Skip to main content

அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு மாறும் இரயில்வே...

Published on 01/11/2018 | Edited on 01/11/2018

அடிக்கடி நடைபெறும் ரயில் விபத்துகள், சுகாதாரமற்ற உணவு, சரியாக பராமரிக்கபடாத ரயில் நிலையங்கள் என பல்வேறு விமர்சனங்களை ரயில்வே துறை சமீப காலங்களாக சந்தித்து வருகிறது. அதே சமயம், புதிய தொழில்நுட்பங்களுக்கு இரயில்வே துறையை எடுத்து செல்வதில் சில பாராட்டுகளையும் பெற்று வருகிறது இந்தியன் ரயில்வே. டிக்கெட் எடுப்பதில் புது வசதி,  சுகாதாரமான உணவை வழங்க புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு முறை என அசத்தி வருகிறது. 

 

ii

 

 

செல்போன் செயலியான UTS app மூலம் எங்கிருந்தாலும் டிக்கெட் எடுக்கலாம் என்ற புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு வரை ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருந்தால் மட்டுமே செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. முன் ஒதுக்கீடு மற்றும் ஏ.சி. டிக்கெட்கள் மட்டுமே இந்த முறையில் இருந்தது. தற்போது பொது டிக்கெட்களையும் இந்த புதிய வசதி மூலம் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.

 

கடந்த மே மாதம் இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் இரயில் கழிவறையில் உள்ள குழாய் நீரை இந்திய இரயில்வே சமையல் துறைக்கல்வி மற்றும் சுற்றுலா கழக ஊழியர்கள் சேகரித்து அதில் தேநீர் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு விநியோகம் செய்யும் காட்சி பிரபலமானது. இந்த நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரயிலில் உணவுப்பொருட்கள் எந்த அளவில் மோசமான முறையில் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது என்ற கற்பனையை தூண்டியது இந்த வீடியோ ஆதாரம். 

 


இந்த நிலையில் சமீபத்தில் பயணிகளுக்கு சுகாதாரமான உணவை வழங்க புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு முறையை செயல்படுத்த தொடங்கியது இந்திய இரயில்வே துறை. செயற்கை நுண்ணறிவு என்பது, நாம் உருவாக்கிய இயந்திரங்கள் மனிதனின் உதவியின்றி தானே நுண்ணறிவுடன் செயல்படுவது ஆகும்.

 

எந்த ஒரு பயணத்தையும் மோசமாக மாற்றக்கூடிய வல்லமை படைத்தது பயணத்தில் கிடைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமே. அதிலும் இரயில் பயணத்தில் முக்கியமான பிரச்சைனைகளை ஏற்படுத்துவது உணவு பொருட்கள். இன்றைய காலகட்டத்தில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என எந்த வகுப்பில் இரயிலில் பயணம் செய்தாலும் சுகாதாரமான, ஆரோக்கியமான உணவு பொருட்கள் கிடைப்பது அரிதான ஒன்று. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்திய இரயில்வே துறையில் செயற்கை நுண்ணறிவு முறை மூலம் உணவு பொருட்கள் சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறது.

 

சமையலறைகளில் உணவு தயாரிக்கப்படும் முறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ரயில்வே துறை கண்காணிக்கும். இந்த சமையலறைகளில் அதிநவீன கண்காணிப்பு கருவிகள் கொண்டு மிக பெரிய திரைகளில் கண்காணிக்கப்படும். ஏதேனும் சிறிய பூச்சிகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் இருந்தால் உடனடியாக இந்திய ரயில்வே சமையல் துறைக்கல்வி மற்றும் சுற்றுலா கழக மேல் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

 

ஒரு சமையல்காரர் அல்லது சமையலறை கண்காணிப்பாளர் சீருடையோ அல்லது சமையல் செய்யும் போது தலை முடி விழாமல் இருக்க அணியும் தொப்பியோ அணியாமல் இருந்தால் புதிய தொழில்நுட்பம் மூலம் அந்த கண்காணிப்பாளரின் கைபேசிக்கு உடனடியாக தகவல் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயற்கை நுண்ணறிவு முறை இரயில்வே துறையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

 

இந்திய இரயில்வே துறை பயணிகளுக்கு தரமற்ற உணவு பொருட்களை வழங்குவதாகவும், இதனால் பயணிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் புகார் தெரிவித்து இருந்தது. இதில் சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் பராமரிக்கப்படாத குடிநீர் குழாய்கள், சரியாக மூடப்படாத மற்றும் பராமரிப்பற்ற குப்பை தொட்டிகள் போன்றவை இரயில் மற்றும் இரயில்வே நிலையங்களில் இருப்பதாகவும் அறிக்கை சமர்ப்பித்து இருந்தது. 

 

இந்த நிலையில் சுகாதாரமான உணவை உறுதி செய்ய புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ள இரயில்வே துறையின் செயல்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் இரயில்வே புதிய தொழில்நுட்ப திட்டங்கள் தொடங்குவது எளிது. அதை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்தப் போகிறது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி.