Skip to main content

பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை: ‘புது ராகம் படைப்பதாலே நீ என்றும் இளைஞனே’ இளையராஜா!

 

Ilayaraja Birthday Special article

 

தற்கால தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன், அனிருத், G.V.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், இமான், சாம் சிஎஸ் என எத்தனை பேர் கோலோச்சினாலும் இதற்கு முன் கோலோச்சி இருந்தாலும் வலி கொண்ட மனதை ஆற்றுப்படுத்த மக்கள் எப்போதும் தேடும் குரல் இளையராவினுடையதே. இசையில் புதுவித தொழில்நுட்பங்கள் எத்தனை வந்தாலும் தற்போதைய தமிழ்சினிமா பாடல்களில் பெரும்பாலும் இளையராஜா இசையின் ஹைப்ரிட்கள் அதிகம் கலந்திருக்கும். அதை பல இசையமைப்பாளர்கள் பெருமையாக ஒப்புக்கொண்ட சம்பவங்களும் உள்ளது. அத்தனை தமிழர்களையும் இசையால் கட்டிப்போட்ட பெரும் கலைஞன். அத்தகைய இசைப் பேரரசனின் 80 ஆவது பிறந்த நாள் இன்று.

 

1943-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இசை மீது கொண்ட ஆர்வத்தாலும் அண்ணன் பாவலரின் தாக்கத்தாலும் ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொண்டு, பல மேடை நாடகங்களுக்கும் கம்யூனிச சிந்தனை நாடகங்களுக்கும் இசையமைத்த அனுபவத்துடன் 1969 சமயத்தில் சினிமாவில் இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார் அந்த இளையராஜா. தமிழ் சினிமாவில் சாதிக்க நினைக்கும் அத்தனை திறமையுள்ள எல்லா கலைஞனுக்கும் கிடைக்கும் தொடர் தோல்வி, அவமானம் என சகல மரியாதையோடு தமிழ் சினிமா இவரையும் வரவேற்றது. வெறும் நாட்டுப்புற மெட்டும், ஹார்மோனியம் வாசிக்கத் தெரியும் என்பதும் மட்டும் போதாது என்று அன்றைய திரையுலகம் அவருக்கு உணர்த்த முற்பட்டது. பிறகு தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் முறையாகப் பியானோ மற்றும் கிட்டார் கற்றுக்கொண்டு இசைக்குழுக்களில் சேர்ந்து கிட்டார் வாசிக்கத் தொடங்கினார். இப்படி தனக்கான தேடுதலின் தடுப்புச் சுவராக வந்த எல்லாவற்றையும் உடைத்து தாண்டி தனது முதல் படமான 'அன்னக்கிளி' என்ற படத்தில் இசையமைக்க ஒப்புதலானார்.

 

அந்த முதல் படத்தின் பாடல் பதிவு பற்றி சொல்லவேண்டும். எந்த ஒரு கலைஞனும் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்திருக்க முடியாது. அன்னக்கிளி படத்தில் அவருக்கு வாய்ப்பளித்தவர் பஞ்சுஅருணாச்சலம். தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியவர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் இப்படி பல முகங்களைக் கொண்டவர். அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் தம்பிதான் என்றாலும் 'இளையராஜா பார்க்க, விஷயம் தெரியாத சின்னப் பையன் போல் உள்ளாரே, இவரை நம்பி வாய்ப்பை கொடுக்கலாமா?' என சந்தேகத்திலேயே இருந்தார். ஆனால் ராஜாவோ சினிமாவில் சாதிக்கவேண்டுமென தீவிரமாக இருந்த சமயமது. ''சரி முதலில் ஒரு ரிகர்சல் போட்டுக் காட்டு, ஒரு டம்மி ரெக்கார்டிங் போட்டுப்பார்க்கலாம், அதன் பின் சரிப்பட்டு வருமா வராதா என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்" என்று கட்டளையாகவே ராஜாவின் முன் வைத்தார் அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர்.

