Skip to main content

"மன்னித்து விடு மகளே!" -ஒரு தந்தையின் கதறல்!

Published on 30/03/2019 | Edited on 31/03/2019

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்னமும் குற்றவாளிகள் பிடிபடவில்லை.  சம்பவம் நடந்து 6 நாட்களாகிவிட்டன. ஆனால், இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறோம் எனச் சொல்கிறது இந்த அரசாங்கம். இந்த நிலையில் வேறொரு பெண் குழந்தையின் தந்தை நமக்கு கடிதம் எழுதி  அனுப்பியிருக்கிறார். சோகம், ஆற்றாமையுடன்,  எரிமலையாய் வெடித்து வெளிப்பட்டிருக்கின்றன வார்த்தைகள். கோவையில் இறந்த அச்சிறுமிக்கு அவர் எழுதியிருக்கும்  கடிதம் இதோ;

 

I'm sorry my child

 

முதலில், இப்படி ஒரு கடிதம் எழுதும் என்னை மன்னித்துவிடு மகளே! எழுதும்போதே பேனா நடுங்குகிறது. மனதில் ஏதோ ஒருவித வெறுமை இழையோடுகிறது. உன்னைக் காப்பாற்ற முடியாத ஊரில்தான் நானும் வாழ்கிறேன் என்பதில் வெட்கப்படுகிறேன். ஊடகங்களில் பார்த்த உன் புகைப்படம் இன்னும் என் கண்ணைவிட்டு மறைய மறுக்கிறது. உன் தாயின் கதறல் இன்னும் என் செவிப்பறையை அறைந்து கொண்டிருக்கிறது. 
 

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நீ, 6 வயதிலேயே இத்தனை கொடூர வேதனையை அனுபவித்து மாண்டுபோனாய். உன் கதறல் இந்தக் காற்றோடு கலந்திருக்கும் தானே? இங்கே எல்லோரும் ஓட்டுக்காக ஓடியாடிக் கொண்டிருக்கும்போது,  உன் ஓலம் எதுவும் யாருடைய காதிலும் விழவில்லை என்பது வேதனையாக இருக்கிறது மகளே!.
 

சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு,  மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சாவகாசமாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்திச் சென்றிருக்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணம்,  சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லை என்பதுதான்.  அதனால்தான், துப்புத் துலக்க முடியவில்லையாம். துப்பு தெரிந்தால் தகவல் கொடுங்கள் என்று நோட்டீஸூம் ஒட்டிச் சென்றிருக்கின்றனர்.
 

உன்னைக் கொடூரமாக கொன்றவன் என்ன வேறு கிரகத்தில் இருந்தா வந்திருப்பான்?  இல்லை..  குற்றத்தைச் செய்துவிட்டு வேற்று கிரகத்திற்கா தப்பி பறந்திருப்பான்? பிரேத பரிசோதனை அறிக்கை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாய் எனச் சொல்கிறது. காவல் துறையும் கண்ணா மூச்சி ஆடி வருகிறது மகளே!  கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலைச் சந்திக்கும் கமல்ஹாசன் வந்து உன் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆளும் அரசாங்கமும் மற்ற கட்சிக்காரர்களும் உன் விஷயத்தைக் கண்டு கொள்ளவில்லை. ஓட்டு வேட்டையில் இருப்பதால், உன் மரணம் ஒரு பொருட்டாக அவர்களுக்குத் தெரியவில்லை மகளே!. 
 

கடந்த ஆண்டு காஷ்மீரில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமி உன்னைப் போலவே, கொடூரமாக வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொலை செய்யப்பட்டாள். அப்போது நாடே அதிர்ந்தது;  கொந்தளித்தது.  அதே ஆதிக்க சாதியில் நீயும் பிறந்திருந்தால் இந்நேரம் நாடே கொந்தளித்திருக்கும். தேசிய ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் உனக்காக விவாதம் நடந்திருக்கும்.  

 

இப்படிப்பட்ட பூமியில் தான் நானும் உலவிக் கொண்டிருக்கிறேன். எனக்கும் உன் வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது மகளே! மனிதர்கள் உருவில் மிருகங்களும் வாழும்  இக்கொடிய உலகில்,  அவளை நான்  காப்பாற்ற வேண்டும் என்று பதைபதைப்புடன் இருக்கிறேன் மகளே!
மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்! என்னை மன்னித்துவிடு மகளே!.


கடிதம் எழுதிய அத்தந்தையைப் போலவே, பெண் குழந்தையைப் பெற்ற அனைவரும்  பதற்றத்தோடு வாழவேண்டிய நிலையில் இருக்கிறது இந்நாடு!.

 

 

 

Next Story

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; கோவையில் பரபரப்பு 

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
teacher misbehaving with schoolgirls

கோவை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், பால்ராஜ் என்பவர் நூலக பொறுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அப்பள்ளியில் பயின்று வரும் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நாளாக நாளாக பால்ராஜின் தொந்தரவு அதிகரிக்க, ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் இது சம்பந்தமான புகார் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் சென்றுள்ளது. 

உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பால்ராஜ் மேலும் இரு மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தை நல அதிகாரிகள் ஆர்.எஸ்.புரம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

'கோவையில் திருடர்கள்... விருதுநகரில் விஐபிக்கள்...' - பகீர் கிளப்பும் முகமூடி கொள்ளை கும்பல்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
 'We are the owner... we are the thief...'- Club is also a masked bandit

கோவையில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் முகமூடி அணிந்து கொண்டு 4 நபர்கள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறை இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் தமிழகம் முழுவதும் ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்தது தெரிய வந்துள்ளது.

கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளையில் ஈடுபட்டுள்ள இந்த கும்பல் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை மாநகரில் மட்டும் 18 கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 68 மேற்பட்ட ஹவுஸ் பிரேக்கிங் (வீடு உடைப்பு)  மற்றும் ராபரியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொள்ளையை அரங்கேற்றிய இந்த கும்பல் விருதுநகரில் நான்கு கோடி ரூபாய்க்கு ஸ்பின்னிங் மில் வாங்கி  நடத்தி விஐபிக்களாக  சுற்றிவந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மூன்று மாதங்களாக நடைபெற்ற தீவிர தேர்தல் வேட்டைக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு கும்பல் பிடிக்கப்பட்டுள்ளது. மூர்த்திக்கு ராட் மேன் என்ற பெயரும் உள்ளதாம். கொள்ளையடிக்க வீட்டின் கதவுகளை உடைக்க ராட் பயன்படுத்தியதால் மூர்த்திக்கு ராட் மேன் என பெயர் வந்துள்ளது என மூர்த்தியை கைது செய்துள்ள ராஜபாளையம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  மேலும் பலரைத்  தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.