்சங்களில் சம்பளம் பெற்று வரும் எந்த ஒரு ஆசிரியரும் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் மட்டுமின்றி வேறெந்த அரசுப்பள்ளியிலும் படிக்க வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

 

பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஆதரவாக பாமகவும், ஆசிரியர் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வரிந்து கட்டியதால் இந்தப் பிரச்னை மேலும் வலுக்கத் தொடங்கியது.  தலைமை ஆசிரியர் சிவக்குமார் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக ஊர்க்காரர்கள் சொன்னாலும் கூட, அவரே அனைத்துப் பெற்றோர்களுக்கும் வாட்ஸ்ஆப் வாயிலாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டும், பெற்றோர்கள் இசைந்து கொடுக்கவில்லை. எல்லாமே சாதியம்தான்.  

 

சாதி 'ஈகோ'வால் சுமார் 300 குழந்தைகளின் கல்வி நலன் இன்றைக்கு கேள்விக்குறியாகி உள்ளது.