 

Ilayaraja Birthday Special article

 

ராஜா அப்பொழுது சாந்தோமில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். தினமும் பல மெட்டுக்களை வாயில் முணுமுணுத்தபடி பீச் ரோட்டில் காந்திசிலை வரை நடத்து போகும் பழக்கம் அவருக்கு இருந்தது. இசையமைக்கும் முன்பே தனது வாயில் அன்னக்கிளி படத்தில் ''அன்னக்கிளி என்னை தேடுதே'' பாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னே வரும் ஹம்மிங்கை எத்தனை முறை பாடியிருப்பார் என்று கணக்கே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது தயாரிப்பாளர் கேட்டுவிட்டதால் ரிகர்சல் செய்து காட்டியாக வேண்டும். எனவே கவிஞர் கண்ணதாசன் வீட்டின் அருகே இருந்த பாலாஜி திருமண மண்டபத்தில் ஆர்கெஸ்ட்ரா மற்றும் பாடகர்களை ஒன்று திரட்ட திட்டமிட்டார். ஆனால் அதற்கு முன்பு தனியாக அமர்ந்து அந்தப் படத்தின் இசைக்காக நோட்ஸுகளை வாசித்து எழுதத் தொடங்கினார். சரி நோட்ஸ் எல்லாம் எழுதியாச்சு... ரெக்கார்டிங்க்கு முன்னமே ''அன்னக்கிளி என்ன தேடுதே'' பாடலையும் ''மச்சானா  பார்த்தீங்களா'' பாடலையும் தயாரிப்பாளர் முன்னிலையில் ஆர்கெஸ்ட்ராவுடன் வாசித்துக் காமிக்க ஏற்பாடு செய்தார். எந்தவொரு மின்னணு கருவிகள் எதுவுமில்லாமல் ஒரு இசைக்கருவியால் மைக் இல்லாமல்  எவ்வளவு ஒலி வருமோ, அந்த ஒலி அளவில் ''அன்னக்கிளி என்ன தேடுதே'' பாடலை பாடகி ஜானகி அவர்களை வைத்துப் பாடவைத்தார். இந்த ஒத்திகையைக் கேட்ட அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர் தரப்பு மிகவும் பூரிப்படைந்து அதன்பிறகே முழுவாய்ப்பையும் இளையராஜா பக்கம் தந்தது.

 

அதன் பிறகு தனது முதல் பாடலை ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்தார். பாடல் பதிவின் முதல் டேக்கிற்குப் பிறகு, தான் இசையமைத்து ரெக்கார்ட் ஆன அந்த முதல் பாடலை கேட்க ரொம்ப ஆர்வமாக இருந்தார் இளையராஜா. ஆர்வ மிகுதியால் ஏவிஎம் சம்பத்திடம் தனது பாடல் பதிவை கேட்கவேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் அந்த முதல் டேக்கை பிளே பண்ணிப் பார்த்தபொழுது தொழில்நுட்பக் கோளாறோ என்னவோ தெரியவில்லை அதில் எதுவுமே பதிவாகவில்லை. எப்படி இருந்திருக்கும் ஒரு முதல் பட இசையமைப்பாளரின் .மனநிலை? ஆனால் அதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திரும்பவும் பதிவு செய்து காட்டினார். அதன் பிறகு அந்தப் படமும் முழுதாக முடிந்து திரையில் வெளியானது. திரையில் அன்று ''அன்னக்கிளி என்ன தேடுதே'' என ஆரம்பித்த அவரது இசை பயணம் இன்னும் தேடுதல்களை நிறுத்ததியபாடில்லை.

 

Ilayaraja Birthday Special article

 

அந்த முதல் படத்தில் தொடங்கி, தற்போது ஆயிரத்து நூறு திரைப்படங்களைத் தொட்டுவிட்டது அவரது இசை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தகுந்தாற்போல அத்தனை இசை புதுமைகளையும் தன் ரசிகர்களுக்கு அள்ளித் தெளித்தார். 70,80களில் அவருடைய பாடல்களுக்காகவே படங்கள் ஓடின. 16 வயதினிலே படத்திலே ''சோளம் வெதைக்கையிலே'' என்ற பாடலை தானே பாடினார். அதுவே அவர் பாடிய முதல் பாடல். அதன் பிறகு அவரது இசை மட்டுமல்ல அவரது குரலில் இருக்கும் காந்தமும் மக்களை கட்டிப்போட்டது. எல்லா இடத்திலும் ராஜா பாடல்களே... மூன்று நேர உணவு போல ராஜாவின் இசையும் மக்களின் தினசரி அங்கமானது. அதேபோல் அன்று முதல் இன்று வரை காதல் செய்யும் இளவட்டங்கள், காதலில் தோற்ற இளவட்டங்கள் என எல்லாருக்குமே ஒரே தீர்வு இளையராஜாவின் பாட்டுக்கள்தான். இப்படி நாட்கள் உருண்டோடி இன்று 2023ல் நிற்கிறோம். இன்றும் அவர் பாட்டு இல்லாத இடம் இல்லை. காலத்தால் அழிக்கமுடியாதது அவரும் அவரது இசையும்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !