Skip to main content

இந்தியாவில் இருந்து 7000 பெரும் பணக்காரர்கள் வெளியேறினர் -காரணம் என்ன?

Published on 11/02/2018 | Edited on 12/02/2018

2017ஆம் ஆண்டு சொந்த நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பெரும் பணக்காரர்கள் தொடர்பான அறிக்கையை 'நியூ வேர்ல்ட் வெல்த்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சீனாவில் இருந்து 10,000 பேர் வெளியேறியுள்ளனர். இதனால் சீனா இந்த அறிக்கையில் முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இதைத்தொடர்ந்து துருக்கி, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

billionaire

இந்தியாவிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 7000 பெரும் பணக்காரர்கள் வெளியேறியுள்ளனர். இது இந்த ஆண்டு மட்டும் நடந்த புதிய விஷயம் இல்லை. வருடா வருடம் பணக்காரர்கள் வெளியேறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். கடந்த 2015ஆம் ஆண்டு 4000 பேரும், 2016ல் 6000 பேரும் (இது அதற்கு முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 51 சதவீதம் அதிகம்)  2017ல் 7000 பேரும் வெளியேறியுள்ளனர். (2016 ஐ ஒப்பிடும்பொழுது இது 16சதவீதம் அதிகம்.) இதற்கெல்லாம் காரணம் விஜய் மல்லையா போல கடன் வாங்கி வெளிநாட்டிற்கு ஓடியவர்கள் அல்ல. இதற்கு வேறு காரணம் உண்டு...

காரணம் என்னவென்றால் அவர்களுக்கு  நாட்டின் வெப்பநிலை, சொகுசு, பொழுதுபோக்குகள் போன்றவை போதாமல் வெளிநாட்டிற்கு செல்பவர்கள். இவர்களில் பலரும் அவரவர் நாடு வளர்ச்சியடைந்த பின்பு திரும்பி விடுவார்கள். இதில் என்ன கொடுமையான விஷயம் என்றால் நாட்டின் பாதி வளத்தைப்  பயன்படுத்தியவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள். 

billionaire

இதனால்தான் அமெரிக்கா H1B விசாவிற்கான கட்டுப்பாடுகளை கடுமைப்படுத்தியுள்ளது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன. இப்படி வெளியேறுபவர்கள் பெரும்பாலும்  ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரகம்  ஆகிய நாடுகளுக்கே செல்கின்றனர். அதிலும் ஆஸ்திரேலியாதான் முதலிடத்தில் உள்ளது. புதிதாக உருவாகும் பணக்காரர்களின் எண்ணிக்கை வெளியேறுபவர்களைவிட அதிகமாக இருப்பதால் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு இந்த வெளியேற்றத்தால் ஆபத்தில்லை என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